கல்வி உரிமைப் பயணம் வெல்க!
அவர் ஒப்பனைப் பூச்சு கவரிங் இளைஞர் அல்லர்
தியாக நெருப்பில் புடம்போட்ட தங்கம்:
பதவிக்காகவும் பணத்திற்காகவும் அலைபவர்களும்
ஊழலில் சிக்கிக்கொண்டு வழக்குமன்றில் அலைபவர்களும்
நாணத்தோடு தலைகுனியுங்கள்:
நம்நாட்டின் இளைஞர் தலைமுறை தடையேதுமின்றி
மருத்துவக் கல்வி பெறவும்
உயர்கல்வி வாய்ப்பினை அடையவும்
மிகநீண்ட பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ளார்;
குமரியிலிருந்து சென்னை வரை தொடர்ந்து பயணம்;
தனி விமானமா? உலங்கு ஊர்தியா?
சிறப்புக் கவனிப்பு எதுவும் கிடையாது?
மக்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவுமே பயணம்;
மாற்றின் லூதர் மேற்கொண்டதோ
குடிம உரிமைப் பயணம் (Civil rights march)
தமிழர் தலைவர்- நம் ஆசிரியர்- மேற்கொண்டது
கல்வி உரிமைப் பயணம்(Education rights march)
நம்மை இரண்டாந்தரக் குடிக்கள் ஆக்கிவிட்ட
மூன்றாந்தரக் கல்விமுறையை முற்றாக ஒழிக்க
ஆசிரியர் மேற்கொண்டுள்ளார் சீர்மிகு பரப்புரைப்பயணம்!
அலுப்பும் களைப்பும் அவர்முன்னே தோற்று ஓடிவிட்டன;
அயர்வு என்றால் என்ன என அவர் அறிந்ததே இல்லை;
முதுமை அவர் காலடிபட்டுப் பொடிப்பொடியாய்ப் போனது;
நாமெல்லாம் நாள்காட்டியைத்தான் கிழித்தெறிவோம்;
அவரோ வயதுகளையும் சேர்த்தே கிழித்து வீசி விட்டார்;
நீட்டு என்னும் தீட்டு ஒழிந்தாக வேண்டும்
ஓட்டைக் குடிசையில் ஒண்டியிருப்போரும்
மருத்துவக் கல்வியைப் பெற்று உயர்வுற
சமூகநீதியின் நலன்களைப் பெற்றிட
தன்னை வருத்திப் பயணம் வருகிறார்;
‘தவம் ‘ ‘ வேள்வி ‘ எனும் சொல்லெல்லாம்
இவரது பெருமுயற்சி முன்னாலே
தடுமாறித் தத்தளித்துப் பொருளிழந்து போயினவே!
ஆசிரியர் பரப்புரை மக்கள் அனைவர்க்கும்
அறிவும் விழிப்புணர்வும் வழங்கும் பயனுரை!
வெல்க வெல்க நம் ஆசிரியர் மேற்கொண்டுள்ள
கல்வி உரிமைப் பயணம் வையம் புகழவே!
- மறைமலை இலக்குவனார்
No comments:
Post a Comment