1852ஆம் ஆண்டு ஏப்ரல் - 27 அவர் பிறந்த நாள். இன்றைக்குச் சரியாக 171 ஆண்டு களுக்கு முன்பு அவர் பிறந்திருக்கிறார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற தீரமிக்க கோட்டையை கட்டித்தந்த தீரர்.
சர்.பிட்டி தியாகராயரும் டாக்டர் டி.எம். நடேசனாரும் திராவிட இன மக்களின் வரலாற்றிலே மறக்க முடியாத பெயர்கள்.
செல்வம் மிக்க குடியிலே பிறந்திருந்தாலும், அவர்களுடைய சிந்தனைகள் எல்லாம் சீந்து வாரற்றுக் கிடந்த திராவிட இனமக்களின் சமுதாய விடுதலையிலேயே குத்திட்டுக் கிடந்தன.
அப்பழுக்கற்ற அவர்களது அயராத பொதுத் தொண்டுக்கு முன்னே, ஆணவம் பிடித்த இன எதிரிகளின் அப்பழுக்கற்ற பொய்ப் பிரச்சாரங்கள் - புறமுதுகிட்டு ஓடின.
பொய்யிலும், புனை சுருட்டுச் சேற்றிலும் புரண்டு கிடந்த எதிரிகள் அப்பப்பா அவர்கள்மீது எவ்வளவு பெரிய அபாண்டங்களை - எல்லாம் தூக்கி எறிந் திருக்கிறார்கள் தெரியுமா?
"தாலியறுத்த இராமசாமி முதலியாருக்கா உங்கள் ஓட்டு?" என்று ஜஸ்டீஸ் கட்சித் தலைவர்களை அன்றைய தேசிய திலகங்கள் வாய் கோணிய போக்கில் எல்லாம் வசைமாரி பொழிந்தார்கள். அப்பொழுதும்கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ ஏறுமாறாகவோ அன்றி எள்ளளவு மரியாதையும் குறையாத முறையில் அவற்றிற்கெல்லாம் பதில் தந்தவர்கள் ஜஸ்டிஸ் தலைவர்கள்.
அதிலும் குறிப்பாக சர்.பிட்டி தியாகராயர் என்றால் வெள்ளைக்கார கவர்னரே நடு நடுங்குவார். சொல்லில் சுத்தமும் செயலில் நாணயமும் கொண்ட வெள்ளுடை வேந்தர் அவர்களைக் கண்டால் மதிக்காதவர் யார்- மரியாதை கொடுக்காதவர் யார்?
சென்னைப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாக வெளிவந்த பிட்டி. தியாகராயர் அவர்கள் துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியால் கவரப்பட்டு பொதுத் தொண்டைத் துவக்கி கொஞ்ச நாட்களில் காங்கிரஸ் என்பது மேல்ஜாதி ஆதிக்கக்காரர்களின் கூடாரம் என்பதை தெரிந்து வெளியேறினார்.
டாக்டர் நாயர் அவர்களுடன் சேர்ந்து, ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந் திய நல உரிமைச் சங்கத்தை 1916ஆம் ஆண்டிலே நிறுவினார். டாக்டர் சி.நடேசனார் அதற்குப் பேருதவியாகத் திகழ்ந்தார்.
குறுகிய கால கட்டத்திலே நீதிக்கட்சியினி டத்திலே பொதிந்து கிடந்த நீதியின் தரா தரத்தை உணர்ந்து, பார்ப்பனரல்லாத மக்கள் நீதிக்கட்சியின் மடியிலே வந்து வீழ்ந்தனர். 1920ஆம் ஆண்டிலே நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி நிகரற்ற வெற்றியை எட்டிப் பிடித்தது.
சரி, நீதிக்கட்சி வெற்றி பெற்று விட்டது. எப்படியும் தியாகராயர் (செட்டியார்) தான் முதல் மந்திரி என்று எதிரிகளே உறுதியாக எண்ணினார்கள். இன மக்களும் ஆனந்தப் பள்ளு பாடினார்கள். கவர்னர் அவர்களும் அவரை அழைத்து மந்திரி சபை அமைக்கச் சொன்னார். ஆனால் அவரோ... தனக்கு, அந்தப் பதவி வேண்டாம். தனது கட்சியைச் சேர்ந்த கடலூர் ஏ. சுப்பராய ரெட்டியார், பனகல் அரசர் சர்.கே.வி. ரெட்டி நாயுடு ஆகியவர்களைக் கொண்டு மந்திரி சபை அமைக்கும்படி ஆலோசனை கூறினார். அந்தக் கருத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் படியே மந்திரி சபையும் அமைக்கப் பட்டது.
தியாகராயர் அவர்கள் சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து 40 ஆண்டு காலம் சேவை செய்திருக்கிறார். 1919ஆம் ஆண்டிலே பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப்படி மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் பிட்டி. தியாகராயர் அவர்களே! 1919 முதல் 1923 வரை தொடர்ந்து மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மேயராக இருந்த பொழுது ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. தனக்கென்று ஏற்படுத்திக் கொண்ட விதி முறைகளில் அவர் எப்படி சதைப்பிடிப்போடு இருந்தார் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
அப்பொழுது இங்கிலாந்தில் இருந்து வேல்ஸ் - இளவரசர் இந்தியாவுக்கு வந்திருந் தார். இந்தியாவுக்கு வந்திருந்தார் என்றால் அப் பொழுது சென்னைக்கு வந்தார் என்பது போன்ற பொருள் தான்:
சென்னைக்கு இளவரசர் வருகின்ற பொழுது சென்னை மாநகரத்தின் முதல் குடிமகன் என்ற தகுதியை உடைய மேயர் அவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டியது தானே முறை - அதன்படி இளவர சருக்கு வரவேற்பு வாசித்தளிக்க தியாகராயர் அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
சில நாட்களிலே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து மேயர் அவர்களுக்கு ஒரு தாக்கீது வந்தது.
அரசாங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள் பவர்கள் குறிப்பிட்ட முறையிலும் வண்ணத்திலும் உடை அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷார் மரபு. அதனை தியாகராயருக்குச் சுட்டிக்காட்டி, அந்த முறையில் இளவரசருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.
தியாகராயரோ எந்தக்காரணத்தை முன் னிட்டும் வெள்ளுடை அன்றிவேறுடை அறி யாதவர் - அணியாதவர் அவர் அணியும் கண்ணைப் பூக்கச் செய்யும் வெள்ளுடைக்கு இக்கணமோ உவமையோ வேறொன்றை சொல்ல முடியாது அவர் அணியும் வெள்ளை உடையின் தன்மைக்கு ஆங்கிலத்தில் கூட ‘சிறப்புச் சொல்' உண்டு.
அரசாங்கத்தின் தாக்கீதைக் கண்ட தியாகராயர் அவர்கள் சற்றும் தயங்காமல், 'இளவரசருக்குத்தான் வரவேற்பு அளிப்பு என்றால் வழக்கமான தனது வெள்ளுடையில் தான் கொடுக்க முடியும். அதற்குச் சம்மதம் என்றால் வரவேற்பை ஏற்றுக்கொள்ளட்டும் - இல்லை என்றால் விட்டு விடட்டும்' என்று வெள்ளையாகப் பதில் அனுப்பி விட்டார்.
ஒரு இளவரசர் வந்து - மாநகராட்சியின் வரவேற்பைப் பெறாமல் போவது கவுரவக் குறைவாகக் கருதப்பட்ட நிலையில் - வேறுவழியின்றி அரசாங்கமே கீழே இறங்கி வந்து அதற்குச் சம்மதித்து விசேஷ அரசு பதிவிதழ் வெளியிட்டது. தியாகராயர் அவர்கள் அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசருக்கு வரவேற்பு வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
அப்பொழுது சென்னை மாநில கவர்னராக இருந்தவர் லார்டு வெல்லிங்டன் அதற்குப் பின்பு இவர் இந்தியாவின் வைஸ்ராயாகக்கூட. இருந்தார். அவரேகூட தியாகராயர் என்றால் அஞ்சுவார்.
சென்னை சூளையில் இருந்த மில் ஒன்றில் தொழிலாளர் கிளர்ச்சி நடைபெற்றது. கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய வரோ தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்.
தொழிலாளர் கிளர்ச்சிக்குத் தூபம் போடுபவர் திரு.வி.க. என்று சொல்லி அவரை சிலோனுக்கு நாடு கடத்தி உத்தரவு போட்டு விட்டார் கவர்னர்.
செய்தியைக்கேள்விப்பட்ட சர்.பி.தியாகராயர் அவர்களுக்கு உள்ளம் எல்லாம் கொதித்தது.
ஒரு நொடியும் தாமதியாமல் உடனே கவர்னரிடம் சென்றார் தியாகராயர் வருகிறார் என்றால் கவர்னருக்கே அச்சம். ஏதோ நடக்கப் போகிறது என்று அவரே நினைத்துக் கொண்டு விட்டார்.
திரு.வி.க. அவர்கள்மீது போடப்பட்டுள்ள உத்தரவை உடனே ரத்துச் செய்யவேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்தினார். முடியாது போட்டது - போட்டது தான் என்று கவர்னரும் பிடிவாதம் காட்டினார். அப்படி யானால் எங்களுடைய கட்சியின் மந்திரி சபையை இந்தத் தருணமே ராஜினாமா செய்யச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார். தியாகராயர் அவர்கள் வீடு வந்து சேர்ந்திருக்க மாட்டார். திரு.வி.க. மீது போடப்பட்ட நாடு கடத்தும் உத்தரவை கவர்னர் ரத்துச் செய்துவிட்டார்.
அதே சூளை மில் தொழிலாளர்களை அரசியல் உள்ளுணர்வோடு அப்பொழுதி ருந்த அரசியல் எதிர்க்கட்சிக்காரர்கள் ஒரு சமயம் தூண்டி விட்டு, சர்.பி. தியாக ராயர் அவர்களது வீட்டை சூழ்ந்து தாக்கச் செய்தார்கள். கல்லையும், கையில் கிடைத்தவற்றையும் கொண்டு அவரது வீட்டை தாக்கு தாக்கென்று தாக்க முடிந்த அளவுக்குத் தாக்கிக் கொண்டிருந் தார்கள்.
அப்பொழுது, சர்.பி. தியாகராயர் அவர்களின் துணைவியார் எவ்வளவோ வேண்டியும் போலீஸ் கமிஷனருக்குப் போன் செய்ய அவர் மறுத்து விட்டார்.
அப்படி தான் போன் செய்தால், தன் இனத்தைச் சேர்ந்த - தொழிலாளர்கள் தான் பெரும் அவதிக்குள்ளாக நேரும் என்று தன் துணைவியாரிடம் அவர் கூறினார் என்றால், அவருக்கு இருந்த மனிதாபிமானமும், இனவுணர்வும் எத்தகையதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
பார்ப்பனரல்லாத மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதிலே அவருக்குக் கொள்ளை ஆசை. ஒரு பார்ப்பனரல்லாத தோழர் படித்துப் பட்டம் பெற்றார் என்றால், அந்த மாணவனை அப்படியே கட்டித்தழுவிக் கொண்டு விடுவார்.
அப்பொழுது வெளியூர்களில் இருந்து, சென்னை . வந்து தங்கிப்படிக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களை எல்லாம் கண்டு, படிப்பில் கவனம் வையுங்கள் கவலையாகப் படித்துத் தேறுங்கள் என்று அறிவுரை சொல்லுவாராம்.
அப்பொழுது படித்துப் பட்டம் பெற்று வெளியேறுகிற பார்ப்பனரல்லாத மாணவர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்களம்; "இந்த கை எப்பேர்ப்பட்ட கை தெரியுமா? சர்.பி. தியாகராயர் அவர்களுடைய கையுடன் குலுக்கிய கை" என்பார்களாம்.
பார்ப்பனரல்லாதார் நலத்திலே சர்.பி. தியாகராயர் அவர்கள் கொன்டிருந்த அக் கறையும் அன்பும் அளவிடற்கரியது.
20-11-1916 அன்று சென்னையில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் சர். தியாகராயர் அவர்கள் அளித்த கொள்கை விளக்கம் ''பார்ப்பனரல்லாதார் உரிமைப்பட்டயம்' என்று வெகுவாகப் குறிப்பிடப்படும் சிறப் பையும் புகழையும் தாங்கியதாகும். 1917இல் சென்னையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டிலும் அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதிலே - ஒரு பகுதியைக் கொஞ்சம் கவனியுங்கள்.
''பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடர் தலைவர்கள் பிர்மனின் முகத்தில் உதித்தோம் யாம் என்று பெருமை பேசி னார்கள் இல்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகை ஜாதி நாட்டினில் நாட்டியோரும் ஆரியரே - அவ் வருணாச்சிரமக் கோட்டையை இடித்து எறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார். பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகளும் முயன்றனர் தோற்றனர். பார்ப்பனர் பிடி மட்டும் மென் மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை-பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பெருகிப் பரவ லாயின. அத்தகைய பலம் பொருந்திய ஜாதிக் கோட்டையை தகர்த்தெறிய இதுவே தக்க காலம். இதுவே தக்கவாய்ப்பு" என்று பறையறிவித்தார். .
சர்.பி. தியாகராயர் அவர்களின் 171ஆவது ஆண்டு பிறந்த நாளிலே அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சூளுரையை நாமெல்லாம் நினைவு கொள்வோமாக! நினைவு கொள்வதோடு அந்த அஸ்திவாரப் பலமிக்க ஜாதிக் கோட்டையை தகர்த்து தரைமட்டமாக்க தந்தை பெரியார் அவர்கள் நமக்கு ஊட்டிச் சென்ற உணர்ச்சிகளை ஒரு முகப்படுத்தி செயல்படுவோமாக!
தந்தை பெரியார் வெற்றியின் இரகசியம்
பார்ப்பனரல்லாதாருடைய கல்வி உரிமைக்கும், உத்தியோக வாய்ப்புக்கும் நீதிக்கட்சி பாடுபட்டது என்றாலும், அந்த வாய்ப்பு நீண்ட காலமாக திராவிட இன மக்களுக்கு இல்லாமல் போனதற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்காக செய்ய வேண்டிய அடிப்படைப் பணி களை நீதிக்கட்சி செய்யத் தவறி விட்டது.
அந்தத் தவறை சரியாக உணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பன ஆதிக்க விருட்சத்தை வீழ்த்தும் அடிப் படை சமூகப் புரட்சிப் பணியைத் தன் தோள்களில் சுமத்திக் கொண்டு முழு மூச்சாக அதே பணியாகக் கொண்டி ருந்தார்கள், நீதிக்கட்சி தவறிய இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் பெரு வெற்றி பெற்றதற்கு இதுவே காரணம்.
No comments:
Post a Comment