திராவிடர் கழகம் நடத்தும் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம் வெற்றி பெறட்டும்! வைகோ வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

திராவிடர் கழகம் நடத்தும் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம் வெற்றி பெறட்டும்! வைகோ வாழ்த்து

சென்னை,ஏப். 29- தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் சார்பில்  நாளை நடைபெறுகின்ற எழும்பூர் ரயில் நிலையத்தில் பெயர்ப்பலகையில் ஹிந்தி அழிப்புப் போராட்டத்துக்கு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,

“எப்பக்கம் புகுந்து வரும் இந்தி

எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் இந்தி”

என்னும் உணர்வு, கழக இளைஞர் அணிப் பட்டாளத்தைத் திரட்டிக் கொண்டு, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், இந்திப் பெயர் அழிப்பு அறப்போரில் நாளை களம் காண்கின்றார், தமிழர் தலைவர் மானமிகு அண்ணன் ஆசிரியர் கி.வீரமணி!

கொளுத்துகின்ற வெயிலையும், உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது, மோடி அரசின் தமிழர் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து மாபெரும் விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி முடித்த சூட்டோடு, வாய்மைப் போருக்கு இளையவராக, அண்ணன் கி.வீரமணி அவர்கள் தார்ச் சட்டி, தூரிகை ஏந்தி, நம்மீது திணிக்கப் பட்டுள்ள இந்திப் பெயர்களை அழிக்க இதோ வீதிக்கு வந்து விட்டார்.

இந்திக்கு ஆதரவாக அமித் ஷாக்கள் கொக் கரிக்கும் காலம் இது! இந்தியையும் - சமஸ்கிருதத் தையும் ‘ஒரே மொழி; ஒரே நாடு’ என்று முழங்கிக் கொண்டே நாடு முழுக்க முரட்டுத்தனமாகத் திணித்து வரும் மோடி அரசின் காலம் இது!

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தொடர் வண்டி நிலையங்களில் இந்தி எழுத்து களை தார் பூசி அழித்ததால்தான், முதலாவது இடத்தில் தமிழ்ப் பெயர் இடம்பெற முடிந்தது!

1985 ஆம் ஆண்டில், இதே போல எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு, இந்திப் பெயர் அழிக்க திராவிடர் கழகத் தோழர்களோடு ஆசிரி யர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் எழுச்சி நடைபோட்டு அணி வகுத்ததும், வீரமணி வென்றிடுக! வெற்றி மணி ஒலித்திடுக! என்று முரசொலித்து, தார்ச் சட்டியையும், தூரிகையையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் அளித்து, உரிமைப் போரைத் துவக்கி வைத்தது என் நெஞ்சில் நிழலாடுகின்றது!

சரித்திரம் திரும்புகின்றது! (History repeats itself) என்ற சொற்றொடருக்கு ஏற்ப, மீண்டும் அதே இடத்தில் அறப்போர் தொடர்கின்றது.

கேரளம், ஆந்திரம், கார்நாடகம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என நாடு முழுக்க இந்தி எதிர்ப்புக் கனல் மோடி அரசின் முரட்டுத்தனமான நடவடிக்கையை கனன்று எரிகின்ற வேளையில், திராவிடர் கழகம் நடத்தும் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியா முழுவதும் பற்றிப் பரவும் என்பதில் துளி அளவும் அய்யம் இல்லை!

“ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள் -நீ; தேடிவந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்ற பாவலர் பாலசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளுக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில் திராவிடர் கழகம் நடத்திடும் இந்தி எதிர்ப்புப் போருக்கு மறுமலர்ச்சி திமுக வாழ்த்து உரைக்கின்றது.

இந்தித் திணிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண, அரசு அமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்ட வணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்கிட இந்தப் போராட்டம் பெரிதும் பயன்படும் என்ற உணர்வோடு, ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களையும், அவருடன் களம் காணும் மொழிப்போர் மறவர் களையும் மறுமலர்ச்சி திமுகழகத்தின்  சார்பில் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்; பாராட்டு கிறேன்.

-இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment