மதுரை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
மதுரை, ஏப்.7 ஆளுநரிடம் நாம் பிச்சை கேட்கவில்லை; சலுகை கேட்கவில்லை; அரசமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமையைக் கேட்கிறோம் என மதுரையில் நேற்று (6.4.2022) நடைபெற்ற பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாத முழக்கமிட்டார்!
தேனி
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் தேனி மாவட்ட தலைவர் ச.ரகுநாகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் அனை வரையும் வரவேற்று பேசினார். கம்பம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், கம்பம் மாவட்ட செயலாளர் சிவா, பொதுக் குழு உறுப்பினர்கள் டி.பி.எஸ்.ஆர்.ஜெனார்த்தனன், பேபி சாந்தாதேவி, மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கத்தில் கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் தி.மு.க.மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், சி.பி.எம்.பொறுப்பாளர் முருகன், சி.பி.அய். பொறுப்பாளர் பெத்தரட்சி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தலித் மக்கள் சம்மேளனம் தலைவர் முத்து.முருகேசன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், தேனி நகர தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளிராசு நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் தனது உரையில்,
அனிதாவை நினைவு கூர்ந்து பேசினார். உழைக்கும் தோழர் ஒருவரின் மகள் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப் பெண் வாங்கியதையும், அதே அனிதா நீட் தேர்வில் 83 மதிப்பெண் பெற்று தோற்றுப் போனதால் தற்கொலை செய்து கொண்டதையும், அதைத் தொடர்ந்து சுமார் 20 மாணவர்கள் இறந்து போனதையும் சுட்டிக்காட்டி, அதற்குக் காரண காரியங்களை எடுத்துரைத்தார்.
கல்வி மறுக்கப்பட்டுவந்த நமக்கு இந்த 100 ஆண்டு காலமாக திராவிடர் இயக்கம் பெற்றுத்தந்த உரிமையை ''கரை யான் புற்றெடுக்க, கருநாகம் புகுந்தது போல'', பறிக்க திட்ட மிடுகிறார்கள் என்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்தை விளக்கினார்.
”சரி அவர்கள் சொன்னபடியே நீட் தேர்வின் நோக்கமாகச் சொன்னது நிறைவேறி இருக்கிறதா?” என்று ஒரு கேள்வி கேட்டு, வரிசையாக ஒவ்வொன்றுக்கும் பதிலளித்து நோக்கம் நிறைவேறவில்லை என்பதைத் தாண்டி, ஊழலும், நிர்வாக சீர்கேடும் மலிந்துவிட்டதை உதாரணங்களுடன் மெய்ப் பித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் ''நீட் நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்குத் தரவேண்டும்'' என்று இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, எந்த அளவுக்கு ஒன்றிய அரசு சட்டவிரோதமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். ஒன்றிய அரசைப்பற்றி அப்படிக் குறிப் பிட்டவர், தமிழ்நாடு ஆளுநரைப் பற்றி குறிப்பிடும் போது, “அரசமைப்புச் சட்டத்தை மீறி, 'தானடித்த மூப்பாக' நடந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். அது மட்டுமல்ல, ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த முயல்வதை போட்டுடைத்தார். நீட் தேர்வு பள்ளிகளைப் புறக்கணித்து கோச்சிங் சென்டர்களை ஊக்குவிப்பதாகவும், முதலாளி களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
“நீட் நுழைவுத் தேர்வு, புதிய தேசியக் கல்வி போன்ற வற்றைத் திரும்பப் பெறவேண்டுமென்று நாம் போராடிக் கொண்டிருக்கும்போது, ''ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள்'' என்பதைப் போல அடுத்து 'கியூட்' தேர்வு வர இருக்கிறது. நீட்டோ, கியூட்டோ இவற்றையெல்லாம் மியூட் ஆக்க வேண்டும் என்று சொல்லி ஆதிக்கம் எந்தள வுக்குச் சென்றாலும், நாங்கள் போராடுவதை நிறுத்தமாட்டோம் என்றார்.
மக்களும் விசயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஆசிரியரின் 'நீட், கியூட், மியூட்' எனும் ஆங்கிலச் சொல் லாடல்களையும் ரசித்து கைதட்டினர்.
ஒருபக்கம் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த ஆசிரியர், எதேச்சதிகாரத்துடன் இதை யெல்லாம் செய்கின்றவர்கள் கதி என்ன என்பதை இலங்கை யில் நடக்கும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, ஹிட்ல ருக்கு வரலாற்றில் குப்பைத் தொட்டியில்கூட இடமில்லை என்று கூறி, ஆள்பவர்களுக்கு நேரவிருக்கும் ஆபத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவற்றுக்கெல்லாம் பின்னணி யாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தேனியிலும் ஷாகாக்களை தொடங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, காலையில் இல்லத் திறப்பு விழாவில் சுட்டிக்காட்டியதைப் போலவே அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரை அருகில் வைத்துக்கொண்டு சொன்னார்.
தேனி கூட்டத்தை முடித்துக்கொண்டு, இரண்டு மணி நேரம் பயணம் செய்து மதுரை வந்தடைந்தார் தமிழர் தலைவர்.
மதுரை
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் மதுரை செல்லூர் 50 அடி சாலையில் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமையில் நேற்று (6.4.2022) இரவு நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, மண்டலத் தலைவர் கா.சிவகுருநாதன், மண்டல செயலாளர் நா.முருகேசன், புறநகர் மாவட்டத் தலைவர் தனபாலன், மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில வழக் குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில வழக்குரை ஞரணி துணை செயலாளர் நா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் இணைப்புரை வழங்கினார்.
தொடக்கத்தில் கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்.முத்துராம லிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் உரையாற்றி முடித்தவுடன், நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை யாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்ட தாவது:
’நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு’ எனும் தலைப்பிலான பரப்புரைக்காகத் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, “நீட் தேர்வு காங்கிரஸ் இருக்கும்போது கொண்டு வந்தது. இதை அப்போதே ஏன் எதிர்க்கவில்லை?” என்ற ஒரு கேள்வியை படித்துக்காட்டினார். விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது அப்போது.
“ஆதாரங்களுடன் நாங்கள் பதில்களை
கொடுத்திருக்கிறோம். மறுக்கட்டுமே யாராவது?” என்று சவால் விட்டார். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடாதா எனும் ஆசையில் கோயபல்சின் குருநாதர்கள் முயற்சி செய்கிறார்கள். அது இங்கே நடக்காது. காரணம், தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன என்று தொடங்கி, பா.ஜ.க.வைத்தவிர என்று முடித்தார். மக்களும் இதனை ஆதரிப்பது போல, கைகளை பலமாகத் தட்டினர். தமிழ்நாட்டைப் பற்றி குறிப்பிட வந்தவர், “இந்தக் கூட்டணி தேர்தலில் மலர்ந்தது அல்ல. போராட்டக் களத்தில் உருவானது. இது கொள்கைக் கூட்டணி. மேலும் இந்தப் பிணைப்பு உறுதியாகிக் கொண்டே செல்கிறது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடே ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக இருப்பதை சொல்லாமல் சொன்னார்.
பின்னர் தமிழ்நாட்டைப்பற்றி மேலும் குறிப்பிடவிரும்பி, “தமிழ்நாட்டில் சமூகநீதி தொடங்கி 102 ஆண்டுகள் ஆகின்றன. இராஜகோபாலாச்சாரி கொண்டுவந்த குலக்கல் வியை ஒழித்து, காமராஜர் வந்து நாடெல்லாம் பள்ளிக்கூடங் களைத் திறந்து, அண்ணா, கலைஞர் அனைவரும் சமூக நீதிக்காக போராடி வாங்கித் தந்தயெல்லாம் பறிப்பது போலல் லவா இருக்கிறது? இந்த புதிய தேசியக் கல்வியில் சமூகநீதி என்ற சொல்லே கிடையாது. நாங்களும் 'பூதக்கண்ணாடி' வைத்து தேடிப் பார்த்துவிட்டோம். இல்லை. இதை தமிழ்நாடு எப்படி ஏற்கும். அந்த வரிசையில் இப்போது இருக்கின்ற முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சரான தளபதி மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. போல அல்லாமல், ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை கொடுத்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று மனதாரப் பாராட்டினார்.
“ஆளுநரிடம் நாம் ஒன்றும் சலுகை கேட்கவில்லை, பிச்சை கேட்கவில்லை. நமது உரிமையைக் கேட்கிறோம் என்று கூறியபோது, மக்களின் கைதட்டல்களால் அந்த இடம் அதிர்ந்தது. “அதுவும் அரசியல் சட்டப்படியான உரிமையை கேட்கிறோம்” என்று அந்த வாக்கியத்தை முடித்தார். அதைக் கேட்டு மேடையில் இருந்தவர்களும் கைகளைத் தட்டினர்.
“அரசமைப்புச் சட்டத்தை மீறுவது யார்?” என்றொரு கேள்வியை அறிவு வெடிகுண்டாக வீசினார். அத்தோடு விடவில்லை ஆளுநரை,“மாநிலங்கள் வளரக்கூடாது என்று பேசுகிற விசித்திரமான ஆளுநரை நாம் பெற்றிருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு, “அரசின் கொள்கை கொள்கை முடிவில் நீதிமன்றங்களே தலையிடுவதில்லை. தலையிடுவதற்கு இவர் யார்?” என்று காட்டமாகக் கேட்டுவிட்டு, “இவர் டில்லியின் ஒற்றர். அவ்வளவுதான். என் மீது வழக்குப் போடட்டும். சந்திக்கத் தயாராக இருக்கிறேன். 90 வயது - இதுவே போனஸ் வாழ்க்கை என்று கூறிவிட்டு, அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கி, பதில்களையும் சரமாரியாகக் கொட்டி னார்.
தொடர்ந்து அரசமைப்புச் சட்டப்படி கல்வி அடிப்படை உரிமை அதுவும் மீறப்பட்டிருக்கிறது என்றார்.
ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டை நீங்கள் ஆள முடியாது என்று பா.ஜ.க.வைப் பார்த்து சொன்னார். அதை கல்வெட்டில் பொறித்து வைக்கவேண்டும். அவர்களால் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த முயல்கிறார்கள். அதன் மூலமாக நம்மிடையே ஆத்திரத்தை மூட்டி, அதன் மூலம் எதையாவது செய்ய எண்ணுகிறார்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ்.சின் மறைமுகமான செயல்திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.
”இது நமது செல்வங்களுக்காக மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பவர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடு கிறோம். உங்களைச் சந்திக்க மீண்டும் வருவோம், 'நீட்'டி லிருந்து மீண்டு வருவோம் என்று கூறி மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
இந்த பரப்புரை கூட்டத்தில் மேனாள் சட்டமன்ற உறுப் பினர் வேலுச்சாமி, ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன், காங்கிரசு கட்சி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் நந்தா சிங், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கணேசன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் முருகன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் கதிரவன், பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் கதிரவன், வல்லரசு, பார்வர்ட் பிளாக் தலைவர் அம்மாவாசி, தமிழ்ப் புலிகள் கட்சிப் பொறுப்பாளர் பேரறிவாளன், தேசிய லீக் தலைவர் நாகூர் ராஜா , காங்கிரசு கட்சி தேனி மாவட்டத் தலைவர் கூடலூர் முருகேசன், காங்கிரசு கட்சி தெற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் வைரமுத்து, ம.தி.மு.க. தொழிலாளரணி செய லாளர் மகபூப் ஜான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment