பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை அடித்துக் கொன்ற கும்பல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை அடித்துக் கொன்ற கும்பல்!

போபால், மே 4 பலத்த அடியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மத்தியப் பிரதேசத்தில் 2 பழங்குடியினர் மீது, பசுவை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் இருவரையும் அடித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

20 பேர் கொண்ட குழுவினர், அந்த 2 பழங்குடியினரின் வீட்டிற்கும் சென்று அவர்கள் பசுவைக் கொன்றதாக குற்றம் சாட்டினர். பின்னர் அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

பின்னர் இருவரையும் சாகும்வரை அடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பலத்த அடியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர கொலை நிகழ்வு குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது,

அந்த கும்பல் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.குற்றவாளிகளை காவல் குழுக்கள் தேடி வருகின்றன. இரண்டு மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம். பலியானவர்களின் வீட்டில் சுமார் 12 கிலோ இறைச்சி கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த புகார்தாரர் பிரஜேஷ் பாட்டி கூறியதாவது, அந்த கும்பல் பழங்குடியினரான சம்பத் பாட்டி மற்றும் தன்சா ஆகியோரை தடிகளால் கொடூரமாக தாக்கியது. அங்கு சென்றபோது, நானும் தாக்கப்பட்டேன் என்றார். 

இந்த சம்பவத்துடன், பஜ்ரங் தள அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சிலர் கூறினர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங் ககோடியா ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், இந்த கொலை வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மத்தியப் பிரதேசத்தில் தான் அதிகம் பதிவாகியுள்ளன என  தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிப்பதாக அம்மாநில மேனாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவரு மான கமல்நாத் கூறி கண்டனம் தெரிவித்தார்.


No comments:

Post a Comment