கலவரத்தைத் தூண்டும் “காஷ்மீர் பைல்ஸ்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

கலவரத்தைத் தூண்டும் “காஷ்மீர் பைல்ஸ்”

'காஷ்மீர் பைல்ஸ்' எனும்  திரைப் படத்தின் மூலம்- மதரீதியாக நேரடியாக பிளவிற்கு வித்திட்டுள்ளது அதிகார மய்யம்.

 இந்தியாவில் காஷ்மீர் இந்து பண்டிட்கள் பற்றிய படம் ஒன்றை "காஷ்மீர் பைல்ஸ்" என்ற பெயரில் ஒருவர் படம் எடுக்க அதை ஒரு நாட்டின் பிரதமரே அனைவரும் பார்க்கவேண்டும் என்கிறார். ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு துறைரீதியில் கடிதங்கள் பறக்கிறது. அதாவது அனைவரும் "காஷ்மீர் பைல்ஸ்" படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டுமாம். 

 அதைவிட அச்சமூட்டக்கூடிய ஆணை அசாம் அரசின் உத்தரவு. அரசு மற்றும் தனியார் பெரு நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் காஷ்மீர் பைல்ஸ் படத்தைப் பார்த்து விட்டு அதன் அனுமதிச் சீட்டை மறுநாள் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று விடுத்திருந்த சுற்றறிக்கை அதிர்வலையை ஏற்படுத்தியது. 

காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்துமே இட்டுக்கட்டியவை கற்பனையானவை, மேலும் டில்லியில் பாஜக ஆட்சி இருந்த போதுதான் அங்கு கலவரம் மூண்டது.

அங்கு இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது? அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டு. இந்த இரண்டு மதத்தவர்களுக்கு மிடையே நிலவிவரும் இணக்கத்தை சீர்குலைத்த கூட்டம் தான் இந்த படத்தையும் எடுத்துள்ளது! கற்பனைக்கதையைச் சொல்லி  அதை உண்மை என நம்பவைத்து,  நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டி வருகின்றனர்.

’முஸ்லீம் வெறுப்பு’ என்ற நோக்கத்திற் காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் 'காஷ் மீர் பைல்ஸ்'! அதில் வெற்றியும் பெற்றுள்ள னர். கலைத் திறமையும்,  நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத் துவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்து கிறது.

காஷ்மீர் பண்டிட்  சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும். அந்த ஈனச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். புலம் பெயர்ந்த பண்டிட் சமூக மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும்.ஆண்டாண்டு காலமாக ஒன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்த காஷ்மீர் முஸ்லீம்களும், காஷ்மீர் பண்டிட்களும் ‘காஷ்மீரியத்’ என்று போற்றப்படும் காஷ்மீரத்துக்கே உரித்தான மத நல்லிணக்கம் மீட்டெடுக்கப்பட வேண் டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்!

மத வெறியைக் கிளற வேண்டும் அரசியல் ஆதாயம் பெற வேண்டும்’ என்பதற்காக பிரதமர் மோடி தொடங்கி கடைக்கோடி ஹிந்துத்துவ நபர் வரை இப்படத்தைப் பெருமளவு பாராட்டி வியந்து வியந்து மற்றோரையும் பார்க்கத் தூண்டு கின்றனர் . அப்படி பார்ப்பது என்பது ஆயி ரம் பசுக்களை தானம் செய்வதைவிட சிறந்த செயல் என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை அறிவிக்கிறது. கோவில்களில் இந்தப் படத்திற்கான அனுமதிச் சீட்டுகள் பிர சாதமாக தரப்படுகின்றன.  மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று ஹிந்துத்துவ அமைப்பினர் புகழாரம் சூட்டுகின்றனர்.

வரலாற்று நிகழ்வுகளை பற்றியும் ,வரலாற்று சோகங்களை பற்றியும், அனைத்து யுத்தங்கள் பற்றியும், சினிமா படங்கள் பல வெளிவந்துள்ளன. இவை களில் பல வெறும் பிரச்சாரங்களாகவும் , ஒருதலைப்பட்சமானதும், ஒருபக்க நியாயத்தை பேசுவதாகவும் வந்ததுண்டு.

ஆனால், ஒருசில படங்கள் உண்மையை - அது யாரை எவ்வளவு சுட்டாலும் - இருபக்க நிகழ்வுகளையும் உள்வாங்கி பார்வையாளனை வெளிச்சத்தை நோக்கி நடைபோடத்தூண்டும்

ஆனால், வக்கிரங்களுக்கும், மிருக வெறிக்கும் மக்களை இழுப்பதற்குப் பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன. அவற் றில் ஒன்றே இந்தப் படம் ஆகும்

இந்து மத வெறியர்களின் பகடைக் காயாக காஷ்மீர் பண்டிட் சமூகம் ஆக்கப் பட்ட உண்மையை மறைத்துவிட முடியாது!

இல்லையென்றால் ‘அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை’ என்பதை இப்படம் விவரிப்பதாக இதன் அபிமானிகள் பெருமை  கொள்வதின் அர்த்தம் இதில்தான் உள்ளது . நல்லிணக்கத்தை உருவாக்க அல்ல!  மத வெறியை, மத வெறுப்பை தட்டியெழுப்பவே காட்சிகள் ஜோடிக்கப் பட்டுள்ளன. இந்தப் புனைவுக்கு உண்மை தான் பலியானது என்பதில் வியப்பில்லை.

முதலில் சில உண்மைகளை மனதில் கொள்வோம் . காஷ்மீரத்தில் இருந்து பண்டிட் சமூகத்தினர் 1990இல் பெருமளவு வெளியேறினர் , அப்பொழுது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை . பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 

பண்டிட்டுகள் வெளியேற்றம் 1990 ஜனவரியில் தொடங்கியது, அப்பொழுது அதை ஊக்குவித்தவர் 'எமர்ஜென்சி' அத்து மீறல் புகழ் ஜக்மோகன் தான்; .அவர்தான் அன்று காஷ்மீர் ஆளுநர். அத்வானியால் பரிந்துரைக்கப்பட்டு- அவர் தீவிர முஸ்லீம் வெறுப்பாளராகவும், ஆர்.எஸ்.எஸ் பக்த ராகவும் இருந்த காரணத்தால்- ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரது பாரபட்சமான நிர்வாகத்தால் தான் முஸ்லீம்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி  தீவிரவாதம் உருவானது. அதைக் காரணம் காட்டி, அரசு அடக்குமுறையும் தலைவிரித்து ஆடியது. ஆக,  நல்லிணக் கத்துடன் வாழ்ந்த காஷ்மீரில் கலவரச் சூழலை உருவாக்கியதே ஆர்.எஸ்.எஸ், - பாஜக கூட்டணி தான்!

காஷ்மீர் பைல்ஸ் படம் இவ்வளவு நாள் மறைக்கப்பட்ட உண்மையை வெளிக் கொணர்ந்ததாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளளார். இவர் எந்த உண்மை பற்றி பேசுகிறார்?

இதைப்போன்றே உள்துறை அமைச்சர் அமீத் ஷா கட்ந்த பிப்ரவரி 23இல் நாடாளு மன்றத்தில்  பேசும்பொழுது ‘44,000 காஷ்மீர் பண்டிட் குடும்பங்களுக்கு தலா 13,000 ரூபாய் மாதந்தோறும் பாஜக அரசு வழங்கு வதாக நீட்டி முழக்கினார் . ஜம்மு காஷ்மீர் அரசு ஆவணமோ 20,889 குடும்பங்களே உதவி பெற்றனர் என்கிறது. எது உண்மை?

இதைப்பற்றி புலம்பெயர்ந்த காஷ்மீர் மக்கள் வீடு திரும்புதல் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க அமைப்பின் (Reconciliation, Return and Rehabiliation of Kashmir Migrants)  தலைவரான சதீஷ் மகால்தர் இப்படி கூறுகிறார் .”மன் மோகன் சிங் காலத்தில் 2008-2009 கொண்டுவரப்பட்ட திட்டம் மூலம் நிவாரணமும் 6,000 பண்டிட் சமூக இளைஞர்களுக்கு அரசு வேலையும் மொத்தம் 15,000 பணி வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. பாஜக அரசு இதற்காக, பண்டிட்களின் புனர்வாழ்விற்கு ஒரு துரும் பைக்கூட எடுத்துப்போட வில்லை“ என்று புலம்பு கிறார் (பார்க்க்: 23/2/2021 டெலிகிராப் இந்தியா) .

பாஜக ஆதரவாளரும், பனூன் காஷ்மீர் அமைப்பின் தலைவருமான அக்னிஷேகர் - புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டித சமூகத்தினர்கான நமது காஷ்மீர் அமைப்புதான் பனூன் காஷ்மீர் ஆகும் -”அமீத் ஷாவின் அறிக்கையும் பேச்சும் சந்தர்ப்ப வாதம் வெட்ககேடான செயல்! எப்படி இவர்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்காமல், ‘அதை செய் தோம் இதை செய்தோம்’ என்று பிதற்ற முடிகிறது?” என்று வேதனைப்படுகிறார்.

இது போன்ற எண்ணற்ற காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரும் பாஜக மற்றும் ஆர்எஸ்.எஸ் அமைப்பினரும் தங்களை - தங்களின் துயரத்தை - அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதும் பண்டிட்களின நல்வாழ்விற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதையும் கண்டு வெதும்பு கின்றனர் . அரசியல் பிரிவு370அய் நீக்குவதால் எங்களுக்கு மறு வாழ்வு கிடைக்காது. மேலும் 35 A   பிரிவு எங்களின் - காஷ்மீரிகளின் - தனித்தன் மையை பாதுகாக்கிறது என்ற வாதத்தை இப் பொழுது காஷ்மீர் பண்டிட் மக்களும் உணர்ந்து உள்ளனர் என்கின்றனர் சோன் காஷ்மீர் முன்னணி அமைப்பினர். இவர்கள் பண்டிட் சமூக அமைப் பினரே! அவர்கள் பாஜகவின் வெற்று முழக்கங் களால் எங்கள் வாழ்வு மலரப் போவதில்லை என்கின்றனர்.

காஷ்மீர் பண்டிட்களை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் அவர்களை மத துவேஷிகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படி மாற்றியதோ அதைப்போன்றே வஹாபிசம் என்ற முஸ்லீம் பழமைவாதமும் காஷ்மீர் சுபி முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக மதப் போராளிகளாக மாற்றியது.

இவ்விரண்டு மதப்போக்குகளுக்கும் பேர்  வேறாக இருக்கின்றதே ஒழிய, மத வெறியையும் மதத் துவேஷத்தையும் விதைத்து வளர்த்தெடுப் பதில் ஒன்றாகவே உள்ளனர்!

இதனால் பலிகடாவானது ‘காஷ்மீரியத்’ என்ற தனிச் சிறப்பு வாய்ந்த கலாசாரப் பாரம்பரியம். ஒவ்வொரு பண்டிட் வீட்டு திருமணத்திலும் தவறாமல் இடம்பெற்ற காஷ்மீர் முஸ்லீம் நாட்டுப் புற இசைக்கச்சேரிகளும், விருந்தும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லீம் மக்களின் ஆலோசகர்களாக பண்டிட்கள் திகழ்ந்த காலம் மலையேறிவிட்டது!

தாங்கள் துண்டாடப்படுவதை அவர்கள் உண ரக் கூடாது. ,அவர்களுக்குள் மதவெறி வளர வேண்டும் என்பதே காஷ்மீர் பைல்சின் நோக்க மாகும்! இதை வளர்த்தெடுக்க திட்டமிட்டு பணியாற்றும் மதவெறியாளர்களுக்கு மோடியின் பாராட்டுகள் குவிவதில் வியப்பில்லாமல் இல்லை.

 காஷ்மீர் பண்டிட்களிடம் இருக்கும் கடந்த கால நினைவுகளும், மனதில் ஆழப்புதைந்துள்ள வாஞ்சை நிறைந்த எண்ணங்களும் முஸ்லீம் மக்க ளுக்கும் உரியவை அல்லவா? இவையெல்லாம் கலந்த பெருங்கலாச்சார மாண்பே காஷ்மீரியத் எனப்படும் உணர்வு! அவ்வுணர்வை அரசியல் பிரிவு 370அய் சிதைத்தது போன்று சிதைத்து விடலாம் என்று ‘காஷ்மீர் பைல்ஸ் ‘ படம் மனப்பால் குடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் அர சியல் பிரிவான பாஜகவும் இவர்களின் நோக்கமே 2024 ஆம் ஆண்டு இந்துக்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யவேண்டும். அதற்கு இந்து முஸ்லீம் விரோதப் போக்கை வளர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசும் கட்சியினை இந்து விரோதக் கட்சியாக காட்ட வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்...

நாடு முழுதும் உள்ள பாஜகவினர் இத்திரைப் படத்தைக் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு போட்டியாக 'பர்சானியா' என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

2002 குஜராத் கலவரத்தில் காணாமல் போன மகனை தேடும் ஒரு பார்சி குடும்பத்தின் பய ணத்தை பேசுகிறது பர்சானியா திரைப்படம். நசிருதீன் ஷா, சரிகா ஆகியோரின் நடிப்பில் ராகுல் தோலாகியாவின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று கோவாவில் நடந்த 36ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் திரை யிடப்பட்டது

பஜ்ரங் தளத்தின் மிரட்டலை அடுத்து பர்சானியா திரைப்படத்தை திரையிட குஜராத் திரையரங்க உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். குஜராத் அரசும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங் களும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதை தடுக்கும் விதமாக மறைமுகமாக மிரட்டல் விடுத்தன. 

 இந்த நிலையில் போலியான தகவல்களைக் கொண்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை அனைவரும் பார்க்கவேண்டும் என்று மோடியே ஆதரிப்பதும்,  உண்மை நிகழ்வைக் கொண்ட 'பர்சானியா' திரைப்படத்தை திரையிட இன்றுவரை இந்துத்துவ ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பதும் வேதனையே!


No comments:

Post a Comment