இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் பொய்ச் செய்திக்கு மறுப்பு!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவின் 'அண்ணல் அம்பேத்கர் - மோடி ஒப்பீடு' குறித்து ஆற்றிய எதிர்வினை, திட்டமிட்டு சிலரால் உள்நோக்கத்தோடு திரித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இளையராஜாவுக்கு கருத்துரிமை இருக்குமேயானால் இளங்கோவனுக்கும் கருத்துரிமை இருக்கலாம் தானே! ஆனால் இதில் அவசியமின்றி திராவிடர் கழகத் தலைவரை வம்புக்கிழுப்பது அறமற்ற செயலாகும்.
ஈரோட்டில் நடைபெற்ற பரப்புரைப் பெரும் பயணக் கூட்டத்தில் உரையாற்றிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் விமர்சனக் கருத்துக்கு 'திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தார்' என்பதாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறான பொய்யான செய்தியாகும்.
அண்ணல் அம்பேத்கரைக் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உயர்த்திப் பேசியதையெல்லாம் வெட்டி விட்டு இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள துண்டுக் காணொலி மட்டுமல்ல; முழுமையான நேரலை செய்யப்பட்ட காட்சிகளும் பெரியார் வலைக்காட்சியின் இணையப் பக்கங்களிலேயே இருக்கின்றன. இளையராஜா பற்றிய கருத்துக்கு ஆசிரியர் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தாரா இல்லையா என்று அந்தக் காட்சிகளைப் பார்த்தாலே தெரியும். அறிவு நாணயமிருப்போர் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது பொய்யின் அடிப்படையில் அவதூறு செய்ய மாட்டார்கள்.
கடந்த ஓராண்டாக ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பற்றிய செய்திகளைத் திட்டமிட்டே புறக்கணிக்கும் 'மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு', 19.4.2022 அன்று நடந்த கூட்டம் பற்றி திடீரென இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் டுவிட்டர் பதிவை செய்தியாக வெளியிட்டுள்ள 'தி இந்து' (25.4.2022) ஆங்கில நாளிதழ் உண்மையை அறிந்து கொள்ள முயலாமல் செய்தியை வெளியிட்டிருப்பது சரியான ஒன்றல்ல.
கடந்த 'விடுதலை' ஞாயிறுமலரில் (23.4.2022) கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதும், அதற்கு முன்பே செய்தியாளர்கள் கேட்ட போதும் சரி. "இசைஞானி இளையராஜாவின் கருத்து பற்றி விவாதிக்கும் அளவுக்கு அதற்கு அதிமுக்கியத்துவம் தர வேண்டியதில்லை" என்பதாகவே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பதிலிறுத்தார்கள். பெரியாரையும், திராவிடர் கழகத்தையும், திராவிட இயக்கத்தையும் உள்நோக்கத்தோடு விமர்சிப்பவர்களால் ஒரு போதும் சமூகத்திற்குப் பயன் விளையாது. யாருக்கு யார் பயன்படுகிறார்கள்? யாருக்காக இவர்கள் அவதூறு செய்கிறார்கள் என்பதை உண்மை நாடுவோர் அறிவார்கள்.
No comments:
Post a Comment