புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றித் தெளிவாக பேச வேண்டுமானால் பகுத்தறிவு கூட்டத்தில் தான் பேச முடியும். அப்படிக்கில்லாது கடவுள், மதம், மூடநம்பிக்கைக்கு உட்பட்ட இடங்களில் பேசுவதென்றால் வழ வழா, கொழ கொழா என்று பேச வேண்டிவரும். பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவியும் கடைசி கவிஞரும்
ஆவார். அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் தோன்றவே இல்லை. தோன்றிய வர்களும், தோன்றுகிறவர்களும்
பழமை கருத்துகளைத் தான் கொண்டவர் களாகும்.
இன்றைக்கு நம் நாட்டில் இவரோடு குறிப்பிடத்தக்க வேறு புலவர்கள் இருந்தார்களென்றோ, இருக்கின்றார்கள் என்றோ சொல்லுவதற்கில்லை.
நமது தமிழ் புலவர்கள் வள்ளுவரை கூறுவார்கள்; அடுத்து ஜாதி செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் கொண்ட பாரதியாரைக் கூறுவார்கள். இவர்கள் எல்லாம் பழமை கருத்துக்களைக் கொண்டவர்கள்; பெரிதும் மக்கள் இன்று ஒத்துக் கொள்ளத் தக்கவோ, பின்பற்றத்தக்கவோ கூடிய கருத்துக்களை கூறவில்லை. பாரதிதாசன் அப்படி அல்லவே, அவர் புதுமை கருத்துக்களையும், புரட்சிக் கருத்துக்களையும், மக்கள் சமுதாயத்திற்கு தேவையான சமதர்மக் கருத்துக்களையும் துணிந்து வெளியிட்டுள்ளார். அவருக்கு அனுசரணையாக சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் இருந்தன.
சுருங்கச் சொன்னால் அவர் போல் தீவிரமான கருத்துக்களை அவருக்கு முன்பும் பின்பும் எடுத்துச் சொன்னவர்கள் இன்னார் என்று எடுத்துக்காட்ட ஆளே இல்லையே.
அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை , மூடநம்பிக்கைகள் இவற்றைக் கண்டித்து நன்றாக பாடியுள்ளார்.
பாரதியாருக்கோ, வள்ளுவருக்கோ கொடுக்கின்ற மரியாதை நமது பாரதிதாசனுக்கு நம் மக்கள் கொடுக்கத் தவறிவிட்டார்கள். காரணம் பாரதிதாசன் புதுமைக் கவிஞர் புரட்சிகரமான கருத்துகளை கொண்டவர் என்பதால் தான்.
மற்ற கவிஞர்கள் பழமை விரும்பிகள். ஆனதினால் பழைமையில் பற்றுக் கொண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள், போற்றுகின்றார்கள். நமது முட்டாள் தனத்துக்கு உதாரணம் வள்ளுவரை பாராட்டுவது ஒன்றே போதுமே.
வள்ளுவர் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்றும், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் பாடியுள்ளார். எனவே அவர் பகுத்தறிவுவாதி; யார் எதை சொன்னாலும் அறிவு கொண்டு ஆராய்ந்து உணர வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார் என்று கூறுவார்கள்.
தோழர்களே! வள்ளுவர் இப்படி கூறி இருந்தாலும் அது அவர் கொள்கை அல்ல. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்; அவ்வளவுதான் மற்றபடி, பழைமை விரும்பிகள் இவரை இவர்களை எல்லாம் போற்றுகின்றார்கள்.
பாரதிதாசன் எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் பகுத் தறிவுக்குப் புறம்பான கருத்துக்களை துணிந்து கூறிய பெரும் புலவர் ஆவார். இன்றைக்கு பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச்சொல்ல தக்க சாதனமாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன.
நமது மக்கள் இப்படிப்பட்டவர்களுக்கு பாராட்டும் பெருமையும் அளிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது வருந்தத்தக்கதாகும். காரணம் - அவர் பகுத்தறிவு வாதியான படியால் அவருடைய பணிக்கு கிடைக்கவேண்டிய மதிப்பு கிடைக்கவில்லை.
பாரதிதாசனைப் போன்று புதிய கருத்துக்களை எடுத்துச் சொல்லி பரப்ப ஆளே இல்லையே.
பாரதிதாசன் போல் நமது நாட்டில் புரட்சி புலவர்கள் தோன்றியிருப்பார்களேயானால், நமக்கு 2000, மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் இழித்தன்மை இருந்து வந்திருக்குமா?
(சிவகங்கை மன்னர் ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் 8.31973இல் சொற்பொழிவு)
No comments:
Post a Comment