சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 101 தீர்மானங்கள் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 101 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை, மே 31, சென்னையில் நிர்பயா நிதி திட்டத்தில் பெண்களுக்கான நடமாடும் கழிப்பறைகள், மாநகராட்சி பள்ளிகளில் கேமரா அமைத்தல் உள்ளிட்ட 101 தீர்மானங்கள் நேற்று (30.5.2022) நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கியமானவை வருமாறு:

* மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக மெரினாவில் உள்ள காந்தி சிலை அவ்வையார் சிலைக்கு அருகில் அமைக்கப்படும்.

* மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் ஆகாய நடைபாதை திட்டத்திற்கு கால நீட்டிப்பு.

* சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு துறை நிதிகளின் மூலமாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படும்.

* சென்னையில் ஸ்பா மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் வழங்கும் விதிகள் மாநகராட்சி முனிசிபல் சட்ட அட்டவணையில் சேர்க்கப்படும்.

* தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி சொத்து வரி பொது சீராய்வை நடைமுறைப்படுத்தப்படும்.

* நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பொது இடங்களில் பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்க அனுமதி.

* சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 779 பேருந்து நிழற்குடைகளை மேம்படுத்தப்படும். 156 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படும்.

* இந்த ஆண்டு பருவ மழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கப்படும். காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் பா.சுப்பராயன் சிலை அமைக்கப்படும். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மேனாள் முதலமைச்சர் கலைஞரின் சிலை அமைத்ததற்கும், பத்மாவதி நகர் பிரதான சாலையை சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்ததற்கும் ஒப்புதல் கோருதல் உள்பட 101 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment