அவரது ஓட்டம் அனைவர்க்கும் ஊக்கம்! சுப. வீரபாண்டியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

அவரது ஓட்டம் அனைவர்க்கும் ஊக்கம்! சுப. வீரபாண்டியன்

எண்பது வயது தாண்டிய ஒருவரை, வெளியில் போகும்போது கைபிடித்து அழைத்துச் செல்வதுதான் இயல்பு. ஆனால் 88 வயதைக் கடந்த ஒருவர், எல்லோரையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் அதிசயம் இப்போது தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது!

அந்த அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டி ருப்பவர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். வரும் டிசம்பர் மாதம் அவர் தன் 90ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். ஆனால் அவர்தான் இப்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தங்கள் கொள் கைகளைப்  பரப்புவதற்குப் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி, நாகர்கோயிலில் தன் பயணத்தைத் தொடங்கிய அவர், வரும் 25ஆம் தேதி சென்னையில் அதனை  நிறைவு செய்கிறார். முடித்து வைக்க இருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்!

ஒவ்வொரு நாளும் இரண்டிரண்டு ஊர்களில் பொதுக்கூட்டங்கள்! இடையில் மக்களோடும், தொண்டர்களோடும் சந்திப்பு. இடைவிடாத படிப்பு, எழுத்து, பேச்சு என்று தொடரும் இந்தப் பயணம் நம் நாட்டிற்கானது. நம் பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கானது!

ஆம், நீட் தேர்வு என்னும் பலிபீடத்தை எதிர்த்தே. தமிழர் தலைவர், ஆசிரியர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் நம் பிள்ளைகள் பள்ளிகளில் படித்துப் பெற்ற மதிப்பெண்களை மதிப்பற்றனவாக்கி, அவர் களின் மருத்துவக் கல்லூரிக் கனவுகளுக்கு குறுக்கே நீட் என்னும் ஒரு பலிபீடத்தைக் கொண்டுவந்து நிறுத்தி யுள்ளது இந்திய ஒன்றிய அரசு! அந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து விடும் என்பதும் கூட  உறுதியில்லை. அவர்களின் தரப்பட்டியலைப் பொறுத்தே இடம் கிடைக்கும்.

நீட் என்னும் இந்தக் கொடுவாளை எதிர்த்துத்  தமிழ்நாடே நிற்கிறது. குறிப்பாக இன்றைய தமிழ்நாடு அரசு அதனை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிமை யாக முன்வைத்துள்ளது. பதவி யேற்ற மறு  மாதமான ஜூன் மாதமே, நீதிபதி .கே. ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, ஜூலை மாதத்தில் அந்தக் குழுவின் அறிக் கையைப் பெற்றது. உடனே செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பிறகும்,ஆளுநர் அசையாமல் இருக்கிறார். இந்த மக்கள் விரோதப் போக்கு மக்களிடையே ஒரு கோபத்தை உருவாக்கி யுள்ளது. .

கோப அலைகள் கொப்பளிக்க, ஆதரவு அலைகள் அணிதிரள, ஆசிரி யரின் பயணம் நடைபோடுகின்றது. இந்த வயதிலும் அவரை இப்படி இயக்குகின்ற நெருப்பு எது? அய்யா பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட அணையா நெருப்பாம்  சமூக நீதிதான் அது!  அதனால்தான் 90 வயது என்னும் சிந்த னையைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்!

அவரது ஓட்டம், நம் அனைவர்க்கும் ஊக்கம்!

- 'கருஞ்சட்டைத் தமிழர்'

ஏப்ரல் 4, 2022 (வார இணைய இதழ்)

No comments:

Post a Comment