'நீட்' எதிர்ப்பு பிரச்சார பெரும் பயணம் தமிழர் தலைவரின் அளப்பரிய பெரும்பணி -1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

'நீட்' எதிர்ப்பு பிரச்சார பெரும் பயணம் தமிழர் தலைவரின் அளப்பரிய பெரும்பணி -1

தி.என்னாரெசு பிராட்லா

தமிழ்நாடு ஆபத்தான சூழலில் சிக்கித் தவிக்கிறதே என்று அச்சமாக இருந்த நிலையில் நமது கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் ஒரு வலுவான முற்போக்கு இயக்கங்களை ஒன்றிணைத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்திட மக்களை நேரில் சென்று சந்தித்து தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டியெங்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வெற்றிக்கனியை பறித்து வந்தார்.

நாடே நிம்மதி பெருமூச்சு விட்டது!!

அதன்படியே திராவிட மாடல் அரசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இயங்கி வருகிறது. ஆனால் நம் தலைவரோ மூச்சுவிட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டி ருக்கிறார். இதோ புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர். ஆம்! நீட் தேர்வை ரத்து செய்ய , தேசியக் கல்விக் கொள்கை எதிர்த்து, பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டெடுக்க மக்களிடையே தக்கதொரு சமயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த நீண்ட நெடிய பயணத்தை அறிவித்து அதன்படியே ஏப்-3இல் நாகர்கோவிலில் தொடங்கி ஏப்ரல் -25 ஆம் நாள் சென்னையில் நிறைவடைய உள்ள பரப்புரை பெரும் பய ணத்திற்காக 2-4-2022 அதிகாலை 5.30 மணிக்கு சென்னையிலிருந்து  திருச்சி நோக்கி சாலை வழி பயணம் புறப்பட்டார் தமிழர் தலைவர்.  செல்லும் வழியில் திண்டிவனத்தில் மண் டல கழக செயலாளர் தா.இளம்பரிதி தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்து தலைவரின் பயணம் வெற்றி பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப் படுத்தினர். பயணத்தை தொடர்ந்த ஆசிரியர் பகல் 11மணிக்கு  திருச்சி பெரியார் மாளிகை வந்தடைந்தார்கள். பிறகு வழக்கம் போல அலுவலகப் பணிகளை முடித்து இரவு தங்கி மறுநாள் 03-04-2022 காலை 8 மணியளவில் புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி பயணமானார். 

செல்லும் வழியில் மதுரை புறவழிச்சாலை சிவகங்கை சந்திப்பில் மதுரை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமையில் கழகத் தோழர்கள் கையில் கழகக் கொடியுடன் திரண்டு வந்து கழகத் தலைவரை எழுச்சியுடன் வரவேற்றனர்.

மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தின் அருகில் குமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் தலைவரை வரவேற்றனர். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர் வே.செல்வம் உள்ளிட் டோரும் இருந்தனர். தங்கும் விடுதியில் கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கங்களை சார்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாலை நாகர்கோவில் அண்ணா அரங்கம் அருகில் பரப்புரை பெரும் பயண தொடக்க விழா நடைபெற்றது. நாகர் கோவிலின் முதல் மேயராக அண்மையிலே பொறுப்பேற்ற வழக்குரைஞர் ரெ.மகேஷ் மிகச்சிறப்பாக உரையாற்றி இயக்க உணர்வு சற்றும் குறையாமல் எழுச்சியுடன் பேசி இந்த பரப்புரை பெரும் பயணத்தை நான் தொடங்கி வைப்பதாக ஆசிரியர் அறிவித்துள்ளது உள்ளபடியே எனக்கு கிடைத்து அரிய வாய்ப்பாகும் என்று நன்றிபெருக்கோடு பேசி தலைவ ரின் மனம் கவர்ந்தார். பிறகு நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் சிறப்புரையாற்றினார். கூட்டம் முடிந்து இரவே திருநெல்வேலி சென்று தங்கினார்கள்.

மறுநாள் 04-04-2022 அன்று காலை புதிதாக நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன், துணை மேயர்  நெல்லை மத்திய  மாவட்ட  தி.மு.க. செயலாளர் அப்துல் வஹாப், மேனாள் சட்டப்பேரவை தலைவர் ஆவு டையப்பன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து கழகத் தலைவரை சந்தித்து பயணம் வெற்றிகரமாக அமைந் திட வாழ்த்து தெரிவித்தனர்.

மாலை 4.30க்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட ஆசிரியர் அவர்கள் 1 வு மணி நேரம் பயணம் செய்து தென்காசி சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கே நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவ.பத்மநாதன், மேனாள் அமைச்சர் ஆலடி அருணா அவர்களின் மகன் எழில் வாணன், தென்காசி நகர் மன்றத் தலைவர் சாதீர், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்.திருமலைக்குமார் உள் ளிட்டோர் ஆசிரியர் அவர்களை அன்பொழுக வரவேற்று மகிழ்ந்தனர். அந்த மேடையில் 40 நிமிடங்கள் பேசிவிட்டு திருநெல்வேலி வந்து சேர்ந்தார் தமிழர் தலைவர்.

திருநெல்வேலி சிந்து பூந்துறை சந்திப்பில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசி முடித்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு தூத்துக்குடி சென்று தூங்கும்போது நடு இரவு 12.30 மணி. தூத்துக்குடி பெரியார் சிலை அருகில் மாவட்ட தலைவர் பால்.இராசேந்திரம், மாவட்ட செயலாளர் முனிய சாமி, மண்டல தலைவர் சு.காசி உள்ளிட்ட தோழர்கள் தலை வரை வரவேற்றனர். 

மறுநாள் 05-04-2022 காலை கழகத் தோழர்கள், இயக்கத் திற்கு அப்பாற்பட்ட இன உணர்வாளர்கள் தலைவரை சந்தித்து உரையாடினர். அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரம் நகர் விலக்கில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றிய தமிழர் தலைவர் இரவு 7.30 க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சிவகாசி வந்து சேர்ந்தார். விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் வானவில் மணி வரவேற்று அழைத்துச் சென்றனர்.

சிவகாசி பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட மாநக ராட்சியின் முதல் மேயர் திருமதி.சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்த ஆசிரியர் அவர்கள் இருவரையும் கழகத் தலைவர் அவர்கள் நீங்க ளெல்லாம் பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எனவே பேசுங்கள் என்று சொன்னார்கள். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்பு தீர்மானம் இயற்றி சட்டமாக்கிய நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இன்றைய தி.மு.க.ஆட்சி. அந்த ஆட்சியின் தலைவர் திராவிட மாடல் என்று சொல்கிறார் அல்லவா? அதற்கு சாட்சியாய் இன்றைக்கு மேயரும், துணை மேயரும் இருக்கிறார்கள் என்று பாராட்டி பேசினார். இரவு கூட்டம் முடிந்து நடு இரவு 1 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தார்.

மறுநாள் 06-04-2022 காலை வழமைபோல் 6 மணிக்கு எழுந்து தயாராகி தோழர்கள் சந்திப்பு, விடுதலைக்கு அறிக்கை எழுதுதல் என பரபரப்பாக பணியை தொடங்கி காலை 9.30 மணிக்கு தேனி நகரை நோக்கி பயணமானார்.

செல்லும் வழியில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் த.எரிமலை, மன்னர் மன்னன் மற்றும் தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க. பொறுப்பாளர்களும் முதன்மை நிர்வாகிகளும் கழகத் தலைவருக்கு எழுச்சி மிக்க வரவேற்பு அளித்தனர். அடுத்த ஊரான ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு பெரியார் குருதிக்கொடை கழக தலைவர் ஸ்டார் நாகராசன் தலைமையில் தி.மு.க, மற்றும் தோழமை இயக்கங்களின் தொண்டர்கள் ஏராளமானோர் பயனாடை அணிவித்தும் பூங்கொத்துகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.

தேனி நகருக்கு 11.45 மணிக்கு வந்திறங்கிய கழகத் தலைவர் அவர்களை தேனி மாவட்ட தி.க.தலைவர் போடி ச.இரகுநாகநாதன், மாவட்ட செயலாளர் தேனி மணிகண்டன் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்றனர். தேனி புறநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் புதிதாக கட்டியுள்ள பெரியார் வளாகம், பெரியார் இல்லம், மணியம்மையார் இல்லம், கி.வீரமணி மோகனா இல்லம் ஆகிய அய்ந்து இடங்களையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற தேனி மாவட்ட தி.மு.க.செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் போடி.இலட்சுமணன் உள்ளிட்ட தி.மு.க.வினரும், ஆதித்தமிழர் பேரவை, மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியினரும் ஏராளமானோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேனியிலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட கம்பம் மாவட்ட கழக தோழர்கள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக திரண்டு வந்து பயனாடைகளை அணிவித்தும், பரப்புரை பயணத்திற்கான நிதியை வழங்கி சிறப்பித்தனர். பிறகு மதிய உணவு சிறிது ஓய்வுக்கு பிறகு தேனி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி முடித்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார்.

மதுரை செல்லூர் 50 அடி சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடையில் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்று பேசினார். அந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கழகத் தலைவரின் கருத்துக்கு வலிமை சேர்த்து உரையாற்றினார்.

07-04-2022 அன்று காலை தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன் ராசா அவர்களின் மகன்கள் வைக்கம் பெரியார், ஈரோட்டுப் பெரியார் ஆகியோரால் உருவாக்கப் பட்ட மின் இரு சக்கர வாகன நிலையத்தை திறந்து வைத் தார் ஆசிரியர் அவர்கள்.

காலை 11 மணிக்கு புறப்பட்டு இராமநாதபுரம் சென்றார். செல்லும் வழியில் மானாமதுரை புறவழிச்சாலை பேருந்து நிலையம் அருகில் சிவகங்கை மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் ச.இன்பலாதன் தலைமையில் கழகத் தோழர்களும், பொதுவுடைமை கட்சியினரும் தலைவருக்கு பயனாடை அணிவித்தும் பரப்புரை நிதி வழங்கியும் வரவேற்பு அளித் தனர்.

மதியம் 1 மணி அளவில் இராமநாதபுரம் வந்தடைந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் நினைவுத் தூண் அருகில் மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலை மையில் மாவட்ட தலைவர் எம்.முருகேசன், மாவட்ட செயலா ளர் கோ.வ.அண்ணாரவி, பொதுக்குழு உறுப்பினர் கா.மா. சிகாமணி உள்ளிட்ட தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

தங்கும் விடுதியில் கழகத் தலைவரை மேனாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மற்றும் தோழர்கள் சந்தித்தனர்.

இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான எம்.எஸ்.கே.பவானி இராஜேந்திரன் கலந்து கொண்டு ஆசிரியர் அவர்களின் இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்திட நாம் துணை நிற்போம் என்றும் மகளிர் விடு தலையை பெற்றுத்தந்த அய்யா பெரியாரின் மறு உருவமாய் நமக்கு கிடைத்திட்ட அருந்தலைவர் ஆசிரியர் அவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்ற தமது விருப் பத்தை தெரிவித்தார்.

இரவு 7.15 க்கு புறப்பட்டு 9 மணிக்கு காரைக்குடி வந்து சேர்ந்தார் தமிழர் தலைவர் அவர்கள். காரைக்குடி அய்ந்து விளக்கு அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நீட் தேர்வு ஏன் ரத்து செய்யப்பட வேண்டும், புதிய ஆபத்தான திட்டமாக வரவுள்ள தேசிய கல்விக் கொள்கை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்பதை விளக்கி பேசினார். அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் மேடைக்கு வந்து தாய்க் கழக தலைவரை பயனாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இரவு புறப்பட்டு திருச்சி பெரியார் மாளிகை வந்த போது நள்ளிரவு நேரம் 1 மணி. அப்பப்பா... ஆசிரியருக்கு எப்படி இது முடிகிறது.

மறுநாள் காலை எப்போதும் போல 7 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்கிறார். பிறகு காலை உணவு முடிந்து கழகத் தோழர்கள் சந்திப்பு. அன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தஞ்சாவூர் வந்தடைந்தார்.

அங்கே ஆபிரகாம் பண்டிதர் சாலையில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த பரப்புரையில் ஈடுபட்டு சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினார். தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகர மேயர் சன்.இராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களும், அண்மையில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரிசையில் நின்று கழகத் தலைவரை பயனாடை அணிவித்தும், சந்தாக் களை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment