புதியமருத்துவம் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

புதியமருத்துவம் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப். 7 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலை தூர கிராமங்களுக்கான புதிய மருத்துவசேவை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று

தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (9.4.2022) தொலைதூர கிராமங்களுக்கும், மருத்துவ சேவை அளிக்கும் வகையில் இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (6.4.2022) கேள்வி நேரத்தின் போது .தி.மு.. உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுந்து பேசினார்.

அப்போது மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் புதிய சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அப்போது உறுப்பினர் தொகுதிக்கு உட்பட்ட அவர் கூறும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய சாத்தியக்கூறு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் தொலைதூர கிராமங்களுக்கும், மருத்துவ சேவை அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த மருத்துவ சேவை மூலம் 389 வாகனங்களில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் பயணம் செய்வார்கள். அனைத்து ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு எனது தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை பகுதியான கூந்தங்குழியிலும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றை ஏற்படுத்த ஆவன செய்யுங்கள் என்றார்.

இந்தியாவில், 4ஆம்தேதி வரை

கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை

5.21 லட்சம் - ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஏப்.7 இந்தியாவில், ஏப்ரல் 4ஆம்தேதி வரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று ஒன்றிய அரசுதெரிவித்துள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்த கரோனா மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில்  ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  இந்தியா முழுவதும் 4ஆம்தேதி வரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு ஒன்றிய அரசுவிடுத்த அழைப்பை ஏற்று அறிக்கை அளித்த 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எங்கும் அத்தகைய மரணங்கள் பதிவானதாக தகவல் இல்லை என்று தெரிவித்தார்.

கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய, மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அடிப்படையில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படுவதாக கூறிய பாரதி, இழப்பீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பேருந்து

கட்டணம் உயர்வு இல்லை

அமைச்சர் சிவசங்கர் பதில்

சென்னை, ஏப்.7 தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:- சென்னையில் 2 ஆயிரம் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்படும். பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் அமைக்கப்படும். அதேபோல், பேருந்துகளில் பெண்களின் வசதிக்காக அவசரகால பட்டன்களும் நிறுவப்படும். சிசிடிவி, அவசரகால பட்டன்கள் ஆகியவை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று கூறினார்.

புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது

குறித்து ஆய்வு” - அமைச்சர் வி.செந்தில் பாலாஜி

சென்னை, ஏப்.7 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 சட்டப்பேரவையில் 6.4.2022 அன்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, 193 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்து 905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சியின் 5 கோட்டங்களில் புதை வட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

No comments:

Post a Comment