கோவில் பிரவேசம் பொதுவுடைமைத் தத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

கோவில் பிரவேசம் பொதுவுடைமைத் தத்துவம்

12.05.1935 - குடிஅரசிலிருந்து...

கோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர், நம்மிடம் பேசும் போது கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடைமைத் தத்துவமேயாகும் என்றார்.

எப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது:

ஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத் தாருக்கு மாத்திரம் ஆதாரப்பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும், பழக்க வழக்கமாகவும் இருந்து வரும் ஒரு சொத்து அல்லது ஒரு கட்டடம், ஒரு குறிப்பிட்ட இடம் முதலியவைகளில் மற்றொருவனோ அல்லது மற்ற கூட்டத்தார் என்பவர்களோ உரிமை வேண்டும் என்பதும் பொதுவுடைமைக் கொள்கையேயாகும்.

ஆதலால், ஒரு கோவிலுக்குள் அனுபவ பாத்தியமில்லாத ஒருவன் போக வேண்டுமென்பது அதாவது ஒரு கூட்டத்தார் மாத்திரம் போகலாமென்றோ, ஒரு கூட்டத்தார் மாத்திரம்தான் உபயோகித்துக் கொள்ளலாம் என்றோ உள்ள நிபந்தனையில் சட்டப் படிக்கு உள்ள காலாவதிக்கு மேற்பட்ட காலமாய் பழக்கத்திலும், அனுபோகத்திலும் இருந்து வந்த இடங்களில் (கோவில், சத்திரம் முதலிய இடங்களில்) அக் கூட்டத்தாருக்கு வேறுபட்டவர்களும், வேறுபட்டவர்களாய்க் கருதப்பட்டவர் களும், அனுபவ பாத்தியம் இல்லாத வர்களும் பிரவேசிக்க உரிமை கேட்பது நியாயமாகாது. அதற்காக சட்டம் செய்வது என்பதும் கூடாததாகும்.

மீறி சட்டம் செய்யப்படுமானால் அது பொதுவுடைமைத் தத்துவப்படி செய்யப்படுவதாவதோடு மக்களின் சொத்து, சுதந்திரம், பாத்தியம் ஆகியவைகளுக்கு இனி பந்தோபஸ்து இல்லை என்றும் தான் கருத வேண்டியதாகும்.

அரசாங்கம் இதில் சம்பந்தப்படுமானால் அவர்கள் வாக்களித்த வாக்குறுதிகளுக்கு விரோதமாய் நடந்தவர்களாவார்கள், என்பதோடு தனி உடைமை முறையை ஒழிக்க கால் நட்டவர்களுமாவார்கள்.

கோவில்கள், கடவுள் உணர்ச்சிகள் ஆகியவை எல்லாம் பொதுவுடைமைத் தத்துவத்துக்கு விரோதமான தாகும். தனிப்பட்டவர்கள் சொத்துக்கள், உரிமைகள் ஆகியவைகளைக் காக்கவே அவைகள் இருக்கின்றன.  ஆதலால், அவை சம்பந்தமான காரியங்கள் எதுவும், எந்தவிதத்திலும் அரசியலில் சம்பந்தப்படவும், சட்டம் செய்யவும் இடம் தரக் கூடாது என்று சொன்னார்.

மற்றும், இதைக் காந்தியாருக்கும் எடுத்துச் சொன் னாராம். அவரும் இந்த வாதத்தை ஒப்புக் கொண்டாராம்.  அதனால்தான் அவர் கோவில் பிரவேசத்துக்கு சட்டம் செய்வதால் பயனில்லை என்றும், இந்துக்கள் எல்லோ ரும் கோவில் பிரவேசத்தை ஒப்புக் கொண்ட பிறகுதான் சட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி, மசோதாவை வாபீஸ் பெறும்படி செய்துவிட்டதோடு அது சம்பந்தமான காரியத்தை காங்கிரஸ் சட்டசபை கட்சியார் செய்யக் கூடாது என்றும் கட்டளை இட்டாராம்.


No comments:

Post a Comment