தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நாகர்கோவில், ஏப்.4 ''சுயமரியாதை இயக்கத்தின் நாகரிகத்தொட்டில் நாகர்கோயில்! நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே எங்களின் தொடர் பிரச்சாரம்; இறுதியில் வெல்லப்போவது நாம்தான்! அந்த நம்பிக்கையை நாகர்கோவில் கூட்டம் கொடுத்துள்ளது'' என்று நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடக்கவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிரகடனம் செய்தார்.
நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணக் கூட்டத் தொடக்க விழா நேற்று (3.4.2022) நாகர் கோவிலில் தொடங்கியது.
இத்தொடக்க விழா மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில மகளிரணி அமைப்பாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்
ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெரு மாள், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட ப.க. தலைவர் உ.சிவதாணு, பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட துணை செயலாளர் சோ.மு.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பேசிய பின்னர் திரா விடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கொளுத்தும் வெயிலில் கோடையின் வெப்பத்தை கூட குளிர்தரு நிழலாக மாற்றி பரப்புரை பெரும் பயணத்தை தொடங்கி உள்ள கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி னார்.
நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ் உரை
நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
இவ்வளவு பெரிய தலைவர் முதுபெரும் திராவிட இயக்க தலைவர் மரியாதைக்குரிய ஆசிரியர் அய்யா அவர்கள் எனக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தபோது தலையை குனிந்து வாங்கினேன். அதற்கு ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார்கள், ''நீங்கள் குனியக் கூடாது. தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்'' என்று சொன்னார்கள். எனக்குப் பெருமையைச் சேர்த்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
கருப்புடை அணிந்து வழக்குரைஞராக பணிபுரிந்து வந்த நான் மாநகராட்சியின் முதல் குடிமகன் ஆகியுள் ளேன், மாநகர மேயராக உள்ளேன் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர், நமது ஆசிரியர் போன்ற தலைவர்கள் தான் காரணம். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் இன்றைக்கு எல்லோரும் நுழைய முடிகிறது என்றால் அதற்கும் காரணம் இந்தத் தலைவர்கள் தான்.
இந்தத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை சந்தித்த போது, தரையில் அமர வைத்தார்கள். ஆனால், சுப்பிரமணியசாமி சந்தித்தபோது இருக்கையில் அமர வைத்திருந்தார்கள். அதைக் கண்டு மண்ணின் மைந்தனாக எனக்கு நெஞ்சம் கொதிக்கிறது.
மக்களை சந்தித்து வெற்றி பெற்ற பொன்.ராதா கிருஷ்ணன் ஒன்றிய இணையமைச்சர். ஆனால், மக்களை சந்திக்காத ஒருவர் 'அவாளாக' இருக்கும் ஒரே காரணத்திற்காக ஒன்றிய கேபினட் அமைச்சர். பி.ஜே.பி. தான் இந்துக்களின் கட்சியாக இருப்பது போல் ஏமாற்றும் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் தலைவர் சிறப்புரை
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையின் தொடக்கத்தில் தனக்கு முன் பேசிய நாகர்கோவில் மேயர் மகேஷ் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார். அதாவது, நாகர்கோவில் காவிக்குரியது என்று சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது வெறும் கானல்நீர் தான்! பொய் மான்தான்! என்று காட்டியிருக்கும் அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னார்.
வித்தியாசம் முதுகிலிருக்கும்
ஒரேயொரு நூல்தான்!
மேயர் இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தன் பொன்.ராதாகிருஷ்ணன், சங்கராச்சாரியார்முன் கீழே அமர்ந்திருந்ததையும், அதே சங்காராச்சாரியார் முன் சுப்பிரமணியசாமி சரிக்குச் சமமாக நாற்காலியில் உட்கார்ந்ததையும், தான் வேதனைப்பட்டதாகவும் மேயர் பேசியதையும், பொன். ராதாகிருஷ்ணன் இந்துதானே? அவருக்கு ஏன் இந்த நிலை? பா.ஜ.க. இந்துக்களுக்கான கட்சி என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டி, மேயரை பாராட்டினார். அதுதொடர்பாக “இரண்டுக்கும் வித்தியாசம் முதுகிலி ருக்கும் ஒரேயொரு நூல்தான் காரணம் என்று” மேயர் சொல்லத்தவறியதை சொல்லி பார்வையாளர்களின் தெளிவைக் கூர்மைப்படுத்தினார்.
'சுயமரியாதை வாசிப்புச்சாலை'
சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றை சுட்டிக் காட்டிப் பேசினார். நாகர்கோவில்தான். திராவிடர் இயக்கத்தின் நாகரீகத்தொட்டில்! இங்குதான் முதன் முதலில் வாசிப்பு சாலை தொடங்கப்பட்டது. அதற்குப் பெயர் 'சுயமரியாதை வாசிப்புச்சாலை' என்றும் 88 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவூட்டி பார்வை யாளர்களை சிந்திக்க வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.
'தானாடாவிட்டாலும் சதை ஆடும்' என்பதுபோல, பொன்னார் அவமானப்படுத்தப்பட்ட போது, காவிக் கட்சிக்காரராக இல்லாவிட்டாலும் கருப்பு, சிவப்புக் காரரான மேயர் சங்கடப்பட்டிருக்கிறார் என்று முன்பு பேசியதை இணைத்துப் பேசினார்.
தொடர்ந்து அ.தி.மு.க. கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கும், தி.மு.க. கொண்டு வந்த மசோதாவுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி, மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கையின் சிறப்பை எடுத்துரைத்தார்.
நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றத்தான்
இந்த பிரச்சாரப் பயணம்
ஏன் இந்தப் பிரச்சாரம் என்று விளக்க வந்தவர், மற்ற நாடுகளில் படிக்காதவர்கள் உண்டு. ஆனால், இங்குதான் படித்தால் தண்டனை என்ற வர்ணாசிரம முறை இருந்தது. அதன் தொடர்ச்சிதான் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித்திட்டம், இப்போது வந்துள்ள புதிய தேசியக் கல்வித்திட்டம் என்று கூறி, இந்த புதிய கல்விக்கொள்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை ஏகலைவன், துரோணாச்சாரியார் பற்றிய புராணக்கதையைக்கூறி விளக்கி, அதிலிருந்து நமது பிள்ளைகளின் எதிர்காலத் தைக் காப்பாற்றத்தான் இந்த பிரச்சாரப் பயணம் என்றார்.
இப்படிப்பட்ட நிலைமைகளுக்கு அ.தி.மு.க.வும் ஒரு காரணம் என்பதை சொல்லவரும்போது, இந்த சனாதன சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்பதைவிட, முதலில் அ.தி.மு.க.வை மீட்கவேண்டியிருக்கிறது என்று கூறியதும் கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது. அ.தி.மு.க ஆட்சி பற்றி நினைவூட்டியவர், தி.மு.க. ஆட்சி எப்பட்டிபட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டதை படித்துக் காட்டி விளக்கி, மக்கள் அதிகம் கவனிக்காத ஒரு நுட்பமான செய்தியை வெளிப்படுத்தினார்.
இறுதியில் வெல்லப்போவது
நாம்தான்!
தி.மு.க. ஆட்சி பற்றி மேலும் சொல்ல வந்தவர், “கொடையிலேயே சிறந்த கொடை அறிவுக்கொடைதான்! நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அந்த அறிவுக்கொடையைத்தான் 'திராவிட மாடலாக' இந்தியாவுக்கே கொடுத்துக் கொண் டுள்ளார். 'திராவிட மாடல்' என்பதைப் பற்றி சொல்லவரும் போது, ”தோல் முக்கியமல்ல தோழனே! உழைக்கின்ற தோழனின் தோள்தான் முக்கியம்'' என்று, ஆரியம் பேதப்படுத்துகிறது என்பதைக் கூறி, இறுதியில் வெல்லப் போவது நாம்தான். அந்த நம்பிக்கையை நாகர்கோவில் கொடுத்துள்ளது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
பரப்புரை கூட்டத்தில் நாகர்கோவில் கிழக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும் மாநகர மேயருமான ரெ.மகேஷ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.பெர்னார்டு, ம.தி.மு.க.கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தி யத்தேவன், மாவட்ட செயலாளர் எஸ்.வெற்றிவேல், சி.பி.அய். மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, வி.சி.க. நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் பா.பகலவன், கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, மாநில சட்டத்துறை செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் நா.கணேசன், தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன்ராசா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், நெல்லை மண்டல தலைவர் இரா.காசி ராசன்,
மதுரை மண்டல செயலாளர் நா.முருகேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.இரா. பார்த்தசாரதி, தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் கோவி.ராகவன், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment