வழி பிறக்கிறது: சென்னை - மாமல்லபுரம் 4 வழிச்சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

வழி பிறக்கிறது: சென்னை - மாமல்லபுரம் 4 வழிச்சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மே 2- சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை, ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என அழைக்கப்படும் என்று முதல மைச்சர் அறிவித்தார். திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங் களில்ரூ.2,124 கோடியில் 255 கி.மீ.இருவழிச்சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் 75ஆவது ஆண்டு பவள விழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று (1.4.2022) நடந்தது. இதில் பங்கேற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், பவள விழா நினைவுத்தூணை திறந்து வைத்து, விழா மலரையும், முதல மைச்சரின் சாலை மேம்பாட்டு திட்ட இலச்சினையையும் வெளியிட்டார்.

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.46.54 கோடியில் மேம் பாலம், மதுரை கோரிப்பாளை யத்தில் ரூ.199.12 கோடியில் மேம் பாலம், கன்னியாகுமரியில் திருவள் ளுவர் சிலை - விவேகானந்தர் மண் டபம் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடை மேம் பாலம் ஆகியவற்றுக்கு முதல மைச்சர் அடிக்கல் நாட்டினார். திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ரூ.2,124 கோடி யில் 255 கி.மீ. இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் 32 சாலைப் பணிகளையும் முதல மைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதலமைச்சர் பேசிய தாவது: "மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் பலனளிப்பது நெடுஞ்சாலைத்துறை. சரியான, அழகான, தரமான சாலைகள் அமைத்தாலே மக்களிடம் நல்ல பெயரை வாங் கிவிட முடியும். சாலை சரியில்லை என்றால் முதலில் அரசைத்தான் திட்டுவார்கள்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பில் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்ற தற்கு முழுமுதல் காரணம் நெடுஞ்சாலைத்துறை தான். நாட்டிலேயே முதல் ஆராய்ச்சி நிலையமான தமிழ் நாடு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உலகத்தரத்தில் மாற்ற வேண்டும். போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க சென்னையில் பிரமாண்டமான அண்ணா மேம் பாலத்தை அமைத்தவர் மேனாள் முதலமைச்சர் கலைஞர். இந்த பாலத்தை முன்னோடியாக வைத்து   கோவை, திருநெல்வேலியில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

திமுக ஆட்சியில்தான் ஒரே கட்டமாக 106 பாலங்கள் ரூ.307 கோடியில், 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. திமுக ஆட்சியில்தான் 10 ஆயிரம் சாலைப் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டனர். சாலைகள் அமைப்பதில் நிலம் கையகப்படுத்துவதுதான் சிக்கலாக உள்ளது. இதற்காக, 5 சிறப்பு டிஆர்ஓக்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இனி நிலம் கையகப்படுத் துவதில் தாமதம் ஏற்படாது.

தரைப்பாலங்களே இல்லாத மாநிலம்

முதலமைச்சரின் சாலை மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை தரைப்பாலங்களே இல்லாத மாநி லமாக உருவாக்க உள்ளோம். சென்னையில் இருந்து மாமல்ல புரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலை ஞர் கருணாநிதி சாலை’ என்று பெயர் சூட்டப்படும். 59 நகராட்சி களில் புறவழிச்சாலைகள் அமைக் கப்படும். புறவழிச்சாலை பணி களை விரைவாக முடிக்க உத்தர விடப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலு 18 முக்கிய அறிவிப்பு களை வெளியிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் உருவாக்கினால், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு இன்னும் சிறப்பாக அமையும்" 

-இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக அமைச்சர் எ.வ. வேலு பேசும்போது, “1971இல் திமுக ஆட்சியில்தான் நெடுஞ்சாலைத்துறை வெள்ளி விழா நடந் தது. 1997இல் மேனாள் முதல மைச்சர் கலைஞர் தலைமையில் பொன்விழா நடந்தது. தற்போது 2022இல் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் பவளவிழா நடக்கிறது. நூற்றாண்டு விழாவும் இவர் தலைமையில்தான் நடக்கும்” என்றார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப் பிரமணியன், சா.மு.நாசர், நாடா ளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment