‘நீட்' எதிர்ப்புக்காக ஒரு நெடும்பயணம் அவசியமா? அன்றாடம் தேவைப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகளின் விலையே உச்சாணிக்கொம்பில் நின்று மக்களை அச்சமூட்டுகிற நிலையில் ‘நீட்' என்பது ஒரு சிறு தொகையினரின் பாதிப்பு தானே, அதற்காக இவ்வளவு தொடர்ச்சியான போராட்டங்கள் அவசியமானது தானா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. அதற்கான பதிலை அழுத்தமாகத் தருகிறார் அயராமல் களம் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர்!
"அடிபட்ட உடன் இரத்தம் வரும், அது பளிச்சென்று தெரியும். பின் மருத்துவமனைக்குப் போவார்கள். ஆனால் புற்று நோய் வந்தால் மேலே தெரியுமா? அப்படி உடம்பிற்குள் என்ன பாதிப்பு இருக்கிறதென்று ஸ்கேன் செய்து பார்த்து முன்கூட்டியே அறிந்து காப்பாற்றும் வேலையைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது.
எதிர்வரும் போராட்டத்தை
தடுக்க வேண்டும்
மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள் ஒன்று கல்வி அது அறிவுக்கு. மற்றொன்று மருத்துவம் அது உடல்நலனுக்கு. அந்த இரண்டையுமே பெரும்பான்மை மக்களைப் பெற விடாமல் தடுக்கும் சூழ்ச்சி தான் இந்த நீட் தேர்வு- புதிய கல்விக்கொள்கை எல்லாம். ஒரு சிறிய தீப்பொறி தான் வளர்ந்து மிகப்பெரிய அளவிற்கு அழிப்பு வேலையைச் செய்யும். எனவே விழிப்போடு இருந்து எதிர்வரும் பேராபத்தை தடுக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்தப் பயணம். எப்போதும் மக்களை ஆயத்தப்படுத்துவது தான் பெரியாரின் போர் முறை. மாலை நேர பொதுக்கூட்டங்களில் மணிக்கணக்கில் அய்யா பேசினார். அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம். அதற்குத்தான் இந்தப் பயணம்" என்றார்.
2016இலிருந்து நாம் நீட்டுக்கு எதிராக போராடத் துவங்கிவிட்டோம். 2017இல் தமிழ் நாட்டின் நான்கு பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட இருசக்கர வாகனப் பேரணியின் எல்லா படைகளும் சென்றடைந்த இடம் விருத்தாசலம். அங்கு நிறைவு விழா. அங்குதான் ஆசிரியர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நீட் என்னும் மாணவச் சமுதாயத்தின் ஆட்கொல்லித் தேர்வை தொலைநோக்கோடு முன்பே கணித்து போராட்டக் களம் வகுத்த தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தும் இரண்டாவது மிகப் பெரும் பயணம் இது.
உரிமை மீட்புப் போராக
எந்த ஒன்றையும் ஒப்புக்காகவோ கண்துடைப்புக் காகவோ செய்யாமல் அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் என்று முழக்கமிடும் இயக்கம்தான் இந்த இயக்கம். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவ தற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட மாநாடுகள் - பதினாறு முறை போராட்டங்களை நடத்தியதும், பொருளாதார அடிப்படையிலான வருமான வரம்பை நீக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் அரசை வளைய வைத்ததுமான பல போராட்ட வரலாறுகளின் வரிசையில் தான் இப் பொழுது நாகர்கோயில் தொடங்கி சென்னை வரையிலான இந்த மாபெரும் பரப்புரைப் பயணத்தை உரிமை மீட்புப் போராக முன்னெடுத்திருக்கிறார் தமிழர் தலைவர்.
வெயிலின் கடுமையையும் பொருட்படுத்தாது முப்பது தோழர்களோடு தேசிய நெடுஞ்சாலைகள் அல்லாது வளையும் உள்கிராம சாலைகளிலும் பயணித்து ஒவ்வொரு நாளும் இரண்டு கூட்டங்கள் என இருபத்தொரு நாள்களும், ஒவ்வொரு கூட்டத்திலும் 40 நிமிடங்களுக்குக் குறையாமல் உரையாற்றியும், எண்ணற்ற முறை எழுந்து அமர்வதும், மேடைக்கு வருவோருக்கு சிறப்பு செய்வதும், புத்தகங்கள் வழங் குவதும், அடுத்த சில நொடிகளிலேயே அடுத்தடுத்த கூட்டங்களுக்கு விரைவதும், ஏறக்குறைய தொடர்ச்சி யாக ஆறு மணி நேரம் இளைப்பாறுதல் இல்லாமல் இவ்வாறே தொடர்வதும், இடையில் செய்தியாளர்களை சந்திப்பதும் செய்திகள் பார்ப்பதும், மறுநாள் கழகத் தோழர்களை சந்திப்பதும்...
அடேயப்பா! இவை எல்லாம் வரும் டிசம்பரில் தொண்ணூறு தொட இருக்கிற ஒரு தலைவர் நடத்துகிறார் என்றால் இதைவிட ஒரு மலைப்பு நம் வாழ்நாளில் நாம் காண்பதற்கில்லை. இவரைப் போல் இன்னொருவர் வரக் கூடுமோ என்ற பெரியாரின் கணிப்பு பொய்க்கவும் இல்லை.
இவ்வளவும் யாருக்காக? ஆசிரியர் வீட்டுப் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் படிப்பதற்காகவா? அல்லது திராவிடர் கழகத் தொண்டர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகவா இத்தனை பெரும் பாடும்? இன்னும் சொல்லப்போனால் இயக்கத் தோழர்கள் ஒன்றும் மிகப் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல. அப்படியிருக்கையில் மக்களிடமே உண்டியல் ஏந்தி ஏறக்குறைய பல லட்சத்திற்கும் மேல் செலவு செய்து, நேரத்திற்கு உண்ணாமல் உறங்காமல் தங்களை வருத்திக்கொண்டு தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்றது எதற்காக?
மருத்துவம் படித்து தான் பிறந்து வளர்ந்த சிற்றூரில் தன் தாய் தந்தைக்கும் தன் சுற்றத்தினருக்கும் பணியாற்றுவேன் என்ற கனவுகளில் மிதந்து அரசின் ஊக்கத்தொகை மூலம் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் வாய்ப்புப் பெற்று மிகக் கடுமையாக உழைத்து சிறந்த மதிப்பெண்கள் பெற்றும் தாங்கள் அறியாத சி.பி.எஸ்.சி பாடத்திட்ட கேள்விகளால் நடத்தப்படும் இந்த நீட்டின் கொடும் கரங்களில் சிக்கி வாய்ப்பை இழந்து வாடும் ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர் களுக்காகத் தான்! வருங்காலத் தலைமுறையின் வளத்திற்குத்தான்.
நம் மக்கள் எங்கே போவார்கள்?
தகுதித்தேர்வு என்ற ஒரு சூழ்ச்சி மூலம் ஆர் எஸ் எஸ்ஸின் மறைமுகமான கொள்கையை குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் பேராபத்தை தடுத்து நிறுத்தாமல் போனால் பணக்காரர்கள் மட்டுமே படிக்கவும் வெளிநாடுகளில் பயணம் செய்து பணியாற்றும் நிலை ஏற்பட்டால் நம் மக்கள் எங்கே போவார்கள்?
பள்ளிக்கல்வித்துறையே இனி கோச்சிங் சென்டர் என்றாகிவிட்டால் ஏழை எளியவர் ஏராளம் பணம் கொட்டிக் கொடுத்து எப்படிப் படிக்க முடியும்?
,"இந்தக் கேள்விகள் தான் வரும் - அதற்கு இந்த விடைகள் என்று மீண்டும் மீண்டும் அதையே படிக்கவைத்து ஒரு மாதம் இரு மாதத்தில் வளர்க்கும் பிராய்லர் கோழிகளைப் போல இந்த கோச்சிங் சென்டர்களில் மாணவர்கள் படிப்பது தான் தகுதி திறமையா" எனக் கேட்டார் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் அரியலூரில். அதற்கு என்ன பதில் சொல்ல முடியும் நம்மை எதிர்ப்பவர்களால்?
திராவிட இயக்கத்தின் கொடை
கல்விக்குக் கடவுள் உள்ள நாட்டில் நம் முன்னோர் யாருக்கும் படிப்பில்லை... ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் படித்தவர் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு. நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொடை யாகவும் தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர் போன்றவர்களாலும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட திராவிட ஆட்சிகளின் பலனாக இப்போது தான் நம் பிள்ளைகள் முதல் தலைமுறையாக படித்து எங்கெங்கு காணினும் கல்விப் பட்டங்கள் நிறைந்த இந்த சூழல் தான் திராவிட மாடல் என்பது. போராடிப் பெற்ற இந்த நிலை மனு தர்மத்திற்கு எதிரான சமதர்ம நிலை.
இதுதான் சமூக நீதி என்பது. பிறப்பால் உரிமைகள் மறுக்கப்படும் நிலையை வேரோடு வெட்டிச் சாய்ப்பது. அத்தகைய ஒரு பணிக்காகத் தான் பெரியாருக்கு பின்னால்பிறவி பேத ஒழிப்பையே தன் வாழ்நாள் பணியாக்கி தனி வாழ்வு என்ற ஒன்றையே துறந்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அதனால் தான் பரப்புரைப் பயண நிறைவு விழாவில் முதலமைச்சர் முழுதுணர்ந்து சொன்னார், ஆசிரியர் அவர்களை நான் திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாக பார்க்கிறேன் என்று!
‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' என்று ஒவ் வொரு மணித்துளியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஆதிக்கத்திற்கு எதிராக, சமத்துவத்தைக் கட்டி யெழுப்பும் பெரியாரின் கருஞ்சட்டை தளபதியாக மக்களுக்காகவே வாழும் வாழ்நாள் மனிதநேய போராளியை மிகச் சரியாகவே வாழ்த்திவிட்டு சென்றார் முதலமைச்சர். சிறந்த வெற்றிகளை தன் வாழ்நாளில் கண்டுவிட்டார் பெரியாரைப் போல தமிழர் தலைவரும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமத்துவ நாளாகி அனைவரும் உறுதிமொழி ஏற்கும் நாளான பேரின்பத்தையும் சுவைத்து விட்டார்.
அதைப்போல நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் இனி இல்லை என்ற மாபெரும் வெற்றியையும் அவர் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை!
ஏறத்தாழ 5000 கி.மீ. பயணம். சுட்டெரிக்கும் வெயிலில் மேடையேறி உரை, இப்படி 21 நாள்கள் முடித்து அடுத்த நாள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் கரோனா தொற்று தடுப்புக்கு மூன்றாம் முறையாக பூஸ்டர் டோஸ் எனப்படும் இன்ஜெக்ஷன் போட்டு முடித்த மறு வினாடி திடல் நோக்கி வந்து அன்றாடப் பணிகள்.
மறுநாள் புரட்சிக் கவிஞர் விழா. இதோ இன்று இந்தி எழுத்துகள் அழிப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள். ஓய்வு தற்கொலைக்குச் சமம் என்று கூறிய தலைவரின் வழித் தோன்றல் அல்லவா!
அவர்தம் தொண்டறப் பணியும் தான் ஓய்வதேது!
ஆம். ஓய்வேது நம் தலைவருக்கு!
No comments:
Post a Comment