நேற்றுவரை இந்து - முஸ்லீம் ஒற்றுமை பேசிவந்த ராஜ்தாக்கரே, பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்த பிறகு மசூதிகளில் பாங்கு ஓசை ஒலிக்கக் கூடாது என்று பேசி இரு பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
மகாராட்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை உருவாக்கிய மறைந்த பால் தாக்கரேவின் அண்ணன் மகன்தான் ராஜ் தாக்கரே, சிவசேனா கட்சியில் முக்கிய பதவியை தனக்குத் தராததை அடுத்து அக்கட்சியிலிருந்து விலகி 'நவ நிர்மாண் சேனா' என்ற கட்சியைத் துவக்கினார்.
அவரது கட்சியின் கொள்கை என்பது, அனைத்து மதமும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக, வேத மத வண்ணமான காவி, இஸ்லாமிய நிறமெனக்கூறப்படும் பச்சை, கிறித்துவ மதத்தின் வெள்ளை, பவுத்த மதத்தின் நீலம், வெள்ளை, என பல வண்ணங்களில் கொடியை உருவாக்கினார்.
2019ஆம் ஆண்டுக்கு முன்பு, பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அதனை தீவிர இந்துத்துவவாத கூட்டணி என்று கூறி கடுமையாக எதிர்த்தார். கோவில் - சர்ச் - மசூதி - பவுத்தவிகார் என அனைத்து இடங்களுக்கும் சென்று வழிபட்டார். பா.ஜ.க., இந்து - இஸ்லாமியர்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை நாசமாக்குகிறது என்று எல்லாம் பேசினார். இவரது பேச்சு எல்லாம் தேர்தல் ஆதாயம் என்பதை மக்கள் புரிந்தே வைத்திருந்தனர். ஆகையால் மும்பை மாநகராட்சித் தேர்தல் மற்றும் மகாராட்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் ராஜ் தாக்கரேவின் 'நவநிர்மாண் சேனாவிற்கு' தோல்வியே மிஞ்சியது.
இந்த நிலையில் சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டு தனித்துப் பிரிந்து 2019ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் சிவசேனா ஆட்சி அமைத்து, பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பா.ஜ.க.வோடு ராஜ் தாக்கரே கூட்டணி வைத்துக்கொண்டார். பா.ஜ.க.வும் அவரைத் தேர்தல் லாபத்திற்காகச் சேர்த்துக் கொண்டது, இதன் மூலம் மும்பை மாநகராட்சித் தேர்தலில் சில தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது,
2024ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் போல் பா.ஜ.க. மதவாதப் பிரிவினையை உருவாக்கி வாக்குகளை அறுவடை செய்ய திட்டம் தீட்டி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் அகமதுநகர் பகுதியில் இந்துத்துவ அமைப்பினர் மதவாத, வெறுப்பு பரப்புரைகளை செய்து வருகின்றனர். இதனால் சில பகுதிகளில் மதமோதல்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மும்பை, தானே, நவிமும்பை ஆகிய பகுதிகளிலும் மத அடிப்படையில் பிளவை உருவாக்கத் திட்டமிட்டு அப்பகுதிகளில் ராஜ்தாக்கரேவை பா.ஜ.க. களமிறக்கி உள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இஸ்லாமியர் - இந்துக்கள் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டிருந்த ராஜ் தாக்கரே திடீரென மசூதிகளில் ஒலிபெருக்கி எதற்கு என்று கேள்வி கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் எல்லா மசூதிகளின் முன்பும் ஒலிபெருக்கி மூலம் அனுமன் துதி, விநாயகர் துதி போன்ற பாடல்களை பாடவைப்போம் என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய வழக்கப்படி சில நிமிடங்கள் தொழுகை நடத்த அழைப்பு விடுப்பது என்பது தொடர்கிறது. திடீரென்று 'நிறுத்து, இல்லை என்றால் நாங்கள் அனுமன் துதியை பாங்கு ஓசையை விட அதிக ஓசையில் ஒலிக்கவிடுவோம்' என்று மிரட்டியுள்ளது. இது அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்களையும்கூட அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கெனவே கருநாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங் களில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில், இப்போது மகாராட்டிராவிலும் நேற்றுவரை எம்மதமும் சம்மதம் என்று கூறிக் கொண்டு இருந்த ராஜ்தாக்கரே 'இஸ்லாமிய பாங்கு ஓசையை நிறுத்து' என்று எதிர்க்கத் துவங்கியுள்ளார் மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் மசூதி, மதராசாக்களில் காவல்துறை சோதனை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். மசூதிகளில் என்ன நடக்கிறது என்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். என்றும் கூறியுள்ளார்.
இவரது பேச்சுக்கு பதிலடி தரும் விதத்தில், மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “எங்கள் மாநிலத்தில் அனைத்தும் சட்டப்படி தான் நடக்கும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த உள்துறை அமைச்சர் சட்டப்படி அனைத்தையும் செய்வார். இது மதச்சார்பற்ற நாடு. இங்கு அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்தில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன?” என்று கேள்வி எழுப்பினார். நேற்று வரை "இந்து முஸ்லீம் பாய் பாய்" என்று பேசியவர் பாஜகவுடன் கூட்டணி வைத்த உடனே மசூதிகளில் 'பாங்கு ஓலிக்கக் கூடாது' என்று கூறுகிறார்.
மார்கழி மாதங்களில் இந்துக் கோயில்களில் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன - அதையும் எதிர்ப்பார்களா?
பா.ஜ.க. வந்தாலும் வந்தது; எதிலும் மதப் பார்வை என்ற பைத்தியமாய் பிடித்து விட்டது - வெட்கக்கேடு!
No comments:
Post a Comment