சென்னை, மே 3- பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. பள்ளிகள் மூலம் படிக்கும் சுமார் 6 லட்சம் மாணவ-மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காலத்துக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் கரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது. இருப்பினும் அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட வகுப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதால், கடந்த மாதம் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நாளை மறுநாள் (5.5.2022) தொடங்குகிறது. பள்ளிகள் மூலம் இந்த தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மே 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும். அதில், பள்ளிகள் மூலம் சுமார் 8 லட்சம் மாணவ மாணவியரும் பங்கேற்க உள்ளனர். மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இருப்பினும், தேர்வு நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் பேரில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 3500 தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டு, 1000 பறக்கும் படைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மய்யங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டால் பாதிப்பு ஏற் படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட் டுள்ளன. கரோனா பாதிப்பு தவிர்க்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெயில் பாதிப்பில் இருந்து மாணவ மாணவியர் பாதிக்காமல் இருக்க உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment