புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (1)
புரட்சிக் கவிஞர் என்ற சிங்கத்தை சந்தித்ததும், நான் பழகியதும், அவரிடம் கற்றவைகளும், பெற்றவைகளும் ஏராளம்! ஏராளம்!!
அவை யான் பெற்ற பெரும்பேறுகளில் முக்கிய மானவை.
வேறு எவருக்கும் கிடைக்காத எனது எளிய வாழ்வின் பேறுகளில் முக்கியமானது.
10 வயதில் அறிஞர் அண்ணாவை
அறிவு ஆசான் தந்தை பெரியாரை
நமது ஒப்பற்ற புரட்சிக் கவிஞரை
அஞ்சா நெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி
ஆகியோரைப் பார்த்தது, அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி, பால பாடத்தை கற்றுக் கொடுத்தது என்னே அரிய, பெரிய வாய்ப்பு! எவருக்கும் இப்படி ஒரு பெருத்த பெரும் வாய்ப்பு கிட்டியிருக்குமா என்பது அய்யம்தான்!
அதற்கு முழு முதற் காரணமான எனது கொள்கை ஆசான் மானமிகு ஆ.திராவிடமணி அவர்களுக்கு எனது வணக்கம் கலந்த கடன்பட்ட நன்றிகள்!
புரட்சிக் கவிஞரை - புதுச்சேரி மக்கள் - உள்ளூரில் அனைவருமே 'வாத்தியார்' என்று தான் அழைப்பர்.
அவரை நான் 13 வயது சிறுவனாக இருந்த போது புதுச்சேரியில் எனது ஆசான் ஆ. திராவிடமணியோடு, பிறகு எனது மூத்த அண்ணன் திராவிட இயக்க கொள்கைச் செம்மல் கடலூர் கோவிந்தராசன் அவர்களுடன், புதுவை சகுந்தலா சாயத்தொழிற்சாலை அதிபரும், புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவருமான பொன். இராமலிங்கம் அவர்களுடன் சென்று சந்தித்தபோது, அவர் என்னை வியந்து கூர்ந்து கவனித்து உரையாடியதெல்லாம் பின்னாளில்!
முதலில் அந்த 'கவிச் சிங்கத்தை' மிகுந்த அச்சத்துடன் தான் பார்த்தேன்.
புதுச்சேரியில் 'கெப்ளே' தியேட்டரில் நாகை திராவிடர் நடிகர் கழகம் சார்பில் ஆர்.வி. கோபால் ("ராயல்" சோடா பாக்டரி உரிமையாளர்) அவர் களின் உருவாக்கம் - அதன் பிரதான கதாநாயகர் எழுத்தாளர் நமது கலைஞர் - மாணவப் பருவம் முடிந்த நிலையில் கலைஞர் - புதுச்சேரியில் நாடகம் - "போர்வாள்", "தூக்குமேடை". அதற்கு முதலில் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்று அவர் எழுதி நடித்த நாடகங்கள் சுமார் 30 நாள் களுக்கு மேல் நடைபெற்றன. (1946 ஆக இருக்கும்).
அப்போது சேலத்தில் திராவிடர் கழகப் பெயர் மாற்றத்திற்குப்பின் புதுச்சேரி திராவிடர் கழகம் உதயமாகி, ஒதியஞ் சாலைத் திடலில் - ஹாலில் பந்தலிட்டு புதுச்சேரி திராவிடர் கழக மாநாடு - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி அழகிரிசாமி போன்ற தலைவர்கள் வருகை தந்தனர்.
முதல் நாள் மாலையில் மாநாடு சென்றபோது, கலைஞர் நாடகத்தில் வரும் சுயமரியாதை திருமண (சீன்) காட்சி ஒன்று. அதில் முழுக்கால் சட்டை, ஜிப்பாவுடன் சென்ற என்னை கலைஞர் அழைத்து நாடகத்திலேயே அத்திருமணத் தலைவராக அறிவித்து, நானும் சில நிமிடங்கள் பேசி கைதட்டல் வாங்கி திருமணம் நடத்தி வைத்த காட்சியும் ஒன்று.
திரைக் கொட்டகை மேடையின் பின்புறம் நாடகத்தை ரசித்தவர் தளபதி அழகிரி - என்னை முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அடுத்த நாள்தான் காலை ஓதியஞ் சாலைத் திடலில் தந்தை பெரியார், அண்ணா உள்பட தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு, கவிஞர் புதுவை சிவம், பொன். ராமலிங்கம், புதுவை திராவிடர் கழக அந்நாள் தலைவர் காக்கேயர் - துப்ளே தெரு கடைவீதியில் அப்போது பெரிய, கடை அதிபர் - பிரபலமானவர், நமது 'வாத்தியார்' புரட்சிக்கவிஞர் உட்பட பலர்.
மாநாட்டிற்கு எனது ஆசிரியர், அண்ணா சகிதம் உள்ளே போவதற்குமுன் சற்று தொலைவில் வந்த கலைஞரை துரத்திச் சென்று தாக்குகின்றனர் - தள்ளி நின்ற சிறுவனான எனக்கு ஒன்றும் புரியவில்லை - "நீ மாநாட்டிற்குள் செல் - உள்ளே போகலாம்" என்றனர். சில நிகழ்வுகளுக்கு பின் காலிகளின் கலாட்டா, கலவரம் - ஆபாசப் பேச்சுகள் மழைபோல கொட்ட, பிரெஞ்சுப் போலீஸ் சரியான பாதுகாப்பை தரவில்லை. இதெல்லாம் ஏதோ திரைக்காட்சிபோல ...
தந்தை பெரியார், நமது தாய்மார்களை, பெண்களை பந்தலிலிருந்து பத்திரமாக வெளியேற அறிவுரை கூறுகிறார். மாநாடு அரை நாளிலேயே முற்பகல் முடியும் இக்கட்டான நிலை.
வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் பாரதிதாசனை ஒரு கை ரிக்ஷாவில் ஏற்றிவிட - துணிவுடன் திரும்புகிறார். சிலர் மறித்து நின்று அவர்மீது செருப்பை வீசி ஓடி ஒளிய ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லி, எழுந்து நின்று ஒரு சிங்க முக சீற்றப் பார்வையுடன் பார்க்கிறார். தூரத்தில் கண்ட அக்காட்சி என்னுள் பதிந்தது இன்று வரை அழியவே இல்லை. அதுதான் முதலில் அவரைக் கண்டு வியந்த இந்த சிறுவன் கற்ற அஞ்சாமைப் பாடம்.
(வளரும்)
No comments:
Post a Comment