சென்னை, ஏப்.1 "ஆளுநர் மாளிகையா? சனாதன மடமா?" என்ற தலைப்பில் நேற்று (31.3.2022) இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதாமன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் வரிப் பணத்தில் தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து செயல்படும் ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் சனாதன அறக்கட்டளையின் விழாவை நடத்தியிருப்பதைக் கண்டித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் பேசுகையில், "மாநிலங்கள் வளர்ச்சி அடைவது உகந்ததல்ல" என பேசியிருப்பதையும் கூட்டம் கண்டித்தது.
திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.
ஆளுநர் மாளிகை
சனாதனத்தைக் காப்பாற்றவா?
தொடக்கவுரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள்,
"மாநிலங்கள் (பிராந்தியங்கள்) வளர்ச்சியடைவது நாட்டுக்கு நல்லதல்ல" என தமிழ்நாடு ஆளுநர் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது வியப்பாக இருக்கிறது.
மதச்சார்பற்ற சின்னமாக கருதப்படும் ஆளுநர் மாளிகையில், சனாதனத்தைக் காப்பாற்ற ஆளுநரே கூட்டம் நடத்துகிறார். அயோத்தி கோயில் இடிப்பு வழக்கில் வாதாடிய வழக்குரைஞருக்கு அதில் விருது கொடுக்கிறீர்கள், இது நியாயமா? மேலும், மாற்றங்கள் கூடாது, சனாதனம்தான் இருக்க வேண்டும் என ஆளுநர் பேசுகின்றார். ஆளுநர் மாளிகையில் வெளியாருக்கு எப்படி கூட்டம் நடத்த அனுமதிக்கிறார்கள்? என கேள்வி எழுப்பி உரையாற்றினார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
திராவிடம்தான் வெல்லும்
இக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றுகையில்:
தமிழ்நாடு ஆளுநர் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு, செய்ய வேண்டாதவைகளை செய்து வருகிறார். அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன? பெயரளவில் ஆளுநர் தலைவராக இருப்பார், செயல் அளவில் முதலமைச்சர்தான் மாநிலத்தின் தலைவராக இருப்பார் என சட்டம் சொல்கிறது.
ஆளுநர் மாளிகையில் சனாதன அறக்கட்டளைக்கு விழா நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம்? ஆளுநர் பொதுவானவராக இல்லை. ஆளுநருக்கு எந்தவித அடிப்படை அதிகாரத்தையும் மக்கள் வழங்கவில்லை. ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு இடையூறு செய்வதல்ல. மாநிலங்கள் வளரக் கூடாது என ஆளுநர் எப்படிப் பேசலாம்?தமிழ்நாட்டில் மத உணர்வை வளர்க்க பா.ஜ.க. முயன்று வருகிறது. இந்த மண்ணில் திராவிடம்தான் வெல்லும். ஆரியம் வெல்லாது. திராவிடத்தை எப்போதும் வெல்லவும், அதை வீழ்த்தவும் முடியாது என தம் உரையில் குறிப்பிட்டார்.
அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமாக...
நிறைவாக சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்:
ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படிதான் கடமையாற்ற வேண்டும். போட்டி அரசாங்கத்தை நடத்த முயன்று வருகிறார். அவர் அரசமைப்புச் சட்டப்படிதான் கடமையாற்ற வேண்டும்.
மக்கள் வரிப் பணத்தில் நடக்கும் ஆளுநர் மாளிகையை பஜனை மடமாக நடத்தி வருகிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமாக இந்த ஆளுநர் தன்னை நடந்து கொள்கிறார் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு!
ஆளுநர் தனது உரையில் 'நீட்' நேர்வை ஒத்துக் கொள்ள முடியாது என சட்டப் பேரவையில் உரையாற்றியவர் அந்த மசோதாவை ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை? ஆளுநர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம். மாற்றம் என்பது உறுதியானது என தமிழர் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் குடந்தை மாவட்ட மேனாள் கழகத் தலைவர் வை. இளங்கோவன், (வயது 82), தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் (வயது 62) ஆகியோரின் பிறந்த நாள் மகிழ்வை கொண்டாடும் வகையில் இருவருக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் கழகப் பொருளாளர்
வீ. குமரேசன், கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், சென்னை மண்டல கழகச் செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ. கணேசன், சோழங்கநல்லூர் மாவட்ட செயலாளர் பி.சி. ஜெயராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன், குடந்தை மாவட்ட மேனாள் தலைவர் தராசுரம் வை. இளங்கோவன், வழக்குரைஞர் சு. குமாரதேவன், வெ. ஞானசேகரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், க. கலைமணி, சி. வெற்றிச்செல்வி, பூவை. செல்வி, பெரியார் மாணாக்கன், உடுமலை வடிவேல், கோ.வீ. இராகவன், அரும்பாக்கம் சா. தாமோதரன், மு.ந. மதியழகன், சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், ஆயிரம் விளக்கு மு. சேகர், கி. இராமலிங்கம், சு. மும்மூர்த்தி, புரசை சு. அன்புச்செல்வன், சி. பாசுகர், வேலூர் பாண்டு, சீ. இலட்சுமிபதி, கொரட்டூர் கலைஞர் பாசறை இரா. கோபால், சி.செல்லப்பன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும், திரளான பொது மக்களும் பங்கேற்றனர்.
நிறைவாக வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ. கணேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment