தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களின் இந்தியத் தலைநகர் டில்லி பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.
தலைநகரில் அண்ணா, கலைஞர் பெயரில் கட்சி அலுவலகம் திறப்பு விழாவுக்குச் செல்லும் வாய்ப்பில் பிரதமர் உள்பட ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி உள்பட அனைவரையும்சந்தித்து முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளார்.
பிரதமருடனான சந்திப்பில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக அளித்துள்ளார்.
'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு, மேக தாது பிரச்சினை, இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் கொடுமைக்கு முடிவு, கச்சத் தீவு மீட்பு, கடந்த பிப்ரவரி வரை நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பான ரூ.13,504.74 கோடியை உடனடியாக விடுவித்தல், உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்பு தடைபட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அம்மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தொடர ஆவன செய்தல், தேசிய புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுதல், நியூட்ரினோ திட்டத்தை கைவிடுதல், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுப் பொருட்களைத் திரும்ப ரஷ்யாவுக்கே அனுப்புதல், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களைத் தமிழ்நாட்டில் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் - உட்பட தேவையான அவசியமான தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரதமரிடம் தமிழ்நாடு முதல் அமைச்சர் வலியுறுத்தி இருப்பது கட்சிகளைக் கடந்து வரவேற்கப்பட வேண்டிய பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையும், முயற்சியுமாகும்.
பொறுப்பு வாய்ந்த தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் - முதலமைச்சர் பிரதமர் சந்திப்பைக் கொச்சைப்படுத்தியிருப்பது கொச்சைத்தனமானது.
'நீட்'டைப் பொறுத்த வரை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டு ஆளுந ருக்கு அனுப்பப்படவில்லையா?
இப்பொழுது தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இரண்டு முறை சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படவில்லையா? எதிர்க்கட்சியான அ.இ.அ.தி. மு.க.வும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா?
நியாயமாக பிரதமரிடம் முதல் அமைச்சர் 'நீட்' தொடர்பாக வலியுறுத்தியமைக்கு எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. முதல் வரவேற்பை அல்லவா கொடுக்க முன்வர வேண்டும்.
மாறாக தனிப்பட்ட காரணங்களுக்காக பிரதமரை முதல் அமைச்சர் சந்தித்தார் என்பதெல்லாம் தரக் குறைவான விமர்சனமாகும்.
அதுபோலவே முகமூடி அணிந்து வரும் புதிய கல்விக் கொள்கை என்னும் குலக்கல்வியைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது - வெறும் தமிழ்நாட்டுப் பிரச் சினை மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தலையில் விழும் பாறாங்கல்லைத் தடுக்கும் முயற்சியாகும்.
எப்படி பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு என்ற நிலை தி.மு.க. அரசின் சட்டப் போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்டு, இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கானதோ, அது போன்றதேதான் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற முதல் அமைச்சரின் வலியுறுத்தல் ஆகும்.
மேகதாது பிரச்சினையும் முக்கியமானது; ஏற்கெனவே உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளைப் புறந்தள்ளி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொண்டு வருகிறதே, அதுபோலவே மேகதாது அணை கட்டும் பிரச்சினையிலும் கருநாடகம் அடம் பிடிக்கிறது. இதில் என்ன கொடுமையென்றால் கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கருநாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் துணை போவதுதான்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இரண்டொரு நாளில் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், மின்துறை அமைச்சர், டில்லி முதல் அமைச்சர், காங்கிரஸ் தலைவர் என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சந்தித்து இருக்கிறார். இது ஒரு பெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டின் நலன் கருதி இந்த அரும் சாதனையை நிகழ்த்திய நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை கையொலி எழுப்பி தமிழகம் பாராட்டுகிறது வரவேற்கிறது! இதுதான் "திராவிட மாடல்" ஆட்சி - "வெல்க திராவிடம்!"
No comments:
Post a Comment