திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கப்பட இருந்த கலைஞர் சிலையை தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட இருப்பதுகண்டு பெருமகிழ்ச்சி - பாராட்டும், வாழ்த்தும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கப்பட இருந்த கலைஞர் சிலையை தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட இருப்பதுகண்டு பெருமகிழ்ச்சி - பாராட்டும், வாழ்த்தும்!

சிலை திறப்பு நாளை ஆர்வமுடன் நாடே எதிர்பார்க்கிறது!

தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு, அன்னை மணியம்மையார் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை, விஷமிகள் சிலரால் உடைத்தெறியப்பட்ட நிலையில், மீண்டும் திராவிடர் கழகம் அதே இடத்தில் கலைஞர் சிலையைத் திறக்க அனுமதி வழங்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசே கலைஞர் அவர்களின் சிலையை திறக்க இருப்பதும், கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்துவது என்ற முடிவும்  பூரிப்பைத் தருகிறது - திராவிடர் கழகம் பெருமகிழ்ச்சி கொள்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு சென்னை ஒமந்தூரார் வளாகத்தில் சிலை திறக்கப் படுவது குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ் நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பதும், கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்பதும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரியதாகும்.

கலைஞரின் உழைப்புக்கும், ஆற்றலுக்கும், சாதனை களுக்கும் நன்றிக் கடப்பாடுடைய எவரும் இதனை வரவேற்கவே செய்வர். அந்த வகையில், சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் பாராட்டி வரவேற்றிருப்பது போற்றத்தகுந்ததாகும்.

தந்தை பெரியாரின் விருப்பமும் - அறிவிப்பும்!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல மைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டதற்காக சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் (14.8.1971) கலைஞருக்குக் கண்டிப்பாக சிலை வைக்கவேண்டும்; வைத்தாகவேண்டும் என்று அறிவித்தவர் தந்தை பெரியார்.

அந்த விழா மேடையிலேயே நன்கொடையும் அறிவிக்கப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் ரூ.1001 என்று அறிவித்தார்; மேலும் பலரும் நன்கொடைத் தொகையை அறிவித்தனர்.

அந்நிகழ்ச்சியில் ஏற்புரை வழங்கிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தி.மு.க. சார்பில் சென்னையில் தந்தை பெரியாருக்கு சிலை வைக்கப்பட்ட பிறகு - எனக்குச் சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார்.

அதன்படி, தந்தை பெரியார் மறைந்த பிறகு நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாளில் (17.9.1974) சிம்சன் அருகில் தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது (24.12.1974).

மானமிகு கலைஞர் அவர்கள் தி.மு.க. சார்பில் தம் கடமையைச் செய்து முடித்த நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் அவர்களுக்குச் சிலை வைக்கும் முயற்சியில் - திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் ஈடுபட்டார்.

கலைஞரின் சிலை திறப்பிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்

முறைப்படி அதற்கான அரசு ஆணையும் பெறப்பட்டது (G.O.Ms.No.877, dated 21.5.1975).

சென்னை அண்ணாசாலை  ஜெனரல் பேட் டர்ஸ் சந்திப்பில் அன்னை மணியம்மையார் தலை மையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் சிலையைத் திறந்து வைத்த விழா மக்கள் கடலின்முன் நடைபெற்றது (21.9.1975).

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைந்த நிலையில், துரோக சக்திகள் - விஷமிகள் சென்னை அண்ணா சாலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த கலைஞர் சிலையை உடைத்தனர் (24.12.1987).

அப்பொழுதுகூட, ''அந்த இளைஞன் என் முதுகில் குத்தவில்லை - என் மார்பில்தானே குத்தினான்'' என்று கலைஞர் அவர்கள் பெருந்தன்மையோடு எழுதிய துண்டு.

திராவிடர் கழகத்தால் தந்தை பெரியார் கட்டளைப்படி நிறுவப்பட்ட கலைஞர் அவர்களின் சிலை மீண்டும் நிறுவப்படுவதற்கான முயற்சியில் திராவிடர் கழகம் இறங்கியது.

ஒரு ரூபாய் நன்கொடை என்று அறிவிக்கப்பட்டு, நிதி திரட்டப்பட்டு, சிலையும் உருவாக்கப்பட்டது (இன்றும் நம்மிடம் உள்ளது).

மானமிகு கலைஞர் அவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், சிலை கைவசம் இருந்தும், சிலையை அதே இடத்தில் நிறுவும் முயற்சியில் தடங்கில் ஏற்பட்டது.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்த நிலையில், அவர்களை நேரில் சந்தித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களுக்குச் சிலை நிறுவும் கடமையை நினைவூட்டப் பட்டது; அது தந்தை பெரியாரின் கட்டளை - அன்னை மணியம்மையார் தலைமையில் திறக்கப்பட்ட சிலை என்பதை எல்லாம் நினைவூட்டி, அனுமதி கோரப்பட்டது.

அதுபற்றி பரிசீலிக்கிறோம் என்று முதலமைச்சர் தெரிவித்தார். சில மாதங்கள் ஆன நிலையில், மறுபடியும் நினைவூட்டினோம். இந்த நிலையில், அரசே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களுக்குச் சிலை வைப்பதாக அறிவித்திருப்பது கண்டு தாய்க்கழகமான திராவிடர் கழகம் பூரிக்கிறது - அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது!

கலைஞர் அவர்களின் சிலை திறப்பு என்பதன் பின்னணி என்ன என்பதை நிகழ்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறோம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்புப் பொன்னாளை ஆர்வமுடன் திராவிடர் கழகம் மட்டுமல்ல - நாடே எதிர்பார்க்கிறது.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.4.2022


No comments:

Post a Comment