சென்னை, மே 6 தமிழ்நாடு, புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று (5.5.2022) துவங்கியது. மொத்தம் 3,119 மய்யங்களில் நடக்கும் தேர்வில், 8.37 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். முறைகேடுகளை தடுக்க, 37 அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழு; 4,291 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று துவங்கியது. முதல் நாளான நேற்று மொழிப் பாடம்; 9ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வுகள் நடக்கின்றன. அடுத்து வரும் நாட்களில், மற்ற பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில், பிளஸ் 2வில், 7,506 பள்ளிகளைச் சேர்ந்த, 4.31 லட்சம் மாணவியர் உட்பட, 8.37 லட்சம் பேர் பங்கேற்றனர். சிறைக் கைதிகள் 73 பேர், 28 ஆயிரம் தனித் தேர்வர்களும் தேர்வு எழுதினர். தேர்வுக்கான வினாத் தாள்கள், அரசு தேர்வுத் துறையால் அந்தந்த மாவட்டங் களுக்கு, முன்கூட்டியே அனுப்பப்பட்டன.
தேர்வுக்கு முன் வினாத்தாள்கள், 'லீக்' ஆகாமல் தடுக்க, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல், மதியம் 1:15 மணி வரை நடக்கும்.
தேர்வரின் விவரங்கள் பதிவிடவும், வினாத்தாள் வினியோகத்துக்கும் முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. விடைத்தாளில் விடை எழுத, மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment