கொடைக்கானல், ஏப்.1 சூரியனில் தோன்றி வரும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானியல் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வானியல் ஆராய்ச்சி மய்யம் உள்ளது. இங்கு சூரியனின் நிகழ்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சூரிய காந்த புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் விண்வெளி செயற்கைகோள்கள் மற்றும் அலைபேசி அலைவரிசைகள் பாதிக்கலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து வானியல் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள் கூறுகையில், சூரியனை நான்கு தொலை நோக்கிகள் உதவியுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மேலும் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். கடந்த சில நாட்களாக இந்த கரும்புள்ளிகள் அதிக அளவில் தோன்றி வருகிறது.
இதனால் இனி வரும் நாள்களில் அதன் வீரியம் அதிகரித்து, சூரிய காந்த புயலாக மாறி பூமிக்கு வீசும். இதன் காரணமாக பூமியில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த மாற்றத்தால் இனி வரும் நாள்களில் சூரியனை தொடர்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவு செய்ய இருக்கிறோம். அதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
No comments:
Post a Comment