இன்றைக்கு இருக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி எந்த நிலையிலும் சமரசத்துக்கு இடமின்றி செயல்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 26, 2022

இன்றைக்கு இருக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி எந்த நிலையிலும் சமரசத்துக்கு இடமின்றி செயல்படும்!

  ‘மிசா’ கைதியாக என்னை சிறையில் தாக்கியபொழுது தாங்கிப் பிடித்த ஆசிரியர் இன்றும் தாங்கிப் பிடிக்கிறார்!

திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக - கலங்கரை விளக்கமாக ஆசிரியர் அவர்களைப் பார்க்கிறேன்

89 வயதிலும் உழைக்கும் நமது ஆசிரியர் இளைஞர்களுக்கு உழைப்பிலும் - இலட்சியப் பிடிப்பிலும் வழிகாட்டியாக உள்ளார்

கொள்கைப் பிரகடனம் செய்து முதலமைச்சர் சூளுரை

சென்னை, ஏப்.26   இன்றைக்கு நடைபெறும் ‘‘திராவிட மாடல் ஆட்சி’’யை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ் நிலையிலும், எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று, நான் நடத்திச் செல்வேன் என்றும், நம்முடைய ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகப் பார்க்கிறேன் என்றும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சூளுரைத்தார். 

பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழா! 

நேற்று (25.04.2022) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினர்.

அவரது உரை பின்வருமாறு:

திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகப் பார்க்கிறேன்!

நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தின் தலைவரை,  ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையின் வழிகாட்டி யாக, கலங்கரை விளக்கமாகவே அவரை நான் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத் தான் பார்க்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நேரம், நான் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது, இரவு 12 மணி அளவில் வெளிச்சம் கிடையாது. இருட்டு அறையில் என்னைக் கொண்டுசென்று தள்ளுகிறார்கள். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த அய்யா ஆசிரியர் அவர்களுடைய கால் தடுக்கி விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார்.

“நான் இருக்கிறேன்” என்று சொன்னவர் 

ஆசிரியர் அய்யா அவர்கள்!

நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு காவலர்களால் தாக்கப்பட்ட செய்தி - அதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்போது நான் தாக்கப்பட்ட நேரத்தில் எனக்குப் பாதுகாப்பாக இருந்தவர் ஒருவர் அண்ணன் சிட்டிபாபு அவர்கள். அப்படி தாக்கப்பட்ட நேரத்தில் என்னைத் தட்டிக் கொடுத்து, தடவிக்கொடுத்து எனக்குத் தைரியம் கொடுத்து “நான் இருக்கிறேன்” என்று சொன்னவர் அய்யா ஆசிரியர் அவர்கள்!

89 வயதிலும் ஆசிரியர் அவர்கள் இந்த இனத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

நம்முடைய மானமிகு ஆசிரியர் அவர்களை, இந்த 89 வயதிலும் அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையும், தந்தை பெரியாரும்தான் உள்ளே இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நாகர்கோவில் முதல் சென்னை வரைக்கும் 21 நாட்கள் மாபெரும் பரப்புரைப் பயணத்தை ஆசிரியர் அவர்கள் நடத்தி இருக்கிறார். இன்னும் முடிக்கவில்லை தொடர்வேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் அவர்கள் பயணத்தை நடத்துகிறார் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கோ, அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை. தந்தை பெரியார் அவர்கள் 90 வயதுக்குப் பிறகு தான் அதிகமான கூட்டங்களில் பேசினார்கள். உலகில் இப்படி ஒரு தலைவர் - எந்த ஒரு இனத்துக்கும் கிடைத்ததில்லை. எந்த இயக்கத்துக்கும் இருந்தது கிடையாது. அதேபோல் தான் 89 வயதிலும் ஆசிரியர் அவர்கள் இந்த இனத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அவருக்கு பிறந்தநாள். அவர் 90 வயதைத் தொடுகிறார்கள். இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். அவர் ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப்புக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது. இவை எல்லாம் யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள். தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வரிசையில் ஆசிரியர் அவர்கள் இப்படி நெடிய பயணத்தை இந்த இனத்துக்காக நம்மோடு முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். அத்தகைய சிறப்புக்குரிய ஆசிரியர் அவர்களை உங்களோடு சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அதையும் தாண்டி அவரை நான் வணங்குகிறேன்.

உங்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி!

மானமிகு ஆசிரியர் அவர்களே...

உங்களது கொள்கை உரத்தையும் - போராட்டக் குணத்தையும், சளைக்காத உழைப்பையும் - வயதை மறந்து செயல்படும் உற்சாகத்தையும் இன்றைய இளைய சமுதாயத்துக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இன உணர்வோடு இளைஞர்கள் திரள வேண்டிய காலமிது!  ஆசிரியர் அவர்களே! உங்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி என்பது - இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியை எந்தக் காலத்திலும் - எந்தச் சூழ்நிலையிலும் - எந்தச் சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று நான் நடத்திச் செல்வேன் என்பதுதான்.

உங்களது உழைப்பு வீண் போகவில்லை என்பதன் அடையாளம்!

‘எனக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விட்டது’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்ன போது, ‘உலகத்தில் எந்தச் சீர்திருத்தவாதியும் தனது கொள்கை ஆட்சியில் ஏறி - நடைமுறைக்கு வருவதைப் பார்த்ததில்லை, அய்யா அவர்களே! நீங்கள் அதனையும் பார்த்துவிட்டீர்கள், நீங்கள் சலிப்பு அடையலாமா?’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதேபோலத்தான் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை போராளிகளான உங்களுக்கு நான் சொல்வது, உங்களது உழைப்பு வீண் போகவில்லை என்பதன் அடையாளம்தான் இப்போது நீங்கள் பார்க்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி.

ஆசிரியர் அவர்களே இங்கு குறிப்பிட்டுச் சொன் னார்கள். நீங்கள் தேர்தல் - அரசியலுக்கு வரப்போகிற வர்கள் அல்ல - பட்டம் பதவிகளுக்காக காத்திருப்ப வர்கள் அல்ல - அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் அல்ல - ஆனால் அதிகாரத்துக்கு வராமலேயே இன மானம் காக்கும் உங்களது கருத்தியல் வெற்றி பெற்று வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதை விட என்ன வேண்டும்?

இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியானது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சி யாக அமைந்திருக்கிறது. நம்முடைய சமூகநீதியை,  நாம் பேசிய மாநில சுயாட்சியை, இன்றைக்கு வட மாநிலத் தலைவர்கள், பல முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விழிப்படைந்து வரும் வடமாநில பொதுமக்களும் முழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சாதனை!

கருப்பையும், சிவப்பையும் யாராலும் - 

எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது!

திராவிடச் சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. பெரியார் பெயரை அடிக்கடி சொல்வதைப் பார்த்து அவர்களுக்கு கோபம் வருகிறது. வெறுப்பைச் சுமந்து வாழ்பவர்களுக்கு, திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் ஒட்டி இருப்பது சிலருக்கு எரிச்ச லாக இருக்கிறது. கருப்பையும், சிவப்பையும் யாராலும் - எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது! திராவிடர் கழகக் கொடியிலும் - திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும் - இருப்பது கருப்பும் சிவப்பும்தான். எங்களை ஒன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லக் கூடாது - ஒன்று கலந்துவிட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நாம் அனைவரும் ஒரே இயக்கத்தை - 

ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்கள்தான்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத் தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரையும் ஏற்றுக் கொண்டவர்கள் நாம். தனித்தனி இயக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே இயக்கத்தை - ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்கள்தான். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.

தமிழினத்தை கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் முன்னேற்றத்தில், சமூக மேம்பாட்டில் வளர்த் தெடுப்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழினம் முன் னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள். இது, பல்லாயிரம் ஆண்டு காலப் பகைமையாக இருந்தாலும் -எத்தனை நூற் றாண்டுகள் ஆனாலும் சமத்துவத்தை அடையும் வரை நமது கொள்கையில் வெல்லும் வரை நாம் உறுதியாக இருப்போம்.

நீதிக்கட்சியின் ஆட்சி போட்ட விதைதான் சமூகநீதியின் விதை!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நீதிக்கட்சியின் ஆட்சி போட்ட விதைதான் சமூகநீதியின் விதை!

கல்வி நுழைவு உரிமை!

தீண்டாமை விலக்கு!

பெண்ணுக்கான உரிமைகள்!

இவற்றின் மூலமாகத்தான் இந்த தமிழ்நாடும், தமிழின மும் தலைநிமிர்ந்து நிற்கிறது. நீதிக்கட்சி விதை போட்டது. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அதை வளர்த் தெடுத்தார்கள். பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் அதனைச் செழிக்க வைத்தார்கள். தமிழினம் உயர்வைப் பெற்றது. இத்தகைய இன எழுச்சியைத்தான் தடுக்கப் பார்க்கிறார்கள். அனைவரும் படிப்பதற்குத் தடை போடப் பார்க்கிறார்கள். அப்படித் தடை எழுப்பு வதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டம்தான் நீட் - அப்படித் தடை எழுப்புவதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டம்தான் புதிய கல்விக்கொள்கை, அப்படித் தடை எழுப்புவதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டம்தான் மாநில உரிமைகள் பறிப்பு!

நீட் தேர்வு முறையை 

2013 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் 

நிராகரித்து விட்டது!

இந்த சதித்திட்டங்களின் பின்னணியை விளக் கித்தான் இந்தப் பிரச்சாரப் பெரும்பயணத்தை நம்முடைய ஆசிரியர் அவர்கள் மேற்கொண் டார்கள்.  நீட் மட்டுமல்ல, எத்தகைய நுழைவுத் தேர்வும் - எந்த வடிவிலும் கூடாது என்று சொல்பவர்கள் நாம். நுழைவுத் தேர்வு முறைக்கே 2006 ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தார் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். நீட் தேர்வு முறையை 2013 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

உச்சநீதிமன்றம் நிராகரித்த நீட் தேர்வு, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரை தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைய முடியவில்லை.

ஏன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும்வரை நுழையவிடவில்லை. ஆனால், இருண்டகால ஆட்சியைக் கொடுத்த - கெடுத்த இரட்டையர்கள் ஆட்சிக் காலத்தில்தான் நீட் நுழைந்தது, மாநில உரிமைகளை எல்லாம் அடகு வைத்தார்கள்.

கலைஞரின் வழித்தடத்தில் நாம் நீட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தி.மு.க.வும் ஆதரித்து, சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் அதை ஆதரித்தது. எனவே கட்சிப் பாகுபாடின்றி ஒருமித்த கருத்தோடு - ஒற்றுமை உணர்வோடு எல்லாக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஆதரித்து அதை நிறை வேற்றி, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக நாம் அனுப்பி வைத்தோம். அந்தச் சட்டமுன்வடிவு திரும்ப அனுப்பப்பட்டதைக் கூட ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் மறைத்து, சுயநலத் திற்காக தமிழக இளைஞர்களுக்குத் துரோகம் செய்தவர்கள்தான் இந்த இரட்டையர்கள். அந்த வகையில் தலைவர் கலைஞரின் வழித்தடத்தில் நாம் நீட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

தி.மு.க. அரசு அமைந்த பிறகான முதல் ஆளுநர் உரையிலேயே, நீட் தேர்வுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை நாம் பதிவு செய்தோம்.

 நான் முதலமைச்சராக டில்லிக்குச் சென்ற முதல் பயணத்தில், பிரதமருடனான சந்திப்பிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நான் அழுத்தம் கொடுத்தேன்  -வலியுறுத்தினேன் - வற்புறுத்தினேன்.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் ஜூன் 10 - 2021 அன்று நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்களின் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக்குழுவை அமைத் தோம்.

ஒரு லட்சம் பேரிடம் இந்தக் குழு கருத்தை பெற்றது. 165 பக்க அறிக்கையை 14.07.2021 அன்று இக்குழு அரசிடம் அளித்தது.

செப்டம்பர் 13 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்.

 நீட் தேர்வுக்கு எதிராக ஆந்திரப் பிரதேசம், டில்லி, சத்திஸ்கர், ஜார்கண்ட், கோவா, கேரளா, மகாராட்டிரா, ஒடிசா, பஞ்சாப், இராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, அக்டோபர் 10, 2021 அன்று நான் கடிதம் அனுப்பினேன்.

சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள் என்று நவம்பர் 27 அன்று ஆளு நரை சந்தித்து நான் நேரடியாக கேட்டுக் கொண்டேன்.

நாடாளுமன்றத்தில் நமது நாடாளுமன்ற உறுப் பினர்கள் குரல் எழுப்பினார்கள். குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது. உள்துறை அமைச்சரை சந்தித்து நேரடியாக விவாதித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம்.

காணொலி மூலமாக பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் ஜனவரி 12 ஆம் நாள் நான் வற்புறுத்தி, வலியுறுத்திப் பேசினேன்.

பிப்ரவரி ஒன்றாம் நாள் ஆளுநர் அந்தச் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பினார்.

பிப்ரவரி 5 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் நடத்தி, பிறகு 7 ஆம் நாள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பினோம்.

மார்ச் 15 அன்று ஆளுநரைச் சந்தித்து வற்புறுத் தினேன்.

மார்ச் 31 பிரதமரையும் - உள்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து நான் பேசியிருக்கிறேன்.

ஆளுநரிடம் நான் கேட்பது என்பது சட்டமுன் வடிவுக்கான ஒப்புதல் அல்ல. ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று

சொல்ல முடியுமா?

நாம் கேட்பது, இந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள், ஆசிரியர் சொன்னதுபோல, “போஸ்ட்மேன் வேலை செய்ய வேண்டும்” என்பதுதான். முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறைப் பணியைக்கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால் - நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன், பிரதமர் மோடியே குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநர் இப்படி நடந்துகொண்டால், இப்போது முட்டுக் கொடுக்கின்ற மாதிரித்தான் அப்போது முட்டுக் கொடுத்திருப்பாரா? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இப்படி அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கிறார்களா?

அப்படி மூக்கை நுழைத்தால், மாநில அரசுகள் முடங்கிவிடும்; கை கட்டி வேடிக்கைப் பார்க்கும் என்று நினைக்கிறார்களா?

எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள், இன்று காலைகூட, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கே உண்டு என்ற வகையில் ஒரு சட்டமுன்வடிவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டுத்தான், இந்தக் கூட்டத்திற்கே நாங்கள் வந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டு மக்கள் அவர்களை 

மன்னிக்க மாட்டார்கள்

நீட் தேர்வில் நாடகம் நடத்தியதுபோல், இந்தச் சட்ட முன்வடிவிலும் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து இன்றைக்கு மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா!

எதேச்சாதிகாரத்தால் சாம்ராஜ்யங்களைக் கட்டி யெழுப்பலாம் என யாரும் நினைக்க வேண்டாம்! ‘வரலாறு என்பதே சாம்ராஜ்யங்கள் சரிந்த கதைதான்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டி ருக்கிறார்கள். இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்! மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்பதை ஒன்றிய அரசில் இருப்பவர்களும், அவர்களின் ஏஜெண்டுகளாகச் செயல்படும் ஆளுநர்களும் உணர வேண்டும்!

‘நவீன அறிவுத் தீண்டாமை’ 

நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் தேர்வு மட்டுமல்ல, அது மருத்துவக் கல்வி என்பதை உயர் வர்க்கத்தின் கல்வியாக மாற்ற நினைக்கிற தேர்வு. அதனால்தான் இது ‘நவீன அறிவுத் தீண்டாமை’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டேன்.

புதிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களைப் பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்வி நிலையாகத்தான் மாறப் போகிறது.  ஆனால் அது நிச்சயமாக நடக்காது! இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக்கூடாது என்பதெல்லாம் கட்டுக்கதைகளை நம்பி வாழ்ந்த பழைமைவாத காலம்!

ஆனால், இது இந்த மண்ணிலும் - ரத்தமும் சதையுமாக வாழும் மக்களின் உள்ளங்களிலும், சுயமரி யாதையும், பகுத்தறிவும் வேரூன்றியுள்ள திராவிட இயக் கத்தின் காலம், இங்கு அந்த கட்டுக்கதைக்களுக்கெல்லாம் இடமில்லை!

தந்தை பெரியார் சொன்னார்!

‘எனது இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்குக் காலதாமதம் ஆகலாம். ஆனால், இறுதி வெற்றி எனக்குத்தான்’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இத்தனை ஆண்டுகாலமாக அந்தப் பழைமைவாதத்தை எதிர்த்து நாம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம்! அவர்களது சூழ்ச்சிகளை மக்கள் துணையோடு முறியடித்துள்ளோம்!

நாங்கள் சட்டமன்றத்தில் போராடுகிறோம் - ஆசிரியர் மக்கள் மன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்!

இதில் இறுதி வெற்றி, உறுதியாக சொல்கிறேன், நமக்குத்தான். அத்தகைய நம்பிக்கையுடன் நாம் போராடுவோம். நாங்கள் சட்டமன்றத்தில் போராடு கிறோம். ஆசிரியர் அவர்களும், அண்ணன் வைகோ போன்றவர்களும் மக்கள் மன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

அதே நேரத்தில் ஆசிரியர் அவர்களுக்கும் - அண்ணன் வைகோ அவர்களுக்கும் - உங்களது உடன் பிறப்பு என்ற வகையில் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இருவரும் உங்கள் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நாடு வாழ - இந்த இனம் மேன்மை அடைய உங்களது உடல் நலம் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு என்று சொல்வது, இந்த நாட்டுக்கு மிக முக்கியம். அண்ணன் வைகோ அவர்களின், கால்கள் படாத இடமே தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பே இல்லை. எத்தனையோ நடை பயணங் களை நடத்தியவர். இன எழுச்சியை ஏற்படுத்தியவர் - உருவாக்கியவர். நீங்கள் எல்லாம் விரும்பிய தந்தை பெரியாரின் ஆட்சி - பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

திராவிடக் கொள்கை தீபத்தின் வெளிச்சத்தில் நமது ஆட்சிப் பயணம் செல்லும் - இந்தப் பயணம் வெல்லும்!

கொள்கைத் தீபத்தை ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை நீங்கள் தொடருங்கள். ஆட்சிப் பொறுப்பில் இருந்து, திராவிடக் கொள்கைகளை செயலாக்கும் பணியை நாங்கள் செய்கிறோம்!

திராவிடக் கொள்கை தீபத்தின் வெளிச்சத்தில் நமது ஆட்சிப் பயணம் செல்லும் - செல்லும்! - இந்தப் பயணம் வெல்லும்! வெல்லும்!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment