ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: கல்விக்காக வசூலிக்கப்பட்ட செஸ் வரி செலவு செய்யப்படவில்லை என்று மாநிலங்களவையில் என்.வி.என்.சோமு கனிமொழி கூறியுள்ளாரே?

- மணிமேகலை, வீராபுரம்

பதில்: நியாயமான கேள்வி. கல்விக்காக வசூ லிக்கப்பட்ட செஸ் வரியை - கல்விக்கே செலவழிப்ப துடன், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களுக்கும் செல வழித்து வெளிப்படைத் தன்மையோடு Transparency செயல்படும் அரசு - ஒன்றிய மோடி அரசு - என்று மக்களுக்குக் காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டு.

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் தெருக்கள் உள்பட பொது இடங்களின் பெயர்களில் ஒட்டியிருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்க ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் ஆணை உள்ளது. தற்போது வெளியிடப்படும் திரைப்படங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களின் பின்னால் இப்படி ஜாதிகள் ஒட்டப்பட்டு ஒளிபரப்பப் படுவதையும் ஒட்ட - வெட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா?

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை,

பதில்: முழுமையான ஜாதி ஒழிப்புச் சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டால் மட்டுமே அது சாத்தியம். ஜாதிப் பட்டம் - பி.., எம்.., மாதிரி படித்துத் தகுதியில் வாங்கிய பட்டம் இல்லை. அதுவும் மூளைக்குப் பூட்டப்பட்ட விலங்குதானே!

- - - - -

கேள்வி: நாத்திகர்கள் காதணிவிழா போன்ற நிகழ்ச்சிகளை சடங்குகள் இல்லாமல் நடத்தி, பொது நிகழ்ச்சிகளுக்கு வராத உறவினர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யலாமா?

- விஜயகுமார், பிலாக்குறிச்சி

பதில்: தந்தை பெரியார் அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் கூட, மூடநம்பிக்கைகளைக் கண்டித்துப் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பாகவும், பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.

முன்புகாதணி விழாஎன்று சொல்வது கிடையாது; ‘கர்ணபூஷண பண்டிகை' என்றுதான் வடமொழி சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டு பார்ப்பனர் தட்சணை வாங்க வருவார். (‘கர்ணம்என்றால் காது என்று பெயர்).

பக்குவமாக பெண்களுக்குச் சொல்ல அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மஞ்சள் நீராட்டு, பூப்பெய்தல் போன்றவற்றை விளம்பரப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டியவையே.

- - - - -

கேள்வி: கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் அரசால் பள்ளிகள் அமைக்க முடியாத இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் உருவாகி, அரசுப் பள்ளிகளின் சேவைகளை அவை செய்து வரும் நிலையில்   - அரசுப் பள்ளிகளுக்கு தரும் அனைத்தும் உதவிபெறும் பள்ளிகளுக்கும் அவசியம் அல்லவா?

- கவின், கோடம்பாக்கம்

பதில்: நிச்சயமாக - ‘Aided - உதவி பெறும்என்ற ஒரு வகை Classification மதிப்பீடுகளை தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித் துறையும் கவனத்தில் கொள்ளத் தவறக் கூடாது - கணக்கு தணிக்கை  (Audit)  செய்யப்படுவதால் - தயக்கம் தேவையில்லை.

கல்வி வளர்ச்சி முழுவதையும் அரசே ஏற்கும் நிலையில் இல்லாதபோது, இது ஒரு மாற்று வழிப்பாதை - துணை வழிப்பாதையாகும்.

- - - - -

கேள்வி: கருநாடகாவில் நிகழும் மதவாத செயல் பாடுகளால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா?

- மா. செல்லத்துரை, நெல்லை

பதில்: தமிழ்நாடு திராவிட மண் - பெரியார் பூமி - அதன் பாதிப்பு இங்கே வராது. வரவிடமாட்டோம்.

- - - - -

கேள்வி: கோயில்களை இந்துக்களிடம் ஒப்படை யுங்கள் என்ற முழக்கம் - தற்போது இந்து அமைப்பு களிடம் ஒப்படையுங்கள் என்று ஒலிக்கிறதே?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.,- பார்ப்பனர் பகல் கொள்ளைக்காகவே சொல்லப்படுவது. - 1923 முதல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையை உருவாக்கிய நீதிக்கட்சி என்ற திராவிடர் ஆட்சி - பனகால் அரசரின் ஆட்சி செய்த ஏற்பாடே - பார்ப்பனக் கொள்ளைக்குத் தடை போட்டது.

மீண்டும் வடபுலத்தில் சாமியார் - பார்ப்பனக் கொள்ளை நடப்பதுபோல இதனை ஆக்க - ருசிகண்ட கோயில் பூனைகள் உறியை எட்டி எட்டித் தாவுகின்றன.

ஒரு புதிய நூல் இதுபற்றி வெளிவருகிறது - வாங்கி              படித்து, பரப்புங்கள்.

- - - - -

கேள்வி:  மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை ரத்து செய்வது சரியா?

-கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில்: அரசின் கொள்கை முடிவுகளில் எந்த நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூட - குறுக்கிடக் கூடாது என்பதே சட்டப்படி உள்ள நிலை. கொள்கை முடிவுகளை நீதிமன்றங்கள் எடுக்க அவற்றுக்கு அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் இல்லை.

- - - - -

கேள்வி: ஒன்றிய அரசின் அதிகார மய்யங்களின் அனைத்து நிர்வாகங்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றிவிட்ட நிலையில் இனிமேல் திராவிடர் இயக்கங்களில் பொறுப்பேற்றுப் பணியாற்று பவர்களுக்குத் தாங்கள் தரும் அறிவுரை என்ன?

- .தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: தீயணைப்பை எப்படி எதிர்கொள்வோமோ அப்படி இந்த மதவெறி, பார்ப்பனீய ஜாதி வெறி - அதிகார வெறியை எதிர்த்து ஒரு பெரும் அணி திரண்டு எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்.

கரோனா கொடுந்தொற்றைவிட இந்த நச்சுக் கிருமிகள் ஆபத்தானவை என்பதால் தடுப்பு தீவிரமாக வேண்டும்.

- - - - -

கேள்வி: குஜராத்தில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாட்டால் வாரம் ஒரு நாள் தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்று அந்த அரசு உத்தரவிட்டுள்ளதே-இதுதான் குஜராத் மாடலா?

- ஆர்.ரவி, கே புதூர்

பதில்: இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி - பாராட்டுகள்!

- - - - -

கேள்வி: கேரளாவிலும் இந்துக்கள் அல்லாத கலைஞர்களுக்கு கோவில் வளாகங்களில் நடனமாட தடை விதித்துக்கொண்டு வருகிறார்களே?

- சே.முத்துராஜ், தஞ்சை

பதில்: வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய செய்தியாகும். மதவெறியின் தாக்கத்தை நியாயமாக அந்த அரசு தடுத்தாட்கொள்ள முன் வரவேண்டும்.

No comments:

Post a Comment