'திராவிட மாடல்' ஆட்சியின்மீது சேற்றை வாரி பூசவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தி வெளியிடும் பார்ப்பன நாளேடுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

'திராவிட மாடல்' ஆட்சியின்மீது சேற்றை வாரி பூசவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தி வெளியிடும் பார்ப்பன நாளேடுகள்!

ஆகமப் பயிற்சி பெற்று சட்டப்படி பணி நியமனம் பெற்றும் பணி செய்யவிடாமல் தடுத்த வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை பாயட்டும்!

அனைத்து ஜாதியினரின் அர்ச்சகர் பணி தொடரட்டும்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழ்நாடு அரசு ஆணைப்படி ஆகமப் பயிற்சி பெற்று நியமனம் செய்யப்பட்டு, பொறுப்பேற்ற மற்ற ஜாதி அர்ச்சகர்கள் பணி தங்கு தடையின்றி நடைபெற வேண்டும். அவர்களின் பணிகள் தொடரட்டும் - இவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்த வன் முறையாளர்களின்மீது சட்டப்படியான நடவடிக்கை பாயட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு.

இன்று நாளேடுகளில் வெளிவந்துள்ள இரண்டு முக்கிய செய்திகள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.

கோயபல்சின் குருநாதர்கள்

ஒன்று, நேற்று (24.4.2022) ஒரு பார்ப்பன நாளேடு- தி.மு.க. ஆட்சிமீது சேற்றை வாரி நாள் தவறாமல் பூசுவதே அதன் ‘திருப்பணி'. அதில், ‘‘தி.மு.க. அரசு தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மும்மொழித் திட்டத்தை மிகவும் ரகசியமான முறையில் வேறு ஏதோதோ கூறி, நடைமுறைப்படுத்திட தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வித் துறை ஆயத்தமாகி விட்டது'' என்ற  செய்தியை அந்த 'இனமலர்' நாளேடு பரப்பி, தங்களை கோயபல்சின் குருநாதர்கள் என்று காட்டி யுள்ளனர்!

உடனடியாக நேற்று மாலையே தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அதன் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரிகள் ''அந்தச் செய்திக்கு எந்தவித ஆதாரமும் துளியும் கிடையாது; இருமொழிக் கொள்கை தான் தமிழ்நாடு அரசின் திட்டவட்டமான கொள்கை'' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

பித்தலாட்டத்தின் பிதாமகர்கள்

அவர்களது வைதீக மொழி - பழமொழிப்படிக் கூற வேண்டுமானால், ‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெரும் ஆளாக்கிடும்'' கைதேர்ந்த பித்தலாட்டத்தின் பிதாமகர் கள் இவர்கள்!

‘‘கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாள்கள்''தான். இது ஒரு நாள்கூட நிற்காது - பலூன் வெடித்துவிட்டது!

எந்த அளவு யோக்கியப் பொறுப்புள்ள ‘பத்திரிகா தர்மம்' என்பது ‘அவாளுக்கே' வெளிச்சம்!

அதுபோலவே, அதே நாளேட்டில் இன்று (25.4.2022) வந்துள்ள ஒரு செய்திக்கும் - தமிழ்நாடு ஹிந்து அற நிலையத் துறையின் தெளிவான விளக்கமும் - மிகவும் சரியானதும், தெளிவானதும் ஆகும்.

‘‘கருவறைக்குள் நுழைந்த பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள்''

‘‘அறநிலையத் துறை உத்தரவால் வயலூர் கோவிலில் சர்ச்சை'' என்ற தலைப்பில்!

திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழ்நாடு அரசு ஆணைப்படி நியமிக்கப்பட்ட ஆகமப் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பூசை செய்யவிடாமல் அங்குள்ள பார்ப்பனர்கள் மிரட்டி வன்முறையில் ஈடுபட முயன் றுள்ளார்களாம்!

தடுத்தது சட்டப்படி குற்றமல்லவா?

அது முருகன் கோவில் (வயலூர் முருகன்). ‘‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் எம் முருகன்'' என்பார் திருமுருகக் கிருபானந்தவாரியார் அவர்கள்; அந்த முருகனுக்கு - வள்ளி - தெய்வானை என்ற இரு மனைவிகள் - ஜாதியை மறுத்த காதல் திருமணம் - புராணக் கதைப்படி (கற்பனையாயினும் கதையின் தத்துவத்திற்காக சுட்டிக்காட்டுகிறோம்). அந்தக் கோவிலில் அறநிலையத் துறையின் முறையான நியமனம் பெற்று பூசை செய்ய உள்ளே சென்றவர்களைத் தடுத்தது சட்டப்படி குற்றமல்லவா?

அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தவர் களைக் குற்றப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து - கைது செய்து தண்டனை வாங்கித் தருவது காவல் துறையின் கடமையல்லவா?

அதைச் செய்யத் தவறிய தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையும், காவல்துறையும்  இப்பொழு தாவது அதைச் சரி செய்ய முன்வரவேண்டும்.

சரியான சட்ட விளக்கத்தை அளித்திருப்பதாக....

இப்போது அறநிலையத் துறை ஒரு சரியான சட்ட விளக்கத்தை அளித்திருப்பதாக இன்று அதே நாளேட் டிலேயே வெளிவந்துள்ள செய்தி:

‘‘அறநிலையத் துறை கோவில்களில் அர்ச்சகர் யார், நிர்வாகி யார், நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை எல்லாம், அரசு தான் முடிவு செய்யும். அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசு ஆணைப்படி, வயலூர் கோவிலில் அர்ச்சகர் பணிக்கு இருவர் வந்துள்ளனர்.

அவர்களும் முழு அர்ச்சகர்கள்தான். அவர்களுக்கும் கருவறைக்குள் சென்று, சுவாமியை தொட்டு பூஜை செய்ய தகுதி உண்டு. ‘நாங்கள் பரம்பரையாக பூஜை செய்கிறோம். அதனால், நாங்கள்தான் பூஜை, அர்ச்சனை செய்வோம்' என்று கூறினால், அது தவறு. புதியவர்களை தடுப்பதும் சட்டப்படி தவறு. இதில் அரசியல் கிடையாது.

மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் கோவிலுக்குள் வந்ததும், போலீசை வரவழைத்து விட்டோம். இப்போது, இருதரப்பும் இணைந்து அமைதியாக தான் பூஜைகள் நடக்கின்றன. மற்றபடி, பிராமணர்கள் என்பதாலும், பாரம்பரியமாக தொழில் செய்கின்றனர் என்பதாலும், யாருக்கும் ஹிந்து அறநிலையத் துறையில் சிறப்பு சலுகைகள் கிடையாது.''

இது சட்டப்படி - நியாயப்படி சரியான விளக்கம் ஆகும்.

நியமனமாகி, பொறுப்பேற்ற மற்ற ஜாதி அர்ச்சகர் களின் பணி தங்கு தடையின்றி நடைபெறவேண்டும்.

வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை பாயட்டும்!

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நியமனம் சம்பந்தமான வழக்குகளில் எந்தத் தடையும் இல்லாதது - பணியின் பாதை நேராக உள்ளது என்பதையே காட்டுகிறது.

எனவே, அவர்களின் பணிகள் தொடரட்டும்!

வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை பாயட்டும்!


கி.வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.4.2022


No comments:

Post a Comment