பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழாக் கூட்டத்தில் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 26, 2022

பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழாக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

  முதலமைச்சர் அவர்களே! நீங்கள் தாய் வீட்டுக்கு வந்துள்ளீர்கள்!

உழைப்பின் உருவமான கலைஞர் அவர்களாலேயே "உழைப்பு, உழைப்புதான் ஸ்டாலின்" என்று பாராட்டப்பட்டவர் நமது முதலமைச்சர் மானமிகு ஸ்டாலின்!

முதலமைச்சருக்கு இரண்டு கோரிக்கைகள்! 

புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை பன்னாட்டுத் தமிழ் நாளாக (வளர்ச்சி) அறிவியுங்கள்!

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வாருங்கள்!

மக்கள் பிரச்சினைக்காக இன்னும் எத்தனைப் பயணங்களையும் நடத்த நாங்கள் தயார்!

சென்னை, ஏப்.26 புரட்சிக்கவிஞர் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாளை பன்னாட்டுத் தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்கவேண்டும் என்றும், கருநாடகம், மகாராட்டிரத்தில் உள்ளதுபோல மூடநம்பிக்கை ஒழிப் புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழா! 

நேற்று (25.4.2022) மாலை சென்னை பெரியார் திடலில்   நடைபெற்ற நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்புப் பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயண விளக்கவுரையாற்றினார்.

அவரது பயண விளக்க உரை வருமாறு:

கடந்த 21 நாள்களில், இந்தக் கூட்டம் பல வகையில் சிறப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டமாக இருக்கக்கூடிய பரப்புரை பயணத்தினுடைய நிறைவு விழா கூட்டத்திற்குத் தலைமையேற்று இருக்கக் கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எத்திக்கும், தித்திக்கும் திராவிட மாடல் 

ஆட்சியினுடைய சிறப்பு நாயகர்

எங்களுடைய பயணத்தில் ஏற்பட்ட சோர்வு, களைப்பு, அலைச்சல், சங்கடங்கள் எல்லாம் மறந்து போகக்கூடிய அளவிற்கு, எங்களை அரவணைத்து, இன்றைக்கு வரவேற்கக்கூடிய அளவிற்கு சிறப்பாக வருகை தந்திருக்கக்கூடிய எத்திக்கும், தித்திக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சிறப்பு நாயகராக இருக்கக்கூடிய எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் - நம்மில் ஒருவர் - அவர் உங்களில் ஒருவர் என்று சொன்னார் - அவர் நம்மில் ஒருவர் - முதலமைச்சர் பதவிகூட அப்பாற்பட்டது; நம்மில் ஒருவர் என்ற உறவு இருக்கிறதே, அதை மாற்ற முடியாது.

இதை இப்பொழுது நான் சொல்லவில்லை நண்பர் களே, ஏதோ அவர்கள் பொறுப்பிலே இருக்கிறார்கள்; பதவியிலே இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை.

குருகுலத்தினுடைய தலைசிறந்த மாணாக்கர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்

நம்முடைய ஒப்பற்ற தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்தினுடைய தலைசிறந்த மாணாக்கராக அவரை உருவாக்கிய நேரத் திலே, குடிஅரசினுடைய துணை ஆசிரியராக இருந்து முரசொலித்த நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இருந்த நேரத்தில், திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாநாடு - வெள்ளி விழா மாநாடு என்று நினைக்கின்றேன் - இதோ இங்கே நம்முடைய இராசா அவர்கள் இருக்கின்றார்; அன்றைக்கு அவர்தான் என்னை அழைத்துச் சென்றார், கலைஞர் அவர்கள் சொல்லி. அன்றைக்கு வராத நண்பர்கள் இந்த மேடையில் இருக்கின்றார்கள்; அதுதான் மிக முக்கிய மானது. இப்படிப்பட்ட ஒரு பெரிய வரலாறு உண்டு.

அந்த மாநாட்டில் உரையாற்றும்பொழுதே நான் சொன்னேன்.

நாங்கள் எவ்வளவுதான் ஒருவருக்கொருவர் மாறு பட்டு இருந்தாலும், நாங்கள் சகோதரர்கள்.

கணவன்- மனைவி உறவுகூட பிரியலாம். மணவிலக்கை மனைவி பெற முடியும்; கணவன் பெற முடியும். ஆனால், சகோதரர்களிடையே அப்படிப்பட்ட விலக்கை சட்டப்படியும் பெற முடியாது - அதுபோன்று என்றைக்கும் இருக்க முடியாது.

இன்றைக்கும் அந்த உரிமையோடு எங்களை வரவேற்க, தட்டிக் கொடுக்க, அடுத்த பயணத்திற்கு ஆளாகுங்கள் என்று உற்சாகப்படுத்த இங்கே வருகை புரிந்திருக்கின்ற - இந்தியாவினுடைய முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,

முதலமைச்சரின் உழைப்பிற்குமுன் 

என்னுடைய அலைச்சல் பெரிதல்ல!

அவருடைய ஒப்பற்ற உழைப்பைப் பார்க்கும் பொழுது, என்னுடைய அலைச்சல் எல்லாம் பெரிதல்ல.

முன்பு, நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 95 ஆண்டுகால உழைப்பையும் பார்த்து, அதற்குப் பிறகு, இப்பொழுது நம் கண்முன்னாலே உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதல மைச்சர், அவர் எப்பொழுது தூங்குகிறார், எப்பொழுது ஓய்வெடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

இரவு 12 மணிக்கு சாலை  சரியாகப் போடப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கிறார். இதற்கு அடிப்படை அவர் கற்றுக்கொண்ட இடம் அப்படி!

உழைப்பின் உருவம் என்று கலைஞரால் பாராட்டப்பட்டவர்!

புதிதாக சட்டமன்றம் என்று கட்டுகின்ற நேரத்தில், விடியற்காலை 3.30 மணிக்கு அதிகாரி களை அழைத்து, அதற்கு முன்பாகவே அவர் அங்கே  சென்றுவிடுவார்; அதிகாரிகள் பிறகுதான் வேக வேகமாக ஓடிவருவார்கள். அப்படி அருமை யாக உழைத்த உழைப்பின் பெயர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

கலைஞர் அவர்களே உழைப்பின் உருவம் என்று பாராட்டிய பெருமை இன்றைய முதலமைச்சருக்கு உண்டு.

எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அமர்ந்திருப்பது என்பது, வழக்கமாக சட்டமன்றத்தில், மற்ற இடங்களில் அலைந்துகொண்டிருப்பதிலிருந்து கொஞ்சம் ஓய்வு பெறட்டும்; கொஞ்சம் மாறுபட்ட ஒரு சூழல் இருக்கட்டும் என்பதற்காக மட்டுமல்ல நண்பர் களே!

இங்கே எதிரில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. நாடாளு மன்றத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், இவர் இனிமேல் வரவே முடியாது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்று போட்டுக்கொண்டு பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள் எதிர்க்கட்சியினர். அதே போலவே, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அத்தனை பேரையும் பார்க்கின்ற நேரத்தில், நம்முடைய குடும்பம் பெரியது என்ற மிகப்பெரிய உணர்ச்சியைப் பெறுகிறோம்.

எனவேதான், இந்தப் பயணங்கள் என்பது நம்முடைய இயக்கத்திற்குப் புதிதல்ல என்ற வகையில்,

இந்நிகழ்விற்கு வரவேற்புரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களே,

வணக்கத்திற்குரிய மேயர் திருமதி பிரியா அவர்களே,

திராவிட இயக்கப் போர்வாள் - என்றைக்கும் நம் மோடு உறுதியாக, தெளிவாக இருக்கக்கூடிய கொள் கைக்காரர்  - அப்படிப்பட்ட உணர்வு படைத்த அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,

அதேபோல, இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து கலந்துகொண்டுள்ள கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே,

அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே - உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகமான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை; நம்முடைய முதலமைச்சர் அதிகமாகப் பேசவேண்டும்; அதை நாம் கேட்கவேண்டும் என்று தான் நினைக்கின்றேன்.

இந்தப் பயணத்தைப்பற்றி நண்பர்கள் இங்கே சுட்டிக் காட்டியதைப்போல, இது இந்த இயக்கத்திற்குப் புதிதல்ல.

இந்தி மொழி வரவேண்டும் என்று சொல்லி, அமித்ஷாக்கள் கொக்கரிக்கிறார்கள்

இப்போதும் மீண்டும் இந்தியை நாங்கள் திணிப்போம்; ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் இந்தி மொழி வர வேண்டும் என்று சொல்லி, அமித்ஷாக்கள் கொக்கரிக் கிறார்கள் அல்லவா - வடக்கே இருந்து குரல் கொடுக் கிறார்கள் அல்லவா - அந்த  இந்தியினுடைய வரலாறு அவர்களுக்குத் தெரியாது; அந்தக் காலகட்டத்தில் அவர்கள் பிறக்கவில்லை.

1938 ஆம் ஆண்டிலே, மிகப்பெரிய அளவிற்கு இந்தி மொழியை ஆச்சாரியார் அவர்கள் திணித்தார்கள். அப்பொழுது மிகப்பெரிய எதிர்ப்புக் குரல் கிளம்பிய நேரத்தில், அந்தப் பிரச்சாரம் என்பது - திராவிட இயக்கத்திற்கு எப்படிப்பட்ட முக்கியமானது என்பதற்கு அடையாளம் - திருச்சியிலிருந்து தமிழர் பெரும்படை புறப்பட்டது - அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களுடைய தலைமையில்.

அந்தப் பெரும்படை வந்த பிறகு, ஓராண்டு காலத்திற்கு மேலாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த பிறகு - ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா? அவர் எதிர்த்தால் நான் இந்தியை விடவேண்டுமா? நீங்கள் எத்தனை பேர் எதிர்க்கிறீர்கள்? என்று சொன்னவர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்,

‘‘இங்கிலீஷ் எவர் - இந்தி நெவர்’’ என்று சொல்ல வைத்த இயக்கம் திராவிடர் இயக்கம்!

பிறகு அவரே அண்ணா அவர்களின் பக்கத்தில் அமர்ந்து - ‘‘இங்கிலீஷ் எவர் - இந்தி நெவர்’’; எப்பொழுதுமே ஆங்கிலம்தான் - என்றைக்கும் இந்தி கிடையாது என்று சொல்ல வைத்த இயக் கத்திற்குப் பெயர்தான் திராவிடர் இயக்கம்.

அந்த வரலாற்றை நாம் இன்றைக்கு நினைவுப் படுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம்; பழைய பக்கங்களைப் புரட்டிக் காட்டி அவர்களுக்குப் பாடங்களாக நடத்தவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், இன்றைக்கு நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய நவீன குலதர்மக் கல்வித் திட்டமாக இருக்கக்கூடிய புதிய தேசியக் கல்வித் திட்டம் என்ற பெயராலே - ஆங்கிலத்தில் அதற்கு நேஷனல் எஜூகேஷன் பாலிசி (என்.இ.பி.) என்று சொல்கிறார்கள். நாங்கள் எல்லா கூட்டங்களிலும் விளக்கிச் சொல்லி வந்தோம்.

நேஷனல் எஜூகேஷன் பாலிசி அல்ல; 

நோ எஜூகேஷன் பாலிசி

அது நேஷனல் எஜூகேஷன் பாலிசி அல்ல; நோ எஜூகேஷன் பாலிசி - அதாவது யாரும் படிக்க வேண்டாம் என்று சொல்வதற்காக ஒரு திட்டம்; மீண்டும் மனுதர்மத்தை உருவாக்கவேண்டும் என்பதற்கான திட்டம்; அதைவிட மிக முக்கியமாக நம்முடைய அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்பாடானது. இதுதான் எல்லா கூட்டங்களிலும் நாங்கள் விளக்கியது, பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சொன்னது. திராவிட இயக்கம்தான் அரசியல் விழிப்புணர்வை மக்களுக்குக் காலங்காலமாக ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணா அவர்கள் சொல்வார்கள், தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய முதல் பேராசிரியர். அந்தப் பேராசிரியரின் வகுப்பு என்பது, மாலை நேர வகுப்பு அது. மாலை நேரம் தொடங்கி மூன்று மணிநேரம் அந்த வகுப்பு நடக்கும் என்று சொல்வார்.

அதுதான் இன்றைக்குத் திராவிடர் இயக்கம் வளர்ந் ததற்குக் காரணம் - மக்கள் மத்தியிலே பொதுக்கூட்டம் என்ற உணர்வு இருக்கிறதே - இந்தியாவினுடைய எந்த மாநிலத்திலும் அவ்வப்பொழுது பொதுக்கூட்டம் போடு கின்ற பழக்கம் கிடையாது; தமிழ்நாட்டில்தான் பொதுக் கூட்டம் போடுவோம்; அடுத்தபடியாக கேரளாவில்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடையப் போகிறது வருகிற மே 7 ஆம் தேதி.

எனவேதான் நீங்கள் இங்கே வரவேண்டும் என்று நாங்கள் நினைப்பதற்குக் காரணம் - பெரியார் திடலுக்கு வருவது உங்களுக்குப் புதிதல்ல. இந்த இடம் உங்களுக்கு இரண்டாவது தாய் வீடு. அறிவாலயம் எப்படியோ அதுபோல இந்த இடமும் உங்களுக்கு முக்கியம். இங்கே வருவது புதிதல்ல - புதுமையும் அல்ல.

ஆனால், அதேநேரத்தில் ஒன்றை இந்த நேரத்தில் முக்கியமாகச் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இருக்கிறது.

அது என்னவென்று சொன்னால், கலைஞர் அவர்கள் இந்தப் பெரியார் திடலுக்கு வந்து பேசிய பேச்சை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்கள் ஓர் உதாரணத்தைச் சொன்னார்; அது மறக்க முடியாததாகும்.

காயங்களைப் போக்குமிடம் பெரியார் திடல்!

கீரியும் - பாம்பும் போடுகின்ற சண்டையில், பாம்பு கடித்து, கீரி ரத்தக் காயங்களைப் போக்கிக் கொள்ள ஒரு மூலிகை இருக்கிறது; அந்த மூலிகையில் இரண்டு முறை கீரி புரண்டால், ரத்தக் காயங்கள் மறைந்துவிடும். புதிய எழுச்சியோடு, பாம்பை எதிர்க்கக்கூடிய சக்தி வரும். அதுதான் பெரியார் திடல் - பெரியார் மண் என்று சொன்னார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

நீங்கள் உலகப் புகழ் பெற்றிருப்பது 

எங்களுக்குப் பெருமை!

இப்பொழுதும், ஒரு பக்கத்தில் நீங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். அது எங்களுக்குப் பெருமை.

இப்பொழுதுகூட நான் இரண்டு அழைப்பி தழ்களை அவரிடத்தில் கொடுத்தேன். பன்னாட்டு அழைப்பிதழ்கள் அவை.

கனடா நாட்டில். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிக்கு நீங்கள் வரவேண்டும் என்று சொல்லி, அந்த நாட்டின் பிரதமரை சந்தித்துக் கேட்டிருக் கிறார்கள்.  அந்த நாட்டின் பிரதமர் முற்போக்குச் சிந்தனையாளர், இளைஞர். அவர் கேட்டிருக்கிறார், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகிறாரா? நிச்சயம் நான் வருகிறேன்'' என்று சொல்லியி ருக்கிறார். அவரை நான் நேரிடையாகப் பார்த்தது கிடையாது.

இந்தியாவில் ஒரு பெரிய மாற்று அமைப்பை உருவாக்கக் கூடிய ஆற்றல்

இந்தியா முழுவதும் நம்முடைய முதலமைச்சரின் பெருமை உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரு பெரிய மாற்று அமைப்பை உருவாக்கக் கூடிய ஆற்றல் எங்கே இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு முதலமைச்சருக் குத்தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிற எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிற்கவேண்டும்; பாசிசத்தை எதிர்த்து நிற்க வேண்டும்; மதவெறியைப் போக்கவேண்டும்; ஜாதி வெறியை அகற்றவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்திய அளவில் வந்திருக்கிறது என்றால், அதற்குத் தமிழ்நாடுதான் முன்னோடியாக நிற்கிறது.

‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்று பல்கலைக் கழகங்கள் ஆய்வு செய்கின்றன. இதுவரையில் அந்தக் காலகட்டம் வந்ததில்லை.

பல்கலைக் கழகங்களிலும் திராவிட இயக்கத்தைப்பற்றித்தான் ஆய்வு செய்கிறார்கள்

தங்களைப்பற்றி ஒருவர் ஆய்வு செய்கிறார் என்று தந்தை பெரியாரிடம் நான் சொன்னபொழுது, 

‘‘நம்மைப்பற்றி கூடவா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்கிறார்கள்?'' என்று அன்றைக்குக் கேட்டார் தந்தை பெரியார்.

இன்றைக்கு எல்லா பல்கலைக் கழகங்களிலும் பெரி யாரைப்பற்றித்தான், திராவிட இயக்கத்தைப்பற்றித்தான் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.

‘திராவிட மாடல்’ என்பது மிகப்பெரிய அளவிலே வந்துகொண்டிருக்கிறது.

மலேசியாவில், திராவிடர் கழகத்தினுடைய 75 ஆம் ஆண்டு பவள விழா. அந்த விழாவிற்கு வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். 

நம்முடைய முதலமைச்சர் துபாய்க்குச் சென்றிருந்த பொழுது, மலேசிய நாட்டு அமைச்சர், மலேசியாவிற்கு வாருங்கள், அதிக முதலீட்டை உங்கள் தமிழ்நாட்டிற்குத் தருகிறோம் என்று சொல்லி, அதன்மூலமாக அங்கே ஈர்க்கிறார்கள்.

ஜூலை மாதம் நடைபெறுகின்ற நிகழ்ச்சிக்கு அங்கே அழைத்திருக்கிறார்கள்.

எனவேதான், ஒருபக்கம் தொழில் வளர்ச்சி; இன் னொரு பக்கம் தமிழ் வளர்ச்சி; இன்னொரு பக்கம் தமிழ்ப் பண்பாடு; தமிழ் மீட்டுருவாக்கம்.

இந்தப் பணிகளையெல்லாம் செய்து,  அவருடைய ஆட்சி எல்லை என்பது - ஆளுமை என்பது - வெறும் கோட்டையில் இருக்கின்ற ஆட்சியில் மட்டுமல்ல. அவர் பதவிக்கு வந்து ஆட்சி நடத்தும் இந்த நேரத்தில், திராவிட இயக்கம் பெருமைப்படுகிறது.

நம்முடைய தளபதி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில் நாங்கள் எல்லோரும் அமர்ந் திருக்கின்றோம். 10 ஆண்டுகால இருண்ட ஆட்சிக்குப் பிறகு பதவியேற்கவிருக்கிறார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

இங்கே உரையாற்றிய சகோதரர் வைகோ அவர்கள் குறிப்பிட்டதுபோன்று - அப்பொழுது அவர் உச்சரித்த வார்த்தை இருக்கிறதே, அது வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய வார்த்தையாகும்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னது இருக்கிறதே, அந்த வாக்கியத்திற்கு எவ்வளவு பெருமை என்றால், உலகளா விய அளவிற்கு இன்றைக்குத் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

எல்லா துறைகளிலும் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் பல நாடுகளுக்கு அவரை அழைக்க வேண்டும்; பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

அவருடைய வியூகத்தினாலே, இதோ நம்முடைய மேயர் அவர்கள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர் மேயராக வந்திருக்கிறார் என்று சொன்னால், எவ்வளவு பெரிய பூரிப்பு!

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து, அவரிடம் கைகொடுத்துப் பேசியபொழுது, இந்த இயக்கம் எப் படிப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

எனவேதான் நண்பர்களே, இந்தக் கொள்கைகள் என்பது அவ்வளவு வேகமாக வளர்கிறது. 

தாய்க்கழகத்திற்கு ஏற்படுகின்ற பூரிப்பு!

திராவிட இயக்கம், ‘திராவிட மாடல்’ - ஏனென்றால், இது தாய்க்கழகம். இந்தத் தாய்க்கு அந்தப் பூரிப்பு இருக் கிறது - அந்தப் பூரிப்பையெல்லாம் வெளிப்படுத்துகின்ற வாய்ப்பாகத்தான் இதனை எடுத்துச் சொல்கிறோம்.

அருமையாகச் சொன்னார், நம்முடைய கழகத் துணைத் தலைவர், இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்,  இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வைப்பற்றி.

இந்தியாவினுடைய தலைமை நீதிபதி ரமணா அவர்கள் உரையாற்றியபொழுது,  நம்முடைய முதல மைச்சர் சிறப்பான முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னார்.

இதைவிட திராவிட இயக்கத்திற்கு என்ன வேண்டும்?

சில கொம்பன்களுக்கு இது புரியவில்லை.

இதை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்கக் கூடாது; குறுக்குச்சால் விடலாம் என்று நினைக்கக்கூடாது.

தூசிப் படை போன்றது திராவிடர் கழகம்!

அந்த வகையில்தான் நண்பர்களே, எது எது தேவையோ, அத்தனை உரிமைகளையும் மீட்டெடுக் கிறீர்கள். அந்த உரிமைகளை மீட்டெடுக்கின்ற நேரத்தில், என்னென்ன இடையூறுகள் வருகிறதோ, என்னென்ன தடைகள் வருகிறதோ, என்னென்ன கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருக்கிறதோ, அந்தக் கண்ணிவெடி களையெல்லாம் அகற்றுவதற்கு, முன்னே ஒரு ஸ்குவாட் போகும் அல்லவா! அதைப் போன்றவர்கள் திராவிடர் கழகத்தவர்கள். அந்தப் பணிதான் எங்களுடைய பணி!

அண்ணா அவர்கள் சொல்வார்கள், இராணுவத்தில் சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் என்று ஒரு தூசிப் படைப் போகும்! அதற்குப் பின்னால் இராணுவம் வந்துகொண் டிருக்கும்.

சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் படைகள் பாதையை சரி செய்துகொண்டே போகும். பாலத்தைக் கட்டவும் செய்யும்; பாலத்தை உடைக்கவும் செய்யும் - எதிரிகளைப் பொறுத்தவரையில்.

எங்களுடைய கருஞ்சட்டைப் 

பட்டாளத்தின் பணி

இதுதான் சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் படை யினுடைய வேலை. இராணுவத் துறையைப்பற்றி நன்றாகத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அந்தப் பணியை செய்வதுதான் எங்களுடைய கருஞ்சட்டைப் பட்டாளத்தின் பணி.

அதற்குத்தான் நாங்கள் இந்த வேகாத வெயிலோ, கொட்டும் மழையோ எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம்.

தீயணைப்புப் படையிலும், இராணுவப் படை யிலும் சேர்ந்தவர்களுக்குப் பருவமா முக்கியம்? போர் முக்கியம்.

போரிலே கூட வெற்றியா? தோல்வியா? என்பது இரண்டாம்பட்சம்தான். கடமையாற்ற வேண்டும் என்பதுதான் சரியான முடிவாகும்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு, அந்த வகையிலே, நீங்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்து வருகின்றீர்கள். ஊராட்சி மன்றத் தலைவரிலிருந்து, குடியரசுத் தலைவர் வரையில் இதுதான் நடைமுறை.

ஆட்சி சிம்மாசனத்திற்கு நீங்கள் வந்தீர்கள்.  ஆனால், இன்றைக்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இந்த ஆட்சிக்கு ஒரு தனி சிறப்பு என்னவென்று சொன்னால்,

ஓராண்டு நிறைவதற்குள்ளாக, வெறும் ஆட்சி சிம்மாசனத்தில் மட்டும் எங்கள் அருமைக்குரிய முதலமைச்சர் அவர்களே, நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கவில்லை - அதைவிட, என்றைக்கும் நிரந்தமான மக்களின் இதய சிம்மாசனத்திலே நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள்.

வெறும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல - இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல - புலம்பெயர்ந்த தமிழர்கள்  மட்டுமல்ல - அதற்கப்பாற்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

உங்களுக்காக, 

உங்களுடைய பிள்ளைகளுக்காக...

இவரை உயர்த்திச் சொல்கிறாரே என்று நீங்கள் நினைக்கவேண்டாம் - இனிமேல் நாங்கள் ஏதாவது பதவிப் பெறப் போகிறோமா? அல்லது ஏதாவது சலுகை பெறப் போகிறோமோ? அல்ல நண்பர்களே, உங்களுக்காக, உங்களுடைய பிள்ளைகளுக்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லுகின்றபொழுது, அதை உணர்ந்து அவர்கள் வருந்தினார்கள்.

குலக்கல்வித் திட்டம் நீடித்திருக்குமேயானால், பெரியார் போராடியிருக்காவிட்டால் என்னாவாகி யிருக்கும்?

இந்தி இங்கே வந்து அமர்ந்திருக்குமேயானால் நம்முடைய நிலை என்னவாகியிருக்கும்?

இதை எதிர்க்கக்கூடிய தெம்பும், திராணியும், உறுதியும் திராவிடர் இயக்கத்திற்கு உண்டு.

உங்களிடமிருந்து மற்ற ஆளுமைகள் கற்றுக்கொள்ளப்படவேண்டும்

எனவேதான் நண்பர்களே, அரசமைப்புச் சட்டப்படி நீங்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதற்கும் பதற்றப்படுவதே இல்லை. அதே உங்களிட மிருந்து மற்ற ஆளுமைகள் கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

ராஜ தந்திரத்திலே, தலைசிறந்த ராஜதந்திரம்!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று உங்கள் முகத்தைப் பார்த்து யாராலும் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது. ராஜ தந்திரத்திலே, தலைசிறந்த ராஜதந்திரம் அதுதான்.

நண்பர்களாலும், உடன் இருப்பவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

பெரும் புயலடித்தால்கூட, அதைப்பற்றி கவலைப் படாமல், புயலடிக்கின்ற நேரத்திலும், செயல்வடிவம் எப்படி என்று நாட்டிற்குக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் செய்கின்ற பணிகள் எல்லாம் வெற்றி பெறக்கூடாது என்று, மக்கள் மூலமாக ஆட்சியைப் பிடிக்க முடியாதவர்கள்  கணக்குப் போடுகின்றனர். மக்கள்மூலம் ஆட்சியைப் பிடித்ததின் மூலமாக நீங்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றீர்கள். நம்முடைய அமைச்சர் பெருமக்கள், அதேபோல, நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் - அரசமைப்புச் சட்டப்படி வந்திருக்கிறார்கள்.

சில பைத்தியக்காரர்கள் பேசுகிறார்கள்; பைத்தியக் காரர்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களைப்பற்றி பேசுவதே தவறுதான்; இருந்தாலும், மக்களுக்கு விளங்கவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

அவர்களின் கனவு பலிக்கவில்லை

கலைஞர் இல்லை; மற்ற பெரிய தலைவர்கள் இல்லை. அடுத்தபடியாக ஸ்டாலின் வருகிறார். இனிமேல் தமிழ்நாடு வெற்றிடம். அந்த வெற்றிடத்தில் நாம் சுலப மாகப் போய் அமர்ந்துவிடலாம் என்று நினைத்தார்கள். அவர்களுடைய பின்னணி என்ன என்பதைப்பற்றிக்கூட அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால், அவர்களின் கனவு பலிக்கவில்லை. அவர்கள் யார் என்று சொல்லத் தேவையில்லை.

இன்னும் சில பேர் ஆரூடம் கணித்தார்கள்; ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் ‘ராசி’யே இல்லை என்று சொன்னார்கள். 

பெரியார் திடல் ‘ராசி’யைவிடவா, இன்னொரு ‘ராசி’ மிக முக்கியம் வாய்ந்தது!

அப்படி சொன்னவர்கள் எல்லாம், பஞ்சாங்கம் பார்த்தவர்கள் எல்லாம் மலைக்கும்படி - கிழியட்டும் பழம் பஞ்சாங்கம் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல நடந்தது.

மக்களின் இதய சிம்மாசனத்தைப் பிடித்து உயர்ந்திருக்கிறார் - உயர்ந்துகொண்டே இருக்கிறார்

அவர் ஆளுமைக்கு வந்திருக்கிறார் என்று சொல்லவில்லை - பதவி சிம்மாசனத்தைப் பிடித் தவர் - மக்களின் இதய சிம்மாசனத்தைப் பிடித்து உயர்ந்திருக்கிறார் - உயர்ந்துகொண்டே இருக் கிறார். ஒவ்வொரு நாளும் முத்திரை பதிக்கிறார்.

மீண்டும் அவர்கள் மீட்டுருவாக்கம் செய்கிறார்கள்!

இன்றைக்கும் எங்களுக்குப் பெருமை என்னவென்று சொன்னால் நண்பர்களே, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தி உண்டு.

துணைவேந்தர்கள் நியமனத்தை தமிழ்நாடு அரசே செய்யும் என்பதுதான். 

இது புதிதல்ல நண்பர்களே! நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமையை, மீண்டும் அவர்கள் மீட்டுருவாக்கம் செய்கிறார்கள்.

எனவே, பறிக்கப்பட்ட அத்தனை உரிமைகளையும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்.

ஆளுநருடைய தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுகிறது என்று சொன்னால், ஜனநாயக ரீதியில், அமைதி வழியில், தன்னுடைய எதிர்ப்பை, ஓர் அரசாங்கத்தினுடைய எதிர்ப்பை பதிவு செய்வதில், தலைசிறந்த முறையில் பதிவு செய்து - உங்களுக்கும், எங்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் கருத்து வேறுபாடு கிடையாது என்று பண்போடு சொல்லியிருக்கிறார்.

அவர்கள் என்ன கேட்கிறார்கள்?

பிரச்சாரப் பெரும் பயணத்தில்கூட அதைத்தான் நாங்கள் விளக்கினோம். அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே,  உங்களுடைய கடமையைச் செய்யுங்கள்.

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி அனுப்பிய மசோதா உங்களுக்கு அனுப்பப்பட்ட மசோதா அல்ல. ஆளுநர் மூலமாக அனுப்பப்பட குடியரசுத் தலை வருக்கானதாகும்.

இடையில் உள்ள தபால்காரருக்குப் பிரித்துப் பார்ப்பதற்கு உரிமையேயில்லை!

எனவே, அனுப்பவேண்டியவர்களுக்கு அதை அனுப்புங்கள்; இடையில் உள்ள தபால்காரருக்குப் பிரித்துப் பார்ப்பதற்கு உரிமையேயில்லை. அப்படி பிரித்துப் பார்த்தால், அவர் அந்தப் பணியை சரியாக செய்யவில்லை என்றுதான் பொருள் என்று பேசுகி றோமே தவிர - அது அவதூறோ மற்றதோ இல்லை.

முதலமைச்சரிடம் இரண்டு கோரிக்கைகள்!

எனவேதான், அவர் தெளிவாக, உறுதியாக எடுத்துச் சொல்லக்கூடிய இந்தச் சூழலில், மீட்டுருவாக்கம் தேவை என்ற காரணத்திற்காக, இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.

ஏனென்றால், முதலமைச்சரிடம் மற்ற மற்ற கோரிக்கைகளை வைப்பார்கள்; நாங்கள் கோரிக்கை வைக்காமலேயே, பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாள்; அம்பேத்கருடைய பிறந்த நாள் சமத்துவ நாள்.  அதேபோன்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் மிகப்பெரிய சாதனைகள்!

நாங்கள் கோபப்படுகின்ற அமைச்சரும் அவர்தான்; கட்டியணைக்கின்ற அமைச்சரும் அவர்தான்!

அமைச்சர்களிலேயே ஒரு பக்கம் கோபப்படுகின்ற அமைச்சர் நமது சேகர்பாபுதான்; ஏனென்றால், நிறைய அளவிற்கு அவர் கும்பாபி ஷேகத்தை நடத்திக் கொண்டே இருக்கிறார். நாங்கள் கட்டி அணைக்கின்ற அமைச்சரும் அவர்தான் - அர்ச்சகர் நியமனத்திற்காக!

இது நகைமுரண்பாடு - வேடிக்கையான முரண்பாடு.

சரியாக அடிக்கவேண்டிய நேரத்தில் அந்தத் துறை அடிக்கிறது; இன்றைக்குக்கூட ‘விடுதலை’ யில் அறிக்கை எழுதியிருக்கிறேன்.

சட்டப்படி நியமனம் பெற்று அர்ச்சகரானாலும், நாங்கள்தான் இருப்போம் என்று அவர்களை சிலர் தடுக்கிறார்களே - அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்?

எங்களுடைய கோரிக்கை இரண்டு.

புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்- 

பன்னாட்டுத் தமிழ் வளர்ச்சி நாள்!

ஒன்று, புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பிறந்த நாள் ஏப்ரல் 29. இன்னும் அய்ந்து நாள்கள் இருக்கின்றன. புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை - ‘‘பன்னாட்டு தமிழ் வளர்ச்சி நாள்’’ என்று அறிவிக்கவேண்டும். நீங்கள் அப்படி அறிவித்தீர்களேயானால், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்பட மகிழ்வார்கள்.

கலைஞர், எம்மொழியை செம்மொழியாக்கி அருமையான சாதனை படைத்தார். செம்மொழியை உலகம் முழுவதும் இருக்கிறவர்கள் தமிழ் வளர்ச்சி நாளாக - ஆக்கப்பூர்வ பணிகளைச் செய்யும் அளவிற்கு புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் அதை செய்தார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நீங்கள் அதைச் செய்யுங்கள்.

இரண்டாவது, பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு - நிதி ஒதுக்கியிருக்கிறீர்கள்; சீரமைப்புச் செய்திருக் கிறீர்கள். அதற்காக எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளைப்பற்றி, கலைஞர் கவலைப்பட்டார்; அவருடைய தனயன் வந்து, அந்த முள்ளை எடுத்தார். எல்லோருக்கும் சிறப்பான ஒரு மகிழ்ச்சியைத் தந்தீர்களோ, அதுபோல, போதைப் பொருள்கள் பெரிய அளவிற்கு எப்படி உள்ளே வருகின்றனவோ, அதைவிட மிக ஆபத்தான சூழல் வருகிறது - மூடநம்பிக்கைகள் அதிகம் கிளம்புகின்றன.

மூடநம்பிக்கை ஒழிப்புக்கென்றே ஒரு தனிச் சட்டம் கொண்டு வாருங்கள்!

பாலியல் வன்கொடுமை - பெண்களிடத்திலே தவறாக நடப்பதற்குக் காரணம் - பக்தி என்ற பெயராலே, சடங்குகள், மாந்திரீகம் என்ற பெயராலே அங்கங்கு மிகப்பெரிய அளவிற்குத் தவறுகள் நடக்கின்றன மூடநம்பிக்கையின் காரணமாக.

கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கென்றே ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்; மகா ராட்டிரத்தில் தனிச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சி இதை செய்யவில்லையானால், வேறு எந்த ஆட்சியிலும் அதை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அதனை  செய்யுங்கள். அதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான்.

அரசமைப்புச் சட்டத்தின்படிதான்!

அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு என்ற பிரிவில்,

It shall be the duty of every citizens of India-

to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform

என்று தெளிவாக சொல்லி இருக்கின்ற காரணத்தால், இந்திய அரசமைப்புச் சட்டப்படி நாங்கள் அந்தச் சட்டத்தை உருவாக்குகிறோம் என்று சொல்லி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுங்கள்.

ஒரு பக்கத்திலே பகுத்தறிவு, இன்னொரு பக்கத்திலே சுயமரியாதை - எல்லா பக்கங்களிலும் சமூகநீதி என்பதற்கு நீங்கள்தான் மிகப்பெரிய சாதனையாளராக இருக்கின்றீர்கள். உங்களுடைய சாதனை தொடரட்டும். எங்களை அதுதான் உற்சாகப்படுத்துகிறது.

தமிழ்நாடு அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை என்றார் முதலமைச்சர் அண்ணா!

அய்யா அவர்கள், பொது மருத்துவமனையில் இருந்த நேரத்தில், அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘இந்த அமைச்சரவையோ தந்தை பெரியாருக்குக் காணிக்கை'' என்று.

முனுஆதி கேட்டார், ‘‘பெரியாருக்குத் தியாகி மானியம் உண்டா?'' என்று.

அதற்கு அண்ணா அவர்கள், ‘‘இல்லை. இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை'' என்று பதில் சொன்னார் சட்டமன்றத்திலேயே!

‘‘எனக்கு வலி தீர்ந்தது'' என்றார் தந்தை பெரியார்!

இந்தத் தகவலை, அய்யா அவர்களிடம் சென்று சொன்னேன்.

படுத்திருந்த அய்யா அவர்கள், எழுந்து உட்கார்ந்து, ‘‘எனக்கு வலி தீர்ந்தது'' என்று சொன்னார்.

இதை நான் பெட்டிச் செய்தியாக ‘விடுதலை’யில் போடலாமா? என்று கேட்டேன்.

‘‘தாராளமாகப் போடலாம்; சொன்னதைத்தானே போடப் போகிறீர்கள்’’ என்று சொன்னார்.

கொள்கையினுடைய வெற்றியின் 

சின்னமாக இருக்கிறீர்கள்!

அதுபோன்று, உங்களுடைய ஒவ்வொரு சாதனையும் - ஒவ்வொரு நாளும், காலை, மாலை என்று தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பாராட்டி எழுதுவ தற்குக்கூட நேரமில்லை - வரவேற்று எழுதுவதற்குக்கூட நேரமில்லாத அளவிற்கு - வேகமாக செய்யக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்கின்ற சாதனைகளைப் பார்க்கின்றபொழுது,  இன்னும் ஆயிரம் பயணங்களை நாங்கள் செய்யலாம். எங்களுக்கு வலி வராது; சோர்வு வராது; இந்தக் கொள்கையினுடைய வெற்றியின் சின்னமாக இருக்கிறீர்கள்.

பல்லாண்டுகாலம் சிறப்பாக வாழுங்கள்!

பயணங்கள் முடிவதில்லை -

லட்சியங்கள் தோற்பதில்லை!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயண விளக்க உரையாற்றினார்.








 

No comments:

Post a Comment