கொள்கைப் பிரகடனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

கொள்கைப் பிரகடனம்!

சென்னைப் பெரியார் திடலில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் (நாகர்கோயில் முதல் சென்னை வரை திராவிடர் கழகம் நடத்திய விழிப்புணர்வுப் பயணம் நிறைவு விழா) சமூக நீதிக்கான சரித்திர நாயகர் - தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு வெறும் உரையல்ல - கொள்கைப் பிரகடனமாகும்.

1. கருப்பையும், சிவப்பையும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது என்றார்.

இதை இப்பொழுது மட்டும் அவர் சொல்லவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் (24.2.2019) பிரகடனப்படுத்தினார்.

"தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக்கின்றேன்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திராவிடர் கழகம் என்று சொல்லமாட்டார். ‘தாய்க் கழகமாம் திராவிடர் கழகம்' என்று; அடிக்கடி அல்ல; தொடர்ந்து எடுத்துச் சொல்வார். அதனைப் பின்பற்றித்தான் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் அழைத்தவுடனே, ஆசிரியர் அவர்கள் எந்தச் சூழ்நிலையில் எந்தப் பணிகள் இருந்தாலும் இந்த மாநாட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்று அன்பு அழைப்பாக அல்ல, அன்புக் கட்டளையாக எனக்கு வழங்கி அந்தக் கட்டளையை நானும் சிரமேல் ஏற்றுக் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன். தாய் என்றால் - உயிர் கொடுத்தவள்; உணர்வைக் கொடுத்தவள், தாய் என்றால் நம்மை வளர்த்தவள். ஏன் வழிகாட்டக் கூடியவள். ஆமாம் திராவிடர் கழகம் தான்! திராவிட உணர்வுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. திராவிடர் கழகம்தான் திராவிட இயக்கத்திற்கு உணர்வைக் கொடுத்திருக்கிறது, திராவிட உணர்வை வளர்த்தெடுத்து, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. நேற்றைக்கும் வழிகாட்டியது, இன்றைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, நாளைக்கும் அது தான் வழிகாட்டப் போகிறது."

(தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் 24.02.2019 அன்று நடைபெற்ற சமுகநீதி மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை)

"வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும் சக்திகளின் அதிகாரக் கரங்களால் ‘நீட்' திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ - மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. 

மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன ஜம்மு - காஷ்மீரில் தொடங்கி புதுச்சேரி யூனியன் பிரதேசம் வரை மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு திணிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழி யைக் கந்தலாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்துவதற்கான சதிவலை பின்னப்படுகிறது. இன்னும் பல வடிவங்களில் மனித உரிமை களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ள இந்தக் காலச்சூழலில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் நம்மிடையே இல்லை என்றாலும், அவர்கள் வழங்கிய இலட்சிய தீபம் நம் கைகளில் அணையாத அற்புத விளக்காகச் சுடர் விடுகிறது.

அந்தச் சுடரை உயர்த்துவோம்! இனப்பகை எனும் இருட்டை விரட்டு வோம்! ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவள விழாவினை நமது பயிற்சிக்களமாக்குவோம். மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுரைகளுக்குச் செவிமடுப்போம். தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்."

(தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 27.8.2019 அன்று ‘முரசொலி'யில் எழுதிய கடிதம்)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளில் ‘முரசொலி'யில் (2.12.2018) தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துச் செய்தியில்,

"எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், திராவிடர் கழகம் என்ன சொல்கிறது? ஆசிரியர் என்ன அறிக்கை கொடுக்கிறார் என்றுதான் கலைஞர் அவர்கள் உற்றுக் கவனிப்பார்கள். அப்படித்தான் நாங்களும் கவனிக்கிறோம். நாங்கள் செல்லும் பாதையைப் பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. மதவாத ஆபத்தும், ஜாதி வெறியும் தலை தூக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை" என்று எழுதினாரே!

ஆட்சிக்கு வந்த பிறகும் அத்தகைய பிரகடனம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கடந்த 25ஆம் தேதி பிரகடனத்தில் கருப்பையும் - சிவப்பையும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது என்ற முதலமைச்சரின் பிரகடனம் அதனுடைய தொடர்ச்சியாகும்.

இரண்டாவதாக ‘நீட்' என்பது உயர் வர்க்கத்திற்குக் கல்வியை மாற்றும் ஏற்பாடு என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மூன்றாவதாக புதிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களை கல்வி நிலையத்திற்குள் செல்ல விடாமல் தடுப்பதுதான் என்ற உயர்ஜாதி பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார்.

எந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாகர்கோயில் தொடங்கி சென்னை வரை திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டதோ, அவற்றை வழிமொழியும் வகையில் முதலமைச்சர் இந்தக் கருத்துகளை அழுத்தமாகவே பதிவு செய்தார்.

திராவிடக் கொள்கையின் அடிப்படை சங்கநாதக் கொள்கைகள் தாம்  இவை. இனொன்றையும் முதலமைச்சர் சொன்னார்: "மானமிகு ஆசிரியர் அவர்களே! உங்களது கொள்கை உரத்தையும், போராட்டக் குணத்தையும், சளைக்காத உழைப்பையும், வயதை மறந்து செயல்படும் உற்சாகத்தையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இனவுணர்வோடு இளைஞர்கள் திரள வேண்டிய காலமிது! ஆசிரியர் அவர்களே! உங்களுக்கு நான் அளிக்கும் உறுதி மொழி என்பது - இன்றைக்குத் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ‘திராவிட மாடல்' ஆட்சியை எந்தக் காலத்திலும் - எந்தச் சூழ்நிலையிலும் - எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கம் கொள்கைகளின் வழி நின்று நான் நடத்திச் செல்வேன் என்பதுதான்" என்பது கொள்கைப் பிரகடனம் அல்லவா?

"ஆசிரியர் அவர்களே! கொள்கைத் தீபத்தை ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை நீங்கள் தொடருங்கள். ஆட்சிப்  பொறுப்பில் இருந்து திராவிடக் கொள்கைகளை செயலாக்கும் பணியை நாங்கள் செய்கிறோம். திராவிடக் கொள்கைத் தீபத்தின் வெளிச்சத்தில் நமது ஆட்சிப்பயணம் செல்லும் - வெல்லும்! இந்தப் பயணம் வெல்லும் - செல்லும்!" என்று நிறைவாக முத்தாய்ப்பாக முழங்கினாரே - இது ஒன்று போதாதா - சமூக நீதிக்கான சரித்திர நாயகரின் தலைமையில் நடக்கும் ஆட்சியானது நமக்கானது - நம் இனத்துக்கானது - நம் இனத்தின் எதிர்காலத்துக்கானது என்பதைப் புரிந்து கொண்டு எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் தோள் கொடுப்போம்! “திராவிட மாடல்" என்றால் என்ன என்பதை நிலைநிறுத்துவோம்! உலகுக்குப் பறைசாற்றுவோம்! வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!

No comments:

Post a Comment