தான் முதலமைச்சராக ஆகாமல் அடுத்தவரை முதலமைச்சராக்கிய எடுத்துக்காட்டான மாமனிதர்!
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, ஏப்.21 நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், அதன் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராயர், தான் முதலமைச்சராக ஆகாமல் அடுத்தவரை முதல மைச்சராக்கிய எடுத்துக்காட்டான மாமனிதர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளான இன்று (27.4.2022) அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவ்விவரம் வருமாறு:
திராவிட இயக்கத்தின்
முன்னணி தலைவர்
டாக்டர் நாயர் அவர்களுக்கும், டாக்டர் நடேசனார் அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் நெருங்கிய நண்பரும், திராவிட இயக்கத்தைத் தோற்று வித்த தலைவர்களில் முன்னணி தலைவராக, முக்கிய தலைவராக இருந்தவருமான வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் அவர்களுடைய பிறந்த நாளான இன்றைக்கு ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த இயக்கம் திராவிட இயக்கம்தான் பெண் களுக்கு - இந்தியாவிலே மட்டுமல்ல - உலக அளவிலும்கூட முதன்முதலில் வாக்குரிமை தந்து வரலாற்றைப் படைத்த ஒரு மாபெரும் எழுச்சி இயக்கமாகும்.
திராவிட இயக்கத் தலைவர்கள் கண்ட கனவு நினைவாகிறது!
அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்றைய 'திராவிட மாடல்' ஆட்சியில், 50 விழுக்காடு பெண் களுக்கு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்து, சென்னை நகரத்திற்கு மேயராக ஒரு பெண் மேயர் சிறப்பாக ஆட்சி புரிகிறார் என்ற நிலையில், சர் பிட்டி தியாகராயரும், தந்தை பெரியாரும், அதேபோல, பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் கண்ட கனவுகள் இன்றைக்கு நினைவாகியிருக்கின்றன.
இதற்கு முன்பும் பெண்கள் மேயர் பதவியில் இருந்திருக்கின்றார்கள் என்று சொன்னாலும், அதற்கும், இன் றைக்கும் இருக்கின்ற வேறுபாடு என்னவென்று சொன்னால், ஒரே ஒரு ஆண்டுதான் இருப்பார்கள்; அடுத்த ஆண்டு அவர்கள் போய்விடுவார்கள். இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர், அடுத்த தேர்தல் வரையில் அய்ந்தாண்டுகள் வரை இருப்பார் என்று கால நிர்ணயம் செய்து, சிறப்பான அளவிற்கு இன்றைய ஆட்சி இருக்கிறது.
அதைவிட, இவருடைய காலத்தில் சிறப்பாக சென்னை மாநகரம் வளர்ச்சி அடைகிறது. எல்லா இடங்களும் சிங்கார சென்னையாக மாற்றிக் கொண் டிருப்பதற்கு அடித்தளமிட்டவர்தான் இங்கே சிலையாக நின்று கொண்டிருப்பவர்.
அதுமட்டுமல்ல, ஆட்சிக் கட்டிலில் இருந்த- அண்ணா அவர்கள் சொன்னார்கள் - பதவி என்பது மேல்துண்டு; கொள்கை என்பது வேட்டி என்று சொன்னார்.
சர் பிட்டி தியாகராயர் அவர்களிடம், நீங்கள் முதல மைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று ஆளுநர் சொன்னபொழுது, அவர் மறுத்து, அடுத்தவரை முதல மைச்சராக ஆக்கிவிட்டு, அவர் கட்சித் தலைவராகவே இருந்து பெருமைப்படைத்த அவர் போன்ற ஒருவரைப் பார்க்க முடியாது.
நூறாண்டு பழைமையான - வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பப்ளிக் ஹால்
அப்படிப்பட்டவருடைய காலத்தில் உருவாக்கப் பட்டதுதான் விக்டோரியா பப்ளிக் ஹால். அது நம்முடைய மா.சுப்பிரமணியம் அவர்கள் மேயராக இருந்த காலத்திலும், அதற்கு முன்பு நம்முடைய தளபதி அவர்கள் மேயராக இருந்த காலத்திலும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு, இப்பொழுது நூறாண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கட்டடங்களில் ஒன்றாக இருக்கக் கூடியது, தமிழ்நாட்டில் வரலாறு படைத்த ஒன்று.
இந்த ஆட்சிக்காலத்தில் அதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆக்கும் திட்டம் என்பது வரவேற்கவேண்டிய ஒரு திட்டமாகும்.
விரைவில் அந்தத் திட்டத்தை முடிக்கவேண்டும். வரலாற்று ஆவணங்கள்போல, வரலாற்று சின்னங் களைப் பாதுகாக்கக்கூடிய வகையில், இது அரசியல் வரலாற்றுச் சின்னமாக இருக்கிறது.
அந்த வகையில், முதல் முறையாக மாணவர் களுக்குப் பகல் உணவுத் திட்டத்தை அளித்த பெருமை தியாகராயர் அவர்களையே சாரும். அதுதான் பிறகு விரிந்து, தமிழ்நாடு முழுக்க என்று, இன்றைக்கு இந்தியா முழுவதும் பாராட்டப்படக் கூடிய அளவில் இருக்கிறது. அதற்கு வித்தூன்றிய பெருமான்தான் சர் பிட்டி தியாகராயர் அவர்கள்.
எனவே, அப்படிப்பட்டவருடைய பிறந்த நாளில், நமது 'திராவிட மாடல்' ஆட்சியினுடைய முழுப் பெருமை வாய்ந்த திட்டத்தை ஒளி பரப்பட்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் மாநில உரிமைகளை
தாரை வார்த்துவிட்டார்கள்!
செய்தியாளர்: தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டாக எதிர்த்திருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: பா.ஜ.க. எதிர்ப்பது என்பது, அவர்களுடைய கொள்கை அடிப்படையில் அது சரியானதாகக்கூட இருக்கலாம்; நியாயப்படுத்தப்படா விட்டாலும்.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது, அவர்களுடைய அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டார்கள், ஆளுநருக்கு.
ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்காலம் வரையில், துணைவேந்தர்களை முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுதான் நியமித்தது. அது மரபாகவும் இருந்தது. அதில் ஆளுநர்கள் தலையிடமாட்டார்கள். அவர்கள் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்குவார்கள்; துணைவேந்தர்களை நியமிப்பதில் தலையிடமாட்டார்கள்.
மாநில உரிமைகளை மற்றவர்களுக்கு அடகு வைத்த அவலங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்த பிறகு, பன்னீர்செல்வம் ஆட்சி வந்த பிறகு நடந்தன. அதற்குக் காரணம், மடியில் கனம் - வழியில் பயம். அதன் காரணமாக, அவர்கள் மாநில உரிமைகளை அங்கே கொண்டு போய் அடகு வைத்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோ ருடைய கைகளை சேர்த்து வைத்து அரசியல் நடத்தினார் இங்கே ஆளுநராக இருந்தவர்.
அதற்கு விலையாக இவர்கள் மாநில உரிமைகளைப் பறி கொடுத்தார்கள். இன்னமும் அந்த அடமானத்தை மீட்கவில்லை என்பதையே அவர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் எழுச்சிக்கு வித்தூன்றுகிறார்கள்
செய்தியாளர்: துணைவேந்தர்கள் மாநாட்டில், ஆளுநர் மட்டுமில்லாமல், தனிநபர்கள் பங்கேற்பும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறதே?
தமிழர் தலைவர்: ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கேள்வி மக்கள் மத்தியில் வெகுவேகமாக எழுந்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரு டைய ஆட்சி நடக்கிறதா? அல்லது டில்லியிலிருந்து திணிக்கப்பட்ட ஆளுநரால் - அறிவிக்கப்படாத ஓர் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதா? என்பதுதான் அந்தக் கேள்வியாகும்.
இதனுடைய எதிரொலி தமிழ்நாட்டில் மிக வேக மாகப் பரவும். அதைத்தான் 21 நாள்கள் நடந்த பிரச்சாரப் பெரும் பயணக் கூட்டங்களிலும் விளக்கினோம்.
ஆகவேதான், அவர்கள் தன்னிச்சைபோல, அரசமைப்புச் சட்டத்தை துச்சமென கருதுகிறார்கள். மக்கள் அதற்குரிய பாடத்தைக் கற்பிப்பார்கள். தவறான முறையில் அல்ல - அரசமைப்புச் சட்ட ரீதியாகவே அதனைத் தெளிவாக செய்வார்கள்.
யார் யார் எப்படி நடந்தாலும், ஜனநாயகத்தை இன்றைய முதலமைச்சர் அவர்களுடைய தலைமை யில் காப்பதற்கு - கட்சி வேறுபாடில்லாமல் மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இறுதி அதிகாரம் மக்களுக்குத்தான் - மக்கள் எழுச்சிக்கு இவர்கள் வித்தூன்றுகிறார்கள்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
No comments:
Post a Comment