முஸ்லிம்கள் போல் வேடமிட்டு அயோத்தி மசூதி பகுதியில் ஆட்சேபகர பொருள்கள் வீச்சு: 7 பேர் கைது
புதுடில்லி,ஏப்.30- அயோத்தி மசூதிகளில் மதநம்பிக்கைக்கு எதிரானவற்றை வீசி கலவரம் தூண்ட முயற்சி நடந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2 மசூதிகளில் கவனத்தைத் தூண்டும் நோக்கில் பொருட்களை ஒரு கும்பல் 28.4.2022 அன்று இரவு வீசிவிட்டு தப்பியது. முஸ்லிம்கள் போல் வேடமிட்டு 8 பேர் இரு சக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வீசி சென்றனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மசூதிகளை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போது, குற்றவாளிகள் தலையில் குல்லா, முகக்கவசம் மற்றும் துண்டுகளை அணிந்து இரு சக்கர வாகனங்களில் வந்து செல்வது தெரிந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தி 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து அயோத்தியா மண்டல அய்.ஜி. கவிந்திரா பிரதாப்சிங் கூறும்போது, ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு, முஸ்லிம்களின் நூலான குரானின் சில பக்கங்களையும், இறைச்சியையும் வீசியுள்ளனர். கலவரத்தை தூண்டும் வகையில் சுவரொட்டி களும் ஒட்டப்பட்டிருந்தன. மகேஷ்குமார் மிஸ்ரா என்பவர் தலைமையில் அவரது வீட்டில் இச்செயலுக்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மொத்தம் 11 பேர் திட்டமிட்டு 8 பேர் அரங்கேற்றியுள்ளனர். இவர்களில் 7 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். மற்ற நால்வரை தேடி வருகிறோம்’’ என்று தெரிவித்தார். அயோத்தி நாகர் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் மிஸ்ரா,பஜ்ரங் தளத்தின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர். இவருடன் பிரத்யூஷ் சிறீவாத்சவா, நிதின் குமார், தீபக் குமார் கவுர், பிரஜேஷ் பாண்டே, சத்ருகன் பிரஜாபதி மற்றும் விமல் பாண்டே ஆகியோரும் கைதாகி உள்ளனர். இவர்களில் மகேஷ், நிதின், விமல் ஆகியோர் மீது ஏற்கெனவே அயோத்தி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. நான்கு இரு சக்கர வாகனங்களில் சென்ற 8 பேரும், அயோத்தியின் 6 முக்கிய மசூதிகளில் ஆட்சேபகரமான பொருட்களை வீச திட்டமிட்டுள்ளனர். சில மசூதிகளின் முன்பு ரோந்து காவல்துறையினரின் வாகனங் கள் இருந்ததால், அவற்றை தவிர்த்து மற்ற மசூதி பகுதிகளில் வீசியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி ஜஹாங்கீர்புரியில் கடந்த 16ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அயோத்தியில் இதை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment