நேற்றையத் தொடர்ச்சி...
8.4.2022 அன்று இரவு தஞ்சையில் தங்கினார். மறுநாள் காலை மீண்டும் நடைபயிற்சி மேற்கொண்டார்.
காலை 8.45இலிருந்து 9.45 மணி வரை கழகத் தோழர்கள் சந்தித்து உரையாடி விட்டு, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த பெரியார்- புரா திட்டத்தின் கீழ் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த போது மதியம் 1 ஆகி விட்டது. சிறிது ஓய்வுக்கு பிறகு மாலை 4.30க்கு புறப்பட்டு திருவாரூர் சென்ற போது வழியில் மன்னார்குடி நகரில் மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் கழகத் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு திருவாரூர் பனகல் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிவிட்டு நாகப்பட்டினம் நகர் சென்ற போது இரவு 8 .30 மணி. நாகை அவுரித்திடலில் பிரம்மாண் டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும் தி.மு.க.மாவட்ட கழக செயலாளருமான என்.கவுதமன் தலைமையில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் திரண்டு நின்று வான் வேடிக்கை முழக்கத்துடன் வரவேற்றனர். இரவு கூட்டம் முடிந்து அங்கேயே தங்கிய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழக்கம்போல காலை 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி சென்று விட்டு உணவு முடித்ததும் விடு தலைக்கு அறிக்கை எழுதி தந்தும், கழகத் தோழர்களுடன் கலந்துரையாடியும் நேரம் கடந்து உணவு முடிந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து சீர்காழி நோக்கி புறப்பட்ட போது வான் மழை வரவேற்க வந்து விட்டது. ஆம் சீர்காழி செல்லும் வரையில் மழை பெய்தது. சீர்காழி நகரின் எல்லையில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் கழகத் தோழர்களும் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களும் திரண்டு வந்து வரவேற்பு அளித்து மேடை நோக்கி அழைத்துச் சென்றனர்.
உணவருந்தி முடித்து தூங்கப் போகும் போது மணி இரவு12. ஆம் மறுநாள் தான். ஒவ்வொரு நாளும் இதேபோல் புறப்படுவது ஒரு நாள் எனில் உறங்க செல்வது மறுநாள். காலை 6.30 க்கு எழுந்து மிக உற்சாகமாக 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி, தோழர்கள் சந்திப்பு, மாலை 4.30 க்கு புறப் பட்டு சீர்காழி முதல் கூட்டம், கடலூர் இரண்டாம் கூட்டம். அதை முடித்து புதுச்சேரி சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழக்கம் போல பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி உணவை முடித்து தங்கும் விடுதி செல்லும் போது மறுநாள் அதிகாலை 12.30. அடுத்த நாள் புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, மேனாள் அமைச்சர் விசுவநாதன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அணி அணியாக வந்து சந்தித்த வண்ணம் இருந்தனர். மாலை புதுச்சேரி சுதேசி ஆலை முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய ஆசிரியர் அவர்கள் இரண்டாவது கூட்டம் நடந்த திண்டிவனம் சென்றார். அங்கே தமிழர் தலைவர் வந்து இறங்கும் போது கழகத் தோழர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி வரவேற்றது ஒரு பக்கம் என்றால் தலைவரை காண உரையினை கேட்க கட்டுக்கடங்காத கூட்டம் மறுபக்கம்.
இதில் கூடுதலாக ஒரு சிறப்பு என்னவென்றால் ஆசிரி யரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்றது. அவருடன் தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் து.இரவிக் குமார் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரவே பயணம் செய்த ஆசிரியர் அய்யா அவர்கள் இரவு 1 மணிக்கு தனது சென்னை இல்லம் சென்று சேர்ந்தார்.
வழக்கம் போல காலை அலுவலகம் வந்து தனது இயல்பான பணிகளை செய்து முடித்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இரண்டு கூட்டங்களில் பேசி விட்டு இரவு சென்னை சென்று தாங்கினார். மறுநாள் ஓய்வு. எதற்கு ? பரப்புரை பயணத்திற்கு! ஆசிரியருக்கு அல்ல!! அவர் தனது அலுவலக பணிகளில் ஈடுபட்டு அதை முடித்து இரவு தங்கி மறுநாள் மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை சென்றார்கள். அங்கே நடந்த பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு நான் ஒரு பகுத்தறிவுவாதி.ஆசிரியர் அய்யா அவர்களின் இந்த பரப்புரை பயணம் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும் அரணாக விளங்கும் என்று பிரகடனப்படுத்தினார்.
அங்கிருந்து புறப்பட்டு இரண்டாவது கூட்டம் கல்லக் குறிச்சியில் நடைபெற்றது. அதை முடித்து இரவு 1.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வந்தடைந்தார்கள். அன்றைய நாள் மட்டும் ஆசிரியர் பயணம் செய்த தூரம் 410 கி.மீ.
அதிகாலை 1.30 க்கு வந்து உறங்கினார். காலை 6 மணிக்கு எழுந்து தயாராகி வழமைபோல் நடைப்பயிற்சி சென்று விட்டார்.
அன்று மாலை முதல் கூட்டம் பெரம்பலூரில். ஆம். மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் அவரது அலுவலகத்தில் தனது தோழர்கள் புடைசூழ ஆசிரியர் அய்யா அவர்களை வரவேற்று சிறு விருந்து அளித்து மகிழ்ந்தார். ஆசிரியர் அய்யா அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோதே தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.கழகத்தின் செயலா ளருமான ஆசிரியர் அவர்களால் நமது வீட்டுப் பிள்ளை என்று உரிமையோடு அழைக்கப்படும் அண்ணன் சா.சி. சிவசங்கர் வந்து விட்டார். ஆசிரியர் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. பிறகு ஆசிரியரோடு அவரது வாகனத்தி லேயே இருவரும் உடனிருந்து பேசிக்கொண்டு மேடைக்கு வந்தனர். பெரம்பலூர் நிகழ்ச்சியில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா அவர்களின் பேச்சு தனித் தன்மையாக அமைந்தது.
அதை முடித்து கொண்டு இரண்டாவது கூட்டமான அரியலூர் சென்ற ஆசிரியர் அவர்களுடன் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களும் உடன் பயணித்து வந்தார். அங்கே நடந்த பரப்புரை கூட்டம் முடிந்ததும் அண்மையில் மறைந்த பெரம்பலூர் மாவட்ட மேனாள் தலைவர் ஆறு முகம் அவர்களின் மகளின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து விடைபெற்று திருச்சி நோக்கி பயணமானார்கள்.
பெரியார் உலகம் பணிகள் ஆய்வு
மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டதோடு நடைபயிற்சியையும் முடித்து கொண்டு மீண்டும் பெரியார் மாளிகை வந்து தயாராகி 11 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திண்டுக்கல் மாவட்ட மேனாள் செயலாளர் கிருட்டிண மூர்த்தி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்ததோடு உடல் நலம் குறித்து பல ஆலோசனைகளை வழங்கினார்.
நகரினுள் நுழைந்த போது திண்டுக்கல்,பழனி ஆகிய மாவட்டங்களின் கழகத் தோழர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மதியம் நமது பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா.கிருட்டிணன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரின் நலம் விசாரித்து அங்கேயே உணவருந்தி விடுதிக்கு வந்து போது மதியம் மணி 3. கழகத் தோழர்களை சந்தித்து மேடைக்கு வந்து உரையாற்றினார். பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இ.பெ.செந்தில்குமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து சரியாக 7.15 மணிக்கு புறப்பட்டு மின்னல் வேகத்திலும் அதி வேகமாக வாகனம் சீறிப்பாய்ந்து திருச்சிக்கு வந்து சேர்ந்தார் ஆசிரியர் அவர்கள்.
அங்கே தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.கழக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச் சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், ம.ம.க.பொதுச்செயலாளரும் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, இ.யூ.முஸ்லீம் லீக் மாநிலத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரகுமான் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்று பெருமைப்படுத்தி உரையாற்றினர்.
மறுநாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு கோவை நோக்கி பயணமானார். செல்லும் வழியில் கரூரில் மாவட்ட தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, சே.அன்பு உள்ளிட்ட தோழர்கள் ஆசிரியருக்கு வரவேற்பு அளித்தனர். அய்ந்து நிமிடம் இடைவெளியில் ஒரு தேநீர் அருந்தி புறப்பட்ட கழகத்தலைவரை காங்கேயம் நகரில் தாராபுரம் மாவட்ட தலைவர் கனியூர் கிருட்டிணன் தலைமையில் தலைவருக்கு இளைப்பாற்றி கொள்ள இளநீர் வழங்கி வரவேற்றனர்.
மதியம் 1.30 மணிக்கு கோவை சுந்தராபுரம் சென்ற ஆசிரியர் அவர்கள் அண்மையில் மறைந்த மாவட்ட தலை வர் ம.சந்திரசேகரனின் தந்தையார் மருதாசலம் படத்தினை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு அறையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்து மாலை சங்கம் வீதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசினார். பேசி 35 நிமிடங்கள் ஆன நிலையில் மழை பெய்ய தொடங்கியது. இருப்பினும் மக்கள் கலையாமல் இருந்து தலைவரின் உரை கேட்டு தெளிவு பெற்றனர். பிறகு அங் கிருந்து புறப்பட்டு இரண்டாவது கூட்டமான மேட்டுப் பாளையம் சென்று பேசி முடித்து நகர செயலாளர் சந்திரன் இல்லத்தில் உணவருந்தி இரவே நீலமலை மாவட்டம் குன்னூர் நோக்கி பயணமானார். இரவு 12.30 மணிக்கு சென்றடைந்த தலைவரை காலையில் உள்ளூர் தி.மு.கழக தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்தார்.
மாலை 4.30 மணிக்கு குன்னூர் பெரியார் திடலில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசினார். மாவட்ட தி.மு.கழக செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதமான பனிக்காற்றும், மேக மூட்டமும் சற்று தலைவரை ஆசுவாசப்படுத்தியது.
அன்றிரவு 8 மணியளவில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய தலைவர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி இல்லத்தில் சிற்றுண்டி முடித்து புறப்பட்டார். திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் மற்றும் த.பெ.தி.க.தோழர்கள், மகளிரணியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று வழியனுப்பினர். இரவு 12.30 க்கு தத்துவ தலைவர் தந்தை பெரியாரை இந்த நானிலத்திற்கு தந்திட்ட ஈரோடு வந்திறங்கினார்.
தந்தை பெரியாரின் பேரன் மேனாள் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வரவேற்று மகிழ்ந்த துடன் மேடையில் பேசும்போதும் அய்யா பெரியாரின் வாரிசு ஆசிரியர் தான் என்றே பிரகடனப்படுத்தினார். பிறகு இரண்டாவது கூட்டமான கரூரில் நடைபெற்ற பரப்புரையில் பங்கேற்று பேசி முடித்து இரவு தங்கும் போது மணி 11.30.
படிப்பகம் பார்வையிடல்
- கழகக் கொடி ஏற்றுதல்
மறுநாள் மாலை 4 மணிக்கு புறப்பட்டு பரமத்தி வேலூர் கூட்டத்திற்கு போகும் முன் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் நூறு வயதை தொடப்போகும் இளைஞர் அய்யா க.சண்முகம் அவர்களை அவரது பொத்தனூர் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்ததோடு அங்கே அமையவுள்ள படிப்பகத்தை பார்வையிட்டு முதல் கூட்டமான பரமத்திவேலூர் வந்தார்கள். அங்கு ஏராளமான பொது மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர் களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதை முடித்து இரவு 8.30 மணிக்கு சேலம் வருகை தந்த தலைவரை மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன் மற்றும் தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டு வரவேற்றனர். சேலம் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான மாநாடு போல நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் கழகத் தலைவர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இராஜேந்திரன் மற்றும் தோழமைக் கட்சியினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மறுநாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு ஓமலூரில் கழகக் கொடியை ஏற்றி வைத்து, பிறகு தருமபுரி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழக கொடியினையும் பரப்புரை பெரும் பயண சிறப்பு கல்வெட்டையும் திறந்து வைத்தார். பிறகு கிருட்டிணகிரி புறவழிச்சாலையில் கழகத் தோழர் களும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும் திரண்டு நின்று கழகத் தலைவரை வரவேற்றனர்.
மதியம் 1 மணிக்கு ஒசூர் தங்கும் விடுதி வந்தடைந்து அங்கு சந்திக்க வந்த பல்வேறு கட்சியினரிடம் உரையாடி விடைபெற்று ஓய்வெடுத்து மாலை 5 மணிக்கு மேடை நோக்கி புறப்பட்டு செல்லும் வழியில் கூட்டத்திற்கு முதல் நாள் - காலமான மேனாள் கிருட்டினகிரி மாவட்ட தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மு.துக்காராம் அவர்களின் இல்லம் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். பிறகு ஒசூர் ராம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காவிக்கூட்டம் காவல்துறையிடம் புகார் அளித்திருந்த நிலையில் நம் கழகத் தலைவரோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
உங்கள்வீட்டுப்
பிள்ளைகளுக்காகவுமே!
நீங்கள் எங்களை விரோதிகளாக பார்த்தாலும் நாங்கள் உங்களை அப்படி பார்ப்பதில்லை. ஏதோ சில எதிர்பார்ப்பு களுக்காக நீங்கள் ஆர்.எஸ். எஸ் மற்றும் பி.ஜே.பி. ஆகிய அமைப்புகளில் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரிகிறது. இது ஏதோ எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டுமா பேசுகி றோம்? உங்கள் வீட்டு பிள்ளைகளுக்காகவும் தான் பேசுகி றோம். நன்றாக சிந்திக்க வேண்டும் என்று பேசினார். (காவிக் கூட்டத்தினர் ஒரு இருபதுக்கும் மேற்பட்டோர்) இரண்டாவது கூட்டம் தருமபுரி குமாரசாமி பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஆசிரியர் சிறப்பித்தார்.
மறுநாள் காலை தருமபுரி மாவட்ட பொதுக்குழு உறுப் பினர் கடைமடை தீர்த்தகிரி மகன் வழக்குரைஞர் சோழ வேந்தன் கட்டியுள்ள புதிய இல்லத்தை அறிமுகம் செய்து உரையாற்றிய பின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் தருமபுரி மாவட்ட தி.மு.க.செயலாளருமான முது பெரும் பெரியார் பெருந்தொண்டருமான ஆர்.சின்னச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மலைக்க வைத்த
இருசக்கர வாகனப் பேரணி
திருப்பத்தூர் பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு 6 மணி யளவில் வந்து சேர்ந்தார். அங்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடிகள் கட்டப்பட்டு பெரிய ஊர்வலத்தையே நடத்தி தமிழர் தலைவரை வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர்.
ஒரு வட்டார மாநாடு போல ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தலைவர் உரையாற்றி அடுத்த ஊரான வேலூர் மாநகர் வந்தடைந்தார். இரவு கூட்டம் முடிந்து வழக்கம்போல ஆசிரியர் மீது என்றென்றும் அன்பு மாறாமல் நட்புறவோடு இருக்கும் வேலூர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சகி அவர்களின் இல்லத்தில் இரவு உணவை முடித்து தங்கும் விடுதி வந்து சேர்ந்தார்.
மறுநாள் மாலை முதல் கூட்டம் திருத்தணி நகர் நோக்கி பயணமானார் தலைவர். திருத்தணி எல்லையில் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடையில் கழகத் தலைவர் ஏறும் போது இந்திய மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆசிரியர் அய்யா அவர் களை அன்பொழுக வரவேற்று சிறப்பான முறையில் கருத்து ரையாற்றினார்.
அடுத்து அரக்கோணம் நோக்கி சென்ற கழகத் தலை வரை அரக்கோணம் எல்லையில் மண்டல தலைவர் பு.எல் லப்பன் தலைமையில் தி.மு.க.வினரும் கழகத் தோழர்களும் பறையிசை முழங்க தீப்பந்தாட்டத்துடன் எழுச்சியான வரவேற்பு அளித்து அழைத்து சென்றனர். கூட்டம் முடிந்து இரவு சென்னை சென்றடைந்த போது இரவு மணி 2 ஆனது.
நிறைவு விழா சென்னையில் பெரியார் திடலில் 25-04-2022 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், திராவிட இயக்க போர்வாள் மானமிகு வைகோ அவர்களும் பங்கேற்று ஆசிரியரின் அய ராத பணியினை பாராட்டி உற்சாகப்படுத்தி உரையாற்றினர்.
முத்தாய்ப்பாக முதலமைச்சர் ஒன்று சொன்னார்! திராவிடர் கழக தோழர்களே உங்கள் முயற்சி வீண்போகாது என்பதற்கு ஒரு சாட்சி தான் இப்போது நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி என்று!!
நம் தலைவரின் மிகப்பெரிய உழைப்பிற்கு இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும்!!
கழகத் தலைவர் பயணத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், வாழ்விணையேற்பு நடத்தியது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களை அவர்களது இல்லம் சென்று நலம் விசாரித்து, அண்மையில் மறைந்த மூத்த தோழர்களின் நினைவேந்தல் நிகழ்வு, இரண்டு ஊர்களில் புதிய இல்ல அறிமுக விழா, கழகக் கொடிகள் ஏற்றி வைத்தது, கல்வெட்டுக்களை திறந்து வைத்தது என அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.
மூன்று வித பருவ நிலைகளை எதிர்கொண்டு மூன்று மாநில எல்லைகளை தொட்ட சாதனைப் பயணம்
இவ்வளவு பெரிய நீண்ட பயணத்தில் கொளுத்தும் வெயில் கோடை மழை, குளிர்ந்த பனி என மூன்று வித பருவநிலை மாற்றத்தையும் சந்தித்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என மூன்று மாநில எல்லைவரை பயணம் ஆக மொத்தம் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்று அய்ந்து வகை நிலப்பரப்பிலும் தனது கொள்கை தேரை ஓட்டி முடித்து வரலாற்று சாதனை படைத்தார் கழகத் தலைவர் ஆசிரியர்.
பரப்புரை கூட்டம் நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு இருந்ததுதான் தனிச்சிறப்பு என நம் தோழர்களின் உழைப்பிற்கு வார்த்தைகளால் விருது வழங்கினார் ஆசிரியர்..
பயணம் செய்த தூரம் 4700 கி.மீ.
பயணம் செய்த நாட்கள் 21
பங்கேற்ற பொதுக்கூட்டங்கள் 40
மாநிலங்கள் 2
மாவட்டங்கள் 38
அப்பப்பா..அப்பப்பா.. என்ன இது
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய அற்புத சாதனை!!
வியப்பிலும் வியப்பாக உள்ளது
ஆம்! வியப்பின் மறுபெயர் வீரமணி
என்பது எவ்வளவு சாலச்சிறந்த சொல்!!
வாழ்க எம் தலைவர் ஆசிரியர்!!
No comments:
Post a Comment