சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் டி.கே.இந்திராணி அவர்களால் எழுதப்பட்ட ”செவிலியர்களுக்கான சமூகவியல் பாட நூலில்” காணப்படும் ஒரு பகுதி அதிர்ச்சியை யூட்டுகிறது.
“இந்தியாவில் உள்ள சமூகம் மற்றும் சமூக நிறுவனங்கள் மற்றும் உடல்நலம், நோய் மற்றும் நர்சிங் ஆகியவற்றுடனான அதன் உறவு தொடர்பான சமூகவியல் கருத்துகளை அறிமுகப்படுத்த இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவிலியர் பணியில் சமூகவியலின் முக்கியத்துவத்தைக் கூறுவதே புத்தகத்தின் நோக்கம் எனவும், இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்ட வரைமுறைப்படி எழுதப் பட்டது” என்று இந்நூல் குறித்து கூறப்பட்டுள்ளது.
நூலின் பக்கம் 122, பகுதி 6இல் காணப்படும் பகுதி இதோ:
1. பெண் கொண்டுவரும் வரதட்சணை, மணமக்கள் புதிய வாழ்க்கையைத் துவங்க உதவுகிறது. வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வரதட்சணையாக பெறுவதால் நன்மையே!
2. பார்ப்பதற்கு அழகு இல்லாத பெண்களுக்கு வரதட்சணை தருவதன் மூலம் திருமணம் நடைபெறுகிறது.
3. மகனுக்கு வரதட்சணை பெற்று, மகள் திருமணத்தின்போது திரும்ப அளித்திட வரதட்சணை பேருதவியாக உள்ளது.
இத்தகைய பிற்போக்கு, பெண்ணடிமைத் தனத்தை ஊக்கு விக்கும் கருத்துக்களை தாங்கிய நூல்தான் செவிலியர்களுக்குப் பாட நூலாக உள்ளது.
பாடநூல் என்று வரும்போது - அதைப் பற்றி மேற்பார்வையிடவோ, பரிசீலிக்கவோ அமைப்பு ரீதியான ஏற்பாடு ஏதும் கிடையாதா?
எதை வேண்டுமானாலும் எழுதிப் பாடத் திட்டத்தில் திணித்து விடலாமா?
பெண் கொண்டு வரும் வரதட்சணை மூலம் தான் அந்தக் குடும்பம் செழிக்குமா? இப்பொழுதெல்லாம் ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் பொருளீட்டுவதுதான் வாழ்க்கை முறையாக இருந்து வருகிறது.
ஆண்களைப் போலவே, பெண்களும் படித்து வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பது என்பதுதான் நடைமுறை.
அதையும்விட திருமணமாகும் பெண் வீட்டிலிருந்த ‘வரதட் சணை’ என்னும் பெயரால் நகைகள், பொருள்கள், பணம், கார் இத்தியாதி இத்தியாதி பொருள்கள் கொண்டு வரவேண்டுமா?
‘அய்ந்தாறு பெண்கள் பெற்றால் அரசனும் ஆண்டியடா!’ என்பது இதிலிருந்து தான் கிளம்பியதா?
இதில் முரண்பாடு பச்சையாகவே தெரிகிறது. வரதட்சணை கொடுப்பதிலும் அழகுள்ள பெண், அழகில்லாத பெண் என்ற இரு பிரிவு இருக்கிறது போலும்!
பார்ப்பதற்கு அழகு இல்லாத பெண்களுக்கு வரசதட்ணை தருவதன் மூலம் திருமணம் நடைபெறுகிறதாம்.
அப்படியானால் பார்ப்பதற்கு அழகுள்ள பெண்ணாக இருந்தால் வரதட்சணை கொடுக்கத் தேவையில்லையா?
மூன்றாவதாக சொல்லப்படும் காரணம். கொழுத்த நகைச் சுவைக்கும், எரிச்சலுக்கும் நம்மை ஆளாக்குகிறது.
மகனுக்கு வரதட்சணை பெற்று மகள் திருமணத்தின்போது திரும்ப அளித்திட வரதட்சணை பேருதவியாக இருக்கிறதாம்.
ஒரு வீட்டில் மகனே இல்லாமல், நாலைந்து பெண்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னாவது? இது என்ன பண்டமாற்று முறையா?
“மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறா னேயொழிய, தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை” என்றார் தந்தை பெரியார்.
“ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுதி, திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்த மாட்டான்” என்பதும் தந்தை பெரியாரின் கருத்தாகும். (‘விடுதலை’, 24.6.1940)
‘எந்தக் காலத்திலோ பகுத்தறிவு என்றால் என்ன என்று நினைத்துப் பார்க்க முடியாத காலத்தில் இருந்த சிந்தனையற்ற இருட்டுத் தன்மை இந்த 2022லும் தலைதூக்குகிறது என்றால், வெட்கக் கேடு அல்லவா! அதுவும் செவிலியருக்கான பாட நூலை எழுதும் அளவுக்குப் படித்த ஒரு பெண் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? பெண்ணே பெண்ணுக்கு எதிரியா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும், முற்போக்குத் தன்மைக்கும் எந்தவித ஒட்டு உறவும் இல்லை என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது ஒரு வகையான இந்து மத ரீதியான சிந்தனையாகும். ஆர். எஸ்.எஸின் அகில இந்திய தலைவராக இருக்கக் கூடிய மோகன் பாகவத்தும் இதை ஒட்டித்தானே கருத்துக்களைக் கூறுகிறார்.
“கணவனைவிட மனைவி அதிகம் படித்து, அதிகம் சம்பாதித்தால் கணவனை மதிக்க மாட்டாள் - அத்தகையவர்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா, பெண்களைப் பார்த்து ‘GO HOME’ - வீட்டு வேலையைப் பாருங்கள் என்று சொல்லவில்லையா?
இந்து மத சாஸ்திர நூல்கள் எல்லாம் பெண்களை இழிவாகவும், மட்டமாகவும், தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டு மென்றால், ஓர் ஆணுக்கு சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டுக்கு வேலைக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்ற பரிதாப நிலைதானே.
இந்த 21ஆம் நுற்றாண்டிலும் மனுதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழும் கூட்டம் - (அதுவும் படித்த) இருக்கத்தானே செய்கிறது.
தந்தை பெரியார் சொல்லுவதுபோல ஆணும், பெண்ணும் சில அங்கங்களில் வேறுபாடு உடையவர்களாக இருக்கலாம் - உரிமை என்று வரும்போது பெண்ணும் ஆணும் சரி நிகர் சமமே! - இது கல்லின் மேல் பொறிக்கப்பட்ட எழுத்தாகும்.
No comments:
Post a Comment