சந்நியாசி பேச்சா இது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

சந்நியாசி பேச்சா இது?

இந்தியா விரைவில் ஹிந்து தேசம் ஆக மாறும் என்றும், ஹிந்துக்கள் தலா 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பெண் சாமியார் பேசியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான ‘துர்கா வாகினி’யின் தலைவர் சாமியாரிணி ரிதம்பரா. இவர் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பிரபல மானவர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ராம் மகோத்சவ் நிகழ்ச்சியில் பேசியபோது, 'ஹிந்துப் பெண்கள், நாம் இருவர் - நமக்கு இருவர் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், ஹிந்து தம்பதியர் அனைவரும் தலா 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவற்றில், 2 குழந்தைகளை தங்களுக்கென வைத்துக் கொண்டு, மீதி 2 குழந்தைகளை  ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்களை ஹிந்து மதப் பாதுகாப்பு தொண்டர்களாக்க வேண்டும்’’

மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு இருந்தால், நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்காது. இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும். இந்தியா விரைவில் ஹிந்து தேசம் ஆக மாறும். அரசியல் பயங்கரவாதம் மூலம் ஹிந்து சமுதாயத்தைப் பிளக்க நினைப்பவர்கள், மண்ணைக் கவ்வுவார்கள்" என்று சாமியாரிணி ரிதம்பரா கூறினார்.

இவ்வளவுக்கும் இவர் பெண் சந்நியாசியாம். ஒரு பெண் சந்நியாசி பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

இவர் பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம் ஒன்றைத் தவறாமல் சொல்லக் கூடியவர்.

"இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பிணி ஆக்குங்கள். அவர்கள் வயிற்றில்  இந்துக் கரு ஜெனிக் கட்டும்" என்பதுதான். ஒரு சந்நியாசிப் பெண்ணின் வாயிலி ருந்து வெளிவரும் "பாற்கடலில்" கடைந்தெடுத்த 'அமிர்தம்!" இது.

குழந்தைப் பேற்றுக்காக உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டு எவருடனும் புணரலாம் என்பதுதானே அம்மதத்தின் "அருள் உபதேசம்!"

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கத்தில் அரசு பிரச்சாரம் - விளம்பரம்! இன்னொரு பக்கத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சந்நியாசிப் பெண்ணின் பிரச்சாரம் - "இந்துக்களே ஒவ்வொருவரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்பது! முரண்பாட்டின் அவலட்சணம்தானே ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்.

மக்கள் தொகை இந்தியத் துணைக் கண்டத்தில் 130 கோடியை எட்டியுள்ளது. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா.

இரவு உணவு இன்றி 20 கோடி மக்கள் உறங்கச் செல்லுகின்றனர். நடைபாதையில் வா(டு)ழும் மக்களும் கோடிக்கணக்கில். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவலத் தின் அடி மடியில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஹிந்து மக்கள் அதிகரிக்க வேண்டும் என்று சொல்லுவதற்கு ஒரு கட்சி - ஆட்சி என்றால் எத்தகைய அபாயம்!

ஹிந்து மக்கள் அதிகரிப்பதால் அந்த மக்களுக்கோ, நாட்டுக்கோ என்ன இலாபம்? 

பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டே இருப்பதுதான் பெண் களுக்கு வாழ்க்கையா? இதில் மதப் பிரச்சினை மட்டுமல்ல; பெண்ணடிமைத்தனமும் மேலோங்கி நிற்கவில்லையா?

இதற்குக்கூட அவர்கள் சமாதானம் கூறக் கூடும். பெண் என்பவர் ஹிந்து மதத்தில் ஓர் அடிமைப் பிறவிதானே!

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பாகவத்தின் கருத்து இந்த வகையில்தானே இருக்கிறது. பெண்களுக்குச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 விழுக்காடு என்பது வெறும் கனவாகிவிடவில்லையா?

எந்த வகையில் பார்த்தாலும் இந்தசங்பரிவார்களின் இருப்பும் போக்கும் ஆபத்தானவைகளே!

No comments:

Post a Comment