இலங்கையும் இந்தியாவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

இலங்கையும் இந்தியாவும்

வெளிநாட்டுப் பணம் கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் வாங்குவதற்காக மக்கள், விடிவதற்கு முன்பாகவே எரிபொருள் நிலையத்துக்குச் சென்று காத்திருக்கின்றனர். அதிகாலை 3 மணி முதல் மறுநாள் காலை 9 மணிவரை காத்திருந்தே எரிபொருள் வாங்க முடிவதாகக் கூறப்படுகிறது.

 எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல குடும்பங்களிடம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கும் ஆற்றல் குறைந்துள்ளது. உணவு விடுதிகள் மூடப்பட்டுவருகின்றன. மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அறுவைச் சிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன.

தமிழ் இன அழிப்பு என்பதுதான் சிங்களப் பேரினவாதத்தின் முழு வீச்சான கொள்கையாக இருந்தமையால், இருக்கிற படியால், பொருளாதாரத்தில் கோட்டை விட்டு விட்டது. சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவை மிரட்டியது.

இப்பொழுது இந்தியாவுடன் குலவுகிறது - இந்தியாவிடம் நிதி உதவிபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத் திலேயே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக் குகிறது. கைது செய்கிறது. சிறையில் சித்திரவதை செய்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமரைச் சந்தித்து, தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை, கச்சத் தீவு மீட்பு பற்றியெல்லாம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இந்த நேரத்திலாவது இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டாமா? மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடிதான்! விலைவாசி 13%-க்கும் மேல் உயர்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. அதாவது பணத்தின் மதிப்பு குறைந்து மக்களால் பொருட்களை வாங்க முடியாமல் போகும் நிலை விரைவில் வரும். பெட்ரோல், டீசல் விலை. நாளும் உயர்கிறது. கடந்த ஆண்டு நாம் 78 ரூபாய்க்கு வாங்கிய ஒரு லிட்டர் பெட்ரோலை இன்று ரூ.108க்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 சமையல் எரிவாயு விலை ரூ.700-இல் இருந்து ரூ.1000-க்கு அதிகரித்துள்ளது. விலைவாசி ஓராண்டில் 13% அதிகரித்துள் ளது.  பணவீக்கம் அதிகரிக்கும் போது பணத்தின் மதிப்பு நிச்சயமாகக் குறையும்.

இந்த ஆபத்தில் இருந்து மீள  ஒன்றிய அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு இதில் மிகவும் மெத்தனமாக இருக்கிறது.

பாசிசம் இப்போது பதவி வெறி உச்சத்தில் இருக்கிறது, நடந்து முடிந்த 5 மாநிலத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்மையால் கிடைத்த வெற்றியைத் தங்களின் பாசிச நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி  என்று தவறாக கணக்குப் போட்டுக் கொண்டு மேலும் மேலும் தங்களது மதவாத நடவடிக்கைகளால் தங்களது துணை அமைப்புகளின் மூலம் சிறுபான்மையினரை மிரட்டி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் சாமியார் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு அங்கு பா...விற்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வின் ஆங்கில வினாத்தாளை சில அரசு அதிகாரிகள் பெரும் தொகையைப் பெற்று சில முகவர்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் அதனை சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.   இந்த மோசடியை சான்றுகளோடு வெளியிட்ட 'அமர் உஜாலா' நாளிதழின் பலியா மாவட்ட செய்தியாளர் கைது செய்யப் பட்டார். அவர்மீது கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பாய்ந்துள்ளது.

இதன் பொருள் என்ன? அரசை எதிர்த்தால் இனி பிணை இல்லாத சிறை என்ற சர்வாதிகாரப் போக்கு  என்ற அச் சுறுத்தல்தான்!  வட இந்தியாவில் இந்த நிலை என்றால் தென் இந்தியாவில் - கருநாடகாவில் - இஸ்லாமியப் பெண்களின் கல்வி மற்றும் இஸ்லாமியர்களின் வணிகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அண்டைநாடுகளின் பிரச்சினைகள் உலக நாடுகள் மற்றும் உலக வங்கி போன்றவை கடன் கொடுப்பதன் மூலமும் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமும் முடிவிற்கு வந்துவிடலாம்.  ஆனால் இந்தியாவில் உருவாகி இருக்கும் மதவாத பிளவு, அதுவும் ஒன்றிய அரசே மறைமுகமாக ஆதரித்து வரும் இந்துத்துவ வன்முறையால் இந்தியாவில் அமைதியின்மை உருவாகி வாழ்வியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் மற்ற நாடுகள் மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஒருக்கால் முஸ்லிம் நாடுகள் கண்டித்தால்தான் உண்டு. வேறு என்ன செய்ய முடியும்?  இவர்களை ஆட்சியில் இருந்து விரட்டாதவரை இந்திய ஒன்றியத்திற்கு விடிவு என்பதே இல்லை!

No comments:

Post a Comment