ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் உள்ளவர்கள் எங்களை எதிரிகளாக நினைத்தாலும் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக பிள்ளைகளின் கல்விக்காகப் போராடி நாங்கள் உயிர் துறந்தாலும் மகிழ்ச்சிதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் உள்ளவர்கள் எங்களை எதிரிகளாக நினைத்தாலும் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக பிள்ளைகளின் கல்விக்காகப் போராடி நாங்கள் உயிர் துறந்தாலும் மகிழ்ச்சிதான்!

ஒசூர், தருமபுரியில் தமிழர் தலைவர் உணர்ச்சிகரமாக ஆற்றிய எழுச்சியுரை

ஒசூர்,ஏப்.22- ஆர்.எஸ்.எஸ்., பா...வில் உள்ளவர்கள் எங்களை எதிரிகளாக நினைத்தாலும், அனைத்து ஒடுக்கப் பட்ட சமூகப் பிள்ளைகளின் கல்விக்காகப் போராடி நாங்கள் உயிர் துறந்தாலும் மகிழ்ச்சிதான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒசூர், தருமபுரியில்  நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணப்பொதுக்கூட்டங்களில் தெரிவித்தார்.

நாகர்கோயிலில் 3.4.2022 அன்று தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புக்கான பரப்புரையை மேற்கொண்டுள்ளார். இப்பயணம் 25.4.2022 அன்று சென்னையில் நிறைவு பெறுகிறது. சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  முதலமைச்சர் மு..ஸ்டாலின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

பரப்புரைப் பெரும்பயணத்தில் தமிழர் தலைவருக்கு அனைத்துக் கட்சியினரும் உளப்பூர்வமான வரவேற்பையும், பேராதரவினையும் அளித்து வருகின்றனர். நீட் எதிர்ப்புப் பரப்புரை விளக்க புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். தமிழர் தலைவரை சந்தித்து, பயனாடை அணிவித்து வரவேற்பதுடன் திராவிடர் கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள பரப்புரைப் பயணம் வெற்றி பெற விருப்பத்தையும், வாழ்த்தையும் தெரிவிக் கின்றனர்.

தமிழர்களிடையே ஆரியத்தின் ஊடுருவல், ஆதிக்கம், பண்பாட்டுப் படையெடுப்பு காரணமாக காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக. சீரழிந்துவிட்ட தமிழ்ச் சமூகத்தைத் தட்டி எழுப்பி, மானமும் அறிவும் உள்ள சமூகமாக மாற்றிட சுயமரியாதை இயக்கம் கண்டார்  தந்தை பெரியார். அவர், தம் வாழ்நாள் இறுதி வரையிலும் தொண் டாற்றியதோடு, தம் வாழ்நாளிலேயே தம் கொள்கை வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை பெரியார் ஆற்றிய தொண்டின் தொடர்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்டிட இரவு, பகல் பாராமல், கடும் வெயில், மழை என்று பாராமல் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புக்கான பரப்புரைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

கட்சி, மதம், ஜாதி பேதங்களைக் கடந்து தமிழர்கள் உணர்வுபூர்வமாக தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணத் துக்கு பேராதரவினை அளித்து வருகின்றனர். கழகப் பொறுப் பாளர்கள் பெருமகிழ்வுடன் தமிழர் தலைவர் வருகையை தங்கள் இல்ல பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

கட்சி, அரசியல் என்றாலே பதவிக்கானது என்று எண்ணுவோரிடையே பதவி தேடாத பற்றற்ற துறவு நிலையில் கழகப் பொறுப்பாளர்கள் தலைவரின் கட்டளையை நிறைவேற்றி வருகின்றனர். தன்னல மறுப்பு இயக்கத்தில் தங்களை ஒப்படைத்துக்கொண்ட தொண்டர்கள், தோழர்கள் தமிழர் தலைவர் கட்டளைப்படி சிறையேக ஆயத்தமாக உள்ளனர்.

நீட் எனும் கொடுவாளைக் கொண்டு ஒன்றிய பாஜக அரசு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமூகத்தின் அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. அதற்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்து கிளர்ந்து எழுகிறது.

கிராமங்கள்தோறும் பரப்புரைப் பயண விளக்க தெரு முனைக் கூட்டங்கள், சுவரெழுத்து பரப்புரைகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தமிழர் தலைவர் வருகை பொதுமக்களிடையே பேராவலைத் தூண்டியது. பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டங்களில் தொடக்கம் முதலே பொது மக்கள் கட்சிகளைக் கடந்து தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்ட வண்ணம் உள்ளனர்.

நேற்று (21.4.2022) ஒசூர், தருமபுரியில் நடைபெற்ற பரப்புரைப் பெரும் பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரைஆற்றினார்.

ஒசூரில் நடைபெற்ற பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணப் பொதுக் கூட்டம்   சுயமரியாதைச் சுடரொளி துக்காராம் நினைவு மேடையில், மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் .முனுசாமி,மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்தி அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்த அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர் .செ.செல்வம் வரவேற்று பேசினார். பேராசிரியர் கு.வணங்காமுடி தொடக்க வுரையாற்றினார்.

பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரைக்காக ஒசூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஒசூர் நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் பறையிசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநகர துணை மேயர் சி.ஆனந்தையா நீட் எதிப்பு,தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு,மாநில உரிமை மீட்பு குறித்த சிறு நூலை வெளியிட, ஏஅய்டியுசி எம்.கே.மாதையன், நீட் ஒழிப்பு கூட்டமைப்பு தலைவர் எல்லோராமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சி.பி.எம். கட்சியின் மேனாள் மாவட்ட செய லாளர் ஜெயராமன், சிபிஅய் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் எம்.இலக்குமையா, விடுதலை சிறுத்தை கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன், மதிமுக மாநகர செயலாளர் ஈழம்குமரேசன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் .ஜாகீர் ஆலம் ஆகியோர் பிரச்சார பயண குழுவை வரவேற்று பேசினர்.

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினர்.

தமிழர் தலைவர் உரை

கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராக நீண்ட காலமாக இருந்த தோழர் துக்காராம் காலமான தகவலைச் சுட்டிக்காட்டி, “கருப்புச்சட்டைக்காரர் ஒருவரின் இழப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானியை இழப்பது போன்றது. ஆகவே, அவருக்கு அனைவரின் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்துகிறோம்என்று தொடங்கினார்.

பிறகு, ”ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் கல்விக் கண்ணைக் குத்துகிறவர்களை அம்பலப்படுத்துவதற்காக, கல்வியைக் கற்கும் வழியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை சுட்டிக் காட்டுவதற்காக திராவிடர் கழகம் இந்த மாபெரும் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறதுஎன்றார்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதேஎன்று மனுதர்மம் சொல்வதைச் சுட்டிக்காட்டி, “பார்ப் பான் மட்டும் படிக்கணும்என்பதை அடுத்துச் சொன்னதும் கேட்போருக்கு சுருக்கென்று குத்துவது போல இருந்தது.

எந்த ஒரு மனிதனுக்கும் கல்வியும், சுகாதாரமும் இரண்டும் முக்கியம். இந்த இரண்டையும் தடுப்பதுதான் நீட், புதிய தேசிய கல்விக்கொள்கைஎன்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

தமிழ்நாட்டு வரலாற்றின் பின்னோக்கி அழைத்துச் சென்றார். அதாவது, ”1938இல் ராஜாஜி ஹிந்தியை மட்டும் திணிக்கவில்லை. கிராம பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார். அதற்கு முதலில் பலியானது இந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தான். அப்போது சேலம் மாவட்டம் ஒன்றாக இருந்தது.” என்று ஓர் அரிய தகவலைச் சொன்னார். தொடர்ந்து, ''அப்போதிருந்த ஸ்டேந்தம் என்கின்ற வெள் ளைக்கார அதிகாரி அதில் முதுகெலும்போடு கையெழுத்துப் போட மறுத்திருக்கிறார். 1938-லேயே ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்து நமது கல்வி கண்ணைக் குத்த முயன் றிருக்கிறார்என்பதை எடுத்துச் சொன்னார்.

சுதந்திரத்திற்குப்பிறகு 1953 இல் மீண்டும் கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரான ராஜாஜி 6000 பள்ளிக்கூடங்களை மூடியதையும், பெரியார் போராடியதையும், ஆச்சாரியார் பயந்து பதவி விலகியதையும் விவரித்துவிட்டு, மீண்டும் அதே குலக்கல்வித் திட்டம் புதிய வடிவில் வந்துள்ளதைக் கூறி எச்சரித்தார்.

தொடர்ந்து நீட், தேசியக் கல்விக்கொள்கை தொடர்பான முக்கியமான கருத்துகளை விவரித்து, “படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு புதிய கல்விக்கொள்கையா?” என்ற கேள் வியை எழுப்பினார்.

நாம் நீட் வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போது, கியூட் என்கிறான். இந்த இரண்டுக்கும் பூட்டு போடணும். அதற்குத்தான் இந்த பரப்புரை பயணம்என்றார். தொடர்ந்து, அரசமைப்புச் சட்டத்திருத்தம் 21- இன்படி இந்தத் தேர்வுகள் சட்டவிரோதம் என்பதை தெளிவுபடுத் தினார்.

எங்களை எதிர்ப்பவர்களின் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்

இன்னுமொரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டி னார். “அதாவது, தான் இங்கே வரக்கூடாது என்று விடாமல் காவல்துறையில் கடிதம் கொடுப்பதைச் சுட்டிக்காட்டி, “அவரு வந்தா அப்படி பேசுவார்; இப்படிப் பேசுவார்; கடவுள் இல்லேன்னு சொல்வார்என்று ஆர்.எஸ்.எஸ்., பா... காரர்கள் புகார் தெரிவிப்பதைச் சொல்லி, “ஏன்யா இல்லாததை இல்லேன்னுதான் சொல்லணும். இதிலென்ன இருக்கு? கடவுள் இல்லேங்கிறதுக்கு வேறெங்கும் போகவேண்டாம். கரோனா ஒன்று போதாதா? தடுப்பூசிதானே நம்மைக் காப் பாற்றியது. கடவுளெல்லாம் போர்வை போத்திகிட்டு இருந் துச்சே! இதைச் சொல்ல வேண்டாமா?” என்று சொன்னவர், “நீங்க சொல்லலேன்னா இது எனக்கு நினைவுக்கு வந்திருக் காதுஎன்றார். மக்கள் சிரித்தபடியே கைதட்டி ரசித்தனர்.

தொடர்ந்து, “நாங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறோம். எங்கள் மீது புகார் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா...வைச் சேர்ந்த உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் பேசுகி றோம். இந்த சட்டங்கள் தொடர்ந்தால் உங்கள் பிள்ளைகளும் கல்லூரிக்குள்ளேயே நுழைய முடியாதுஎன்று வேகமாகச் சொன்னதும் பலத்த கைதட்டல் அடங்க நீண்ட நேரம் ஆனது. ''நீங்கள் என்ன எங்களுக்கு எதிரிகளா? பார்ப்பனீயம் வேணும்னா எங்களுக்கு எதிரிகளாக இருக்கலாம். திசை தடுமாறி அங்கே போயிருக்கீங்க. நீங்கள் எங்களை எதிரிகளாக தவறாக கருதிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அப்படி எண்ணவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம். நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் நாங்கள் உங்களுக்காக பாடுபடுவோம். உங்கள் மிரட்டலெல்லாம் எங்களிடம் பலிக்காது. ஆறுமுறை என்னைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தன. உங்களுக்காக என் உயிர் போனால், உங்களுக்காக என் வாழ்க்கை முடிந்தால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பயன்பட்டால் மகிழ்வேன். நன்றி, வணக்கம்என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயகுமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில சட்ட கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் .கா.வெற்றி, மண்டல இளைஞரணி செயலாளர் வண்டி ஆறுமுகம், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் .அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், அமைப்பாளர் தி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, சேலம் மாநகர துணைச் செயலாளர் பா.வெற்றி செல்வன், மாமன்ற திமுக உறுப்பினர் என்.எஸ்.மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் பு.மாயவன், தொகுதி செயலாளர் இரா.ராமச்சந்திரன், சிஅய்டியு என்.சிறீதர்,உழைக்கும் மாமன்ற உறுப்பினர் சு.ராம்குமார், திராவிடர் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தி.பால கிருஷ்ணன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், தமிழ்தேச குடியரசு இயக்கம் .இரா.தமிழரசன், மே17 இயக்கம் இந்திரஜித், பு..தொ.மு. இரா.சங்கர், சோசலிச மய்யம் மருதுபாண்டி, கருநாடக மாநில கழக துணைத் தலைவர் வீ.மு.வேலு, பொருளாளர் ஜெயகிருஷ்ணன், வழக்குரைஞர் குணவேந்தன், இலக்கியவாதி இளங்கோவன், பாபு ஒசூர் மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, செயலாளர் லதா மணி, மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, அமைப்பாளர் கிருபா, மாவட்ட இளைஞரணி தலைவர்  பி.டார்வின் பேரறிவு, செயலாளர் செ.வா.மதிவாணன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் செந்தமிழ் பகுத்தறிவு, அமைப்பாளர் .கா.சித்தாந்தன், மாநகர தலைவர் மு.கார்த்திக், செயலாளர் பெ.சின்னராசு, மாவட்ட துணைத் தலைவர் இரா.செயச் சந்திரன், மாவட்ட .. அமைப்பாளர் பொறி.ஜெகன்நாதன், துணைத் தலைவர் வே.ராமேஸ்வரன், மாநகர இளைஞரணி தலைவர் .மு.நாவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி நன்றி கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஒசூரிலிருந்து தருமபுரி நோக்கிப் புறப்பட்டார்.

தருமபுரியில் நடைபெற்ற பரப்புரைப் பயணப்பொதுக்கூட்டம்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம்  தருமபுரி குமாரசாமி பேட்டையில் நேற்று (21.4.2022) மாவட்ட தலைவர்மு.பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் .யாழ் திலீபன்  அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் இணைப்புரை வழங்கினார்.

மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன்,  மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ.மதிவதனி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மிழர் தலைவர் உரை

இறுதியாக பேசிய தமிழர் தலைவர், ”கல்வியைக் கண் என்கிறார்கள். ஆனால் இவர்கள் படிக்காதே என்கிறார்கள். காபூலில் மட்டும்தான் பெண்கள் மட்டும் படிக்கக்கூடாது என்று இருக்கிறதுஎன்றொரு தகவலைச் சொன்னார்.

அரசமைப்புச் சட்டப்படி பிரமாணம் எடுத்துக் கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ராஜ்பவனை ஆர்.எஸ்.எஸ். அலுவலக மாக பயன்படுத்துகிறார்என்று குற்றம் சாட்டினார்.

காமராஜர் ஆட்சியில் மாவட்டத் தலைநகர் தருமபுரியா? கிருஷ்ணகிரியா? என்று தடுமாற்றம் வந்தபோது, பெரியார் தோழர்களிடம் ஆலோசனை கேட்டு, தருமபுரியை தேர்ந் தெடுக்கலாம் என்று 'விடுதலை'யில் தலையங்கம் எழுதச் சொன்னார். எழுதினோம். அதைப் பார்த்த காமராஜர், பெரியார் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று தரும புரியை தேர்ந்தெடுத்தார்என்றொரு வரலாற்றுத் தகவலை எடுத்துச் சொன்னார்.

அமித்ஷா ஹிந்தி இணைப்பு மொழி என்று சொன்னதை திருக்குறளாரின் கருத்தைச் சொல்லி மக்களை சிரிக்க வைத்தார். தொடர்ந்து, “இது தேர்தலுக்காக அல்ல, தேர்வுக் காக வந்திருக்கிறோம். ஆகவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இதில்தான் இருக்கிறது. ஆகவே காவி என்று சொன்னாலே இங்கு இடமில்லை எனும்படி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, வி.சி.. மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், தி.மு.. ஆதி திராவிடர் நலக் குழு மாநில துணை செயலாளர் அரூர் இராஜேந்திரன், வி.சி.. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, சி.பி.எம். மாவட்ட செயலாளர் குமார், தி.மு.. நகர செயலாளர் நாட்டான் மாது, ‌.வா.கட்சி துணைப் பொதுச்செயலாளர் தவமணி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி, கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்த்தகிரி, கதிர், மாதன், மாவட்ட துணைத் தலைவர் புலவர் வேட்ராயன், மண்டல .. ஆசிரியரணி அமைப்பாளர் பெ.கிருட்டிணமூர்த்தி, மண்டல மாணவர் கழக செயலாளர் செல்லத்துரை, மண்டல இளைஞரணி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment