ஆளுநர் மாளிகைக்குள்ளேயே இருக்கட்டும் ராமராஜ்ஜியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

ஆளுநர் மாளிகைக்குள்ளேயே இருக்கட்டும் ராமராஜ்ஜியம்!

இந்தியத் துணைக் கண்டத்தில் அதிகார வர்க்கமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டலுக்கு மட்டுமல்லாமல், தங்களைச் சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும், மற்றவர்களைத் தங்களுக்குக் கீழானவர்களாகவும் வைத்துக் கொள்ளவும் - தீண்டாமை உள்ளிட்ட அனைத்து வகையான சமூகக் கொடுமைகளையும் உழைக்கும் மக்களாகிய பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்மீது திணித்து ஆதிக்கம் செய்ய கடவுள்களையும், மதங்களையும், அதன் பெயரால் உரு வாக்கப்பட்ட வேத, இதிகாச, புராணக்கதைகளையும் பயன் படுத்தினர்.

இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் இராமராஜ்யம் என்ற பெயரில் தங்களின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி நிறுவுவதற்கும், ஆட்சி அதிகாரங்களைத் தக்க வைப்பதற்கும் இராமாயணத்தையும், இராமனையும் பயன்படுத்துகிறார்கள்.

இவர்களின் இராமராஜ்யத்தில் நடைபெற்ற சில நிகழ்வு களை வைத்தே இன்றைய இளைய தலைமுறையினருக்கு இராமராஜ்ஜியத்தின் அழுக்கு மூட்டையை அவிழ்த்துவிடலாம். இராமனின் இராஜ்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால், ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டத்தை  படிக்க வேண்டும். இந்த பகுதியைக் கம்பன் தொடவில்லை, காரணம் அவாளுக்குத்தான் புரியும்.

உத்தர காண்டம் 111 பகுதிகளைக் கொண்டது. இதில் இராமனின் ஆட்சி, மக்களின் வாழ்நிலை, சீதைக்கு நேர்ந்த நிலை போன்ற கதைகள் உண்டு. இராமன் 11000 ஆண்டுகள் ஆட்சி செய்தானாம். இராம இராஜ்ஜியத்தில் உத்தர காண்டத்தில் 73 முதல் 76 ஆம் பகுதிகளில் இராமன் ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் வருணாசிரம வெறியோடு ஆட்சி செய்தான் என்றுள்ளது.

இராமனுடைய ஆட்சியில் ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்து விட்டதாகவும், அதற்குக் காரணம் யாரோ ஒரு சூத்திரன் தவவலிமைபெற்று கல்வியில் சிறந்தவனாகி குருவாக இருக்கிறான்என்று பார்ப்பனர்  கூறியதை அடுத்து குதிரையில் ஏறி நாடுமுழுவதும் சென்று பார்க்கிறார். அப்போது சம்பூகன் தனது குருகுலத்தில் மாணவர்களோடு இருக்கிறார். (இதுபோல் ஏகப்பட்ட கதைகள் உண்டு).

 அவரைப் பார்த்த இராமன்நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்? நீ பிராம்ணனா? பராக்கிரமசாலியான சத்திரி யனாநான்காம் வருணத்தவனா?” சம்பூகன்: “மஹாராஜா, நான்  நான்காம் வருணத்தவன், சம்பூகன் என்று எனக்குப் பெயர். இந்தச் சரீரத்துடன் தேவபதியை அடைய விரும்பு கிறேன். ஆகையால் பொய் சொல்ல மாட்டேன்என்று சொல்கிறார்.

உடனே இராமன் தன் உறையிலிருந்து கத்தியை உருவி, சம்பூகன் தலையை வெட்டினான், அவருடைய மாணவர்களை ராமனுடன் வந்தவர்கள் வெட்டிச் சாய்க்கின்றனர்தேவர்கள் அனைவரும்நல்லது” “நல்லதுஎன்று ஆர்ப்பரித்து மகிழ்ந் தார்களாம்தவம் செய்வதற்கும், கல்விகற்பதற்கும்  சூத்திர னுக்கு அனுமதி இல்லை என்பதை இராம இராஜ்யத்தின் நாயகனே தெளிவாகச் சொல்லி விட்டார். சமூகத்தில் பார்ப் பனர் அல்லாதார் யாராக இருந்தாலும் கடவுளை அடைய நினைக்கக் கூடாது என்பதைத்தான் இராமாயணம் நமக்கு உணர்த்துகிறது.

 கல்வியில் சிறந்த அனிதா முதல் ரோகித் வேமுலா வரை மரணத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்றால்  - நான்காம் வருணத்தாருக்கு அனுமதி இல்லை என்ற வருணாசிரம கோட்பாடு இன்றும் உள்ளதால்தான்; இராம இராஜ்ஜியம் அமைந்தால் பெண்களின் நிலை என்னவாகும்? ஜம்முகாஷ்மீர் கதுவா மாவட்டத்தில் ஆஷிபா என்ற 8வயது சிறுமியை வன் புணர்வு செய்த காட்டுமிராண்டிகளை ஆதரித்து ஊர்வலம் போகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ், ஹத்ரஸ் போன்ற மாவட்டங்களில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொலைகாரர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள். இதுதான் ஆளுநர்  ரவி சொல்லும் இராமராஜ்ஜியம் - சனாதன தர்மம்! இந்த இராமராஜ்ஜியப் பாதிப்புகள் இந்திய மண்ணைத் தீண்டி விடக்கூடாது என்பதற்காகத்தான் பாபாசாகேப் அம்பேத்கர்  அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி நமக்களித்தார்.

இன்று அந்த சட்டத்தால் நாம் அனைவரும்  ஓரளவு பாதுகாப்பாக இருக்கிறோம். சுதந்திரமாக நமக்கானதைப் பெறப்போராடுகிறோம். அதனை அகற்றி விட்டு இராமராஜ்ஜியத்தைக் கொண்டுவந்து மேலே கூறிய வருணாசிரம மனுதர்ம ஆட்சியைக் கொண்டுவரத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகவின் மூலம் அதித் தீவிரமாக முயல்கிறது.

அதற்கான விதைகளைத்தான் ஆளுநர் ரவி போன்றோர் முற்போக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு தூவிக் கொண்டு இருக்கின்றனர், ஆனால் ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறோம். தமிழ்நாடு மண் இது பெரியார் மண், ஆளுநரின் ராமராஜ்ஜியக் கனவு ஆளுநர் மாளிகைக்குள்ளேயே இருக்கட்டும்

No comments:

Post a Comment