தொடங்குகிறார் வீரமணி போரை நாளை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தொடங்குகிறார் வீரமணி போரை நாளை!!

ஆயிரமாம் ஆண்டுகளாய் அடிமைப் பட்டோம்!

அய்யாநம் பெரியாரால் அறிவைப் பெற்றோம்!

போயிரண்டு வேலைகளில் அங்கும் இங்கும்

புதுவாழ்வு கண்டுநின்றோம்! பொறுக்க வில்லை!!

நோயிருந்த காலத்தில் நுட்ப மாக

நுழைத்துவிட்டார் ‘புதியகல்வி’ திட்ட மாக!!

வாயிருந்தும் ஊமைகளாய் இருந்து விட்டால்

வருங்காலத் தமிழ்நாடு சுடுகா டாகும்!!


தீட்டென்றே சொல்லிநமைத் தள்ளி வைத்தே

திறமைக்கும் தகுதிக்கும் தாமே யென்றார்!

காட்டிநின்றோம் நம்திறனைப் பெரியார் அன்று

கட்டிவைத்த சமூகநெறித் தளத்தில் நின்றே!!

நீட்டென்று  வைத்தாரே தலையில் கொள்ளி!

நீக்காமல் விடுவேனோ என்றே சொல்லிப்

போட்டுவிட்டார் நம்தலைவர் போர் முழக்கம்!!

புறப்பட்டுக் களம்காண வாவா தோழா!!


கண்ணான கல்விநலன் மறுத்தார் என்றே

கழுத்தினிலே சுருக்கிட்டார் நமது பிள்ளை!

‘தான்மட்டும்‘ வாழுவதோ வாழ்க்கை? இந்தச்

சதிமுறித்துப் பகைவெல்வோம் வாரீர் என்றே

தொண்ணூறு வயதுதொடப் போகும் வேளை

தொடங்குகிறார் வீரமணி போரை நாளை!!

பொன்னாக நாம்காத்த சமூக நீதி

போயொழிய விடலாமோ? வாவா தோழா!!


கடலூரில் பிறந்தவராம்! கருப்புச் சட்டை

காவலுக்கே என்பவராம்! பழுத்த பின்னும்

உடலோய்வைத் தள்ளிவைத்தே உள்ளம் பொங்கி

ஓடித்தான் வருகின்றார்! ஊர்கள் தோறும்!! 

கடனென்றே அவர்தலைமை ஏற்று வந்தே

கட்சிகளின் தலைமையெல்லாம் வாழ்த்தி நிற்க

கடலென்றே அணிசேர்த்து வாவா தோழா!

களமாடித் தமிழ்நாட்டின் மானம் மீட்போம்!!

- சுப முருகானந்தம், மதுரை.




No comments:

Post a Comment