நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
சென்னை, ஏப். 4 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோ தமாக நடந்துகொள்ளும் தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திருத்தவேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும். மக்களை ஆயத்தப்படுத்தவும் - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே நாகர்கோவில்முதல் சென்னைவரை பிரச்சாரப் பயணம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று (3.4.2022) நாகர்கோவிலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
நீட் தேர்விற்கான மசோதாவை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பியவுடன், ஒரு வார காலத்திற்குள்ளாகவே விவாதித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, சிறப்பு சட்டப்பேரவைக் கூட் டத்தைக் கூட்டி, இரண்டாம் முறை நீட் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மறுபடியும் ஆளுந ருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டப்படி நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை
உடனடியாக அந்த மசோதாவை குடியரசுத் தலை வருக்கு அனுப்பவேண்டிய ஆளுநர், தேவையில் லாமல் காலதாமதம் செய்கிறார். அரசமைப்புச் சட்டப் படி அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், வேண்டுமென்றே ஆளுநர் காலதாமதம் செய்வது என்பது, நம்முடைய பிள்ளைகளுடைய வாழ்வு பலி பீடத்தில் இருக்கக்கூடிய அளவிற்கு, 20 பிள்ளைகளுக்குமேல் பலி பீடத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள் நீட் தேர்வினால்.
ஏழை, எளிய பிள்ளைகளுடைய மருத்துவக் கனவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை என்பது, மேலும் மேலும் சிக்கலாகி, பிளஸ் டூ மதிப்பெண்களை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்வதும், மாநிலத்தில் உள்ள பள்ளிகளையெல்லாம் வெறும் கோச்சிங் சென்டர்களாக மாற்றிவிடுவதும்தானா என்ற கேள்விக்கு இடந்தரக்கூடிய அளவில் இருக்கிறது.
எனவேதான், மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு எதிராகவும், நீட் தேர்வை ஒழிப்பதற்கும் அல்லது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரியும்தான் மாநிலம் தழுவிய எங்களுடைய பிரச்சாரம் இன்று நாகர்கோவிலில் தொடங்கி, சென்னையில் வருகிற 25 ஆம் தேதி நிறைவடைகிறது.
பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்.
ஆகவே, இனிமேலும் ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது. அப்படி செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் நடந்துகொள்கிறார் என்பதற்கு அடையாளமாகும்.
தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும்; மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த சுற்றுப்பயணம்.
ஆளுநரை ஒன்றிய அரசு திருத்தவேண்டும் அல்லது திரும்பப் பெறவேண்டும்
செய்தியாளர்: ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று சொல்கிறீர்களா?
தமிழர் தலைவர்: ஆமாம்! ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின்மேல் எடுத்த உறுதிமொழிக்கு விரோதமாக நடந்துகொள்கிறார். எனவே, ஆளுநரை ஒன்றிய அரசு திருத்தவேண்டும் அல்லது திரும்பப் பெறவேண்டும்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment