புதுடில்லி, ஏப்.5 - பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களில் 12ஆவது தடவையாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று (4.4.2022) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
மக்களவையில் நேரமில்லா நேரம் தொடங்கியவுடன் தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியபடியே சபையின் மய்யப்பகுதிக்கு சென்றனர். அவர்களை தொடர்ந்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, பேரவைத் தலைவர் இருக்கையில் ராஜேந்திர அகர்வால் இருந்தார். அவர் சபை அலுவல்களை தொடர்ந்து நடத்தினார். அதையடுத்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை: மாநிலங்களவையிலும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக அமளி நடந்தது. விலை உயர்வு குறித்து விவாதிக்கக்கோரி கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களை சபை தலைவர் வெங்கையா
நிராகரித்தார். அமளி காரணமாக, காலையில் 2 தடவை சபை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடியது.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். சிலர் சபையின் மய்யப்பகுதிக்கு சென்றனர். இதையடுத்து, சபையை நாள் முழுவதும் சஸ்மித் பத்ரா ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment