கடவுள்களின் கையில் கொலைக்கருவிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

கடவுள்களின் கையில் கொலைக்கருவிகள்!

துன்மார்க்க "துக்ளக்கே" பதில் சொல்!
மின்சாரம்

நல்லவேளை, நம் ஆயுதங்களைத் தெய்வங்கள் பிடுங்கிக்கொண்டு விட்டன. 

ஆர்.ஜே.கல்யாணி, திசையன்விளை 

கே: ஹிந்து தெய்வங்களின் கரங்களில் ஆயுதங்கள் இருப்பது அடியார்களைக் காப்பதற்கா, அடியாட்களை அழிப்பதற்கா?

 ப: அமெரிக்காவில் ஹவாய் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்.ஜே. ரம்மல், உலகில் நடந்த வன்முறை, படுகொலைகளைப் பற்றி 30 ஆண்டுகள் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் முடிவு: கடந்த 2,500 ஆண்டு களில் 120 கோடிப் பேர் உலகில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; அதில் பாரத நாட்டில் 1,300 ஆண்டுகளில் (13-ஆம் நூற்றாண்டு வரை) நடந்த படுகொலைகள் - ஒன்று அசோக மகாராஜாவின் கலிங்க யுத்தம். அதில் லட்சம் பேர் இறந்தனர். தீவட்டிக் கொள்ளை, உடன்கட்டை ஏறுவது இரண்டிலும் சில ஆயிரம் பேர் மட்டுமே மடிந்தனர். 13-ஆம் நூற்றாண்டில் அந்நியர்கள் படையெடுப்புக்குப் பிறகுதான் 85 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் (1). மற்ற நாடு களில் பல கோடிக்கணக்கில் படுகொலைகள் நடக்கும் போது, இங்கு அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? நம் கையில் இருந்த ஆயுதங்களை நமது தெய்வங்கள் பிடுங்கி வைத்துக் கொண்டு, நம்மை அமைதியாக இருக்க விட்டதுதான். மற்ற நாடுகளில் மனிதர்களிடம் இருந்த ஆயுதங்களைத் தெய்வங்கள் பிடுங்கி வைத்துக் கொள்ளாததால், அவர்களுக்குள் கோடிக்கணக்கில் படு கொலைகள் நடந்தன. தெய்வங்கள் ஆயுதங் களைப் பிடுங்கிக் கொண்டதோ அடியார்களான நாம் பிழைத்தோமோ? பதில் சரிதானே?           'துக்ளக்' - 6.4.2022 - பக்கம் -9

'துக்ளக்'கின் இந்தக் கேள்வி - பதில் பகுதியைப் படித்தால், பரம மூடத்தனத்தின் மொத்த உருவம் என்றுதான் எவரும் கருதுவர்.

கடவுள் அன்பே உருவானவன், கருணையானவன், உருவமற்றவன், எங்கும் நிறைந்தவன் என்று இதே கூட்டம், இன்னொரு இடத்தில் உதடுகள் அசைக்கின்றனவா இல்லையா என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு - அவ்வளவு மென்மையான குரலில் இதோபதேசம் செய்யும்.

அந்தக் கும்பலைச் சேர்ந்த குருமூர்த்தி சாஸ்திரிகள் தான் கடவுளுக்கு உருவம் கொடுத்து, அவன் கையில் கொலைகாரன், கொள்ளைக்காரன் கைகளில் இருக்க வேண்டிய கொலைக் கருவிகள் கொடுக்கப்பட்டதற்கு வக்காலத்தும் வாங்குவர்.

சரி... அவர் சொல்லும் விவாதத்திற்கே வருவோம். சண்டை போடும் மனிதர்கள் கைகளிலிருந்து ஆயுதங்களைக் கடவுள்கள் பிடுங்கிக் கொண்டு விட்டனர் என்று கதைக்கிறதே  'துக்ளக்'  - இப்பொழுது எல்லாம் சண்டைகள் நடக்கவில்லையா? கொலைகள் நடக்கவில்லையா?

சங்கராச்சாரியார் குடி கொண்டிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சன்னதியில் பட்டப் பகலிலேயே அக்கோயில் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்படவில்லையா?  அந்தக் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் தள்ளப்படவில்லையா?

அதுவும் இருக்கட்டும் - மனிதர்களுக்குள் சண்டை இருக்கக் கூடாது - மனிதர்கள் படுகொலை செய்யப்படக் கூடாது என்பதற்காகவே மனிதர்கள் கைகளில் இருந்து ஆயுதங்களைப் பறி முதல் செய்து தன் கையில் அந்த ஆயதங்களைக் கடவுள்கள் வைத்துக் கொண்டன என்று வக்காலத்து வாங்கும் குருமூர்த்திகளே! அந்தக் கடவுள்களே சண்டை போட்டுள்ள னவே - உயிர்களைக் கொன்று தீர்த்துள்ள னவே - இதற்கு என்ன பதில்?

அய்ந்தாவது வேதம் என்று கீதையை தூக்கிப் பிடிக்கும் 'துக்ளக்' வகையறாக்கள் இதற் குப் பதில் கூறட்டும் பார்க்கலாம்!

மகாபாரதத்தில் அர்ஜுனன் போர்க் களத்தில் நின்று,  தேரோட்டியாகிய கிருஷ்ணனைப் பார்த்து, "என் உற்றார் உறவினர்கள் என் எதிரில் நிற்கிறார்கள்; அவர்களைக் கொல்லுவது எப்படி?"  என்று கேட்டபோது "பகவான் கிருஷ்ணன் என்ன சொன்னான்? அர்ஜுனா நீ கொல்லப் போவது எதிரிகளின் உடல் களைத்தான்  - ஆத்மாவையல்ல- ஆத்மா அழிக்கப்பட முடியாதது" என்று சொல்லவில்லையா?

இதனைத் தானே 'கீதாபதேம்' என்று கிசு கிசுக்கிறீர்கள்-காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பார்ப்பான் நீதிமன்றத்தில் என்ன சொன்னான்?

'தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச்  செய்யலாம் என்று கீதையிலே பகவான் கிருஷ்ணன் கூறி இருக்கிறான். காந்தியார் கொலை  விடயத்திலும் அதன்படிதான் நடந்து கொண்டேன்!" என்று சொல்லவில்லையா?

உங்கள் மதமும், கடவுளும் ஓர் உத்தமத் தலைவரைப் படுகொலை செய்யும் அளவுக்குத் தூண்டியிருக்கிறதே!

இந்த வெட்கக் கேட்டில் மனிதர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தால்  சண்டைகள், கொலைகள் நடக்கும் என்பதால், கடவுள்கள் அவற்றைப் பிடுங்கித் தம் கையில் வைத்துக் கொண்டு விட்டன என்று சொல்லுவது எத்தகைய மூர்க்கத்தனமான முட்டாள்தனமும் மதவெறி ஆபாசமும் ஆகும்.

ஹிந்து மதக் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் எல்லாம் கொலைகளைத் தானே செய்திருப்பதாக உங்கள் புராணங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.

பிர்மாவுக்கு 5 தலைகள் - சிவனுக்கும் அய்ந்து தலைகள்- பிர்மா என்ன செய்தான்? சிவன் போல் தனக்கும் அய்ந்து தலைகள் இருப்பதைப் பயன்படுத்தி சிவனின் பெண்டாட்டி பார்வதியிடம் காம சேட்டை (கடவுளின் யோக்கியதை இதுதான்!) செய்ய, பார்வதி அதனைத் தன் புருஷன் சிவனிடம் சொல்ல, சிவன் என்ன செய்தானாம்? பிர்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்து அவனை நான்முகன் ஆக்கினான் என்று சொல்லும் கூட்டமே, பிர்மாவின் ஒரு தலையை வெட்டியது அகிம்சைக்கான அடையாளமா?

காட்டில் தலை கீழாகத் தொங்கித் தவம் செய்து கொண்டிருந்த சம்பூகன் என்பவனை வாளால் வெட்டிக் கொன்றானே ராமன் - மகாவிஷ்ணுவின் அவதாரம் இல்லையா?

மக்களுக்கு நன்மைகளையல்லால் வேறு எதையும் செய்தறியாத மாபலி சக்ரவர்த்தியின் தலையின்மீது கால் வைத்து அழுத்திக் கொன்றானே மகாவிஷ்ணுவின் அவதாரமான வாமனன். பரசுராமன் அவதாரமே (கையில் கோடாரி) சத்திரிய அரசர்களைக் கொன்று குவிக்கத்தானே?

சுப்பிரமணியன் கடவுள் சண்டை போடவில்லையா? அவன் போரில் தோற்கும் சூழலில் அவனின் உடன்பிறப்பான விநாயகன் - எதிரிகள் உற்பத்தியாகும் வல்லபை என்ற பெண்ணின் பிறப்பு உறுப்பில் தும்பிக்கையைத் திணித்து அசுரர்களைக் கொன்றான் என்று சொல்லுவதற்கு வெட்கம் இல்லையா? மத்தூர் கோயிலில் இந்த ஆபாசமான உருவம் கடவுளாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதே - அதுதானே வல்லபைக் கணபதி.

சிவனடியாராக வேடமிட்டு பக்தனின் பிள்ளையை அரிந்து சமைத்துச் சாப்பிட்டவன் தானே உங்கள் முழு முதற்கடவுள். அதோடு விட்டாரா? சிவனடியாரின் மனைவியையே தானமாகக் கேட்டவன்தானே உங்கள் பித்தாபிறை சூடி?

மூன்று குரவர்களில் ஒருவரான - பார்வதி தேவியாரிடம் ஞானப்பால் உண்டதாகக் கூறப்படும் திருஞான சம்பந்தனின் தூண்டுதலால் மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்படவில்¬லா? (ஈ. எறும்புக்குக்கூட ஹிம்சை செய்யக் கூடாது என்று கருதி வாழ்பவர்கள் சமணர்கள் ஆயிற்றே!)

சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த மக்கு மசாலாக்களால் பதில் சொல்ல முடியுமா? நாம் எழுப்பும் எந்தக் கேள்விக்குத்தான் இதுவரை பதில் சொல்லி இருக்கிறார்கள்?

No comments:

Post a Comment