போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.29- போலி சான்றிதழ் அளித்து வேலைக்கு சேர்ந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு பயிற்சியாளராக கணேசன் என்பவர் சேர்ந்தார். அப்போது தான் தாழ்த்தப்பட்ட சமூக பிரிவை சேர்ந்தவர் என்று கூறி ஜாதி சான் றிதழ் கொடுத்து வயது வரம்பு சலுகையை பெற்றுள்ளார். 

பின்னர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலை யத்துக்கு பணி மாறுதல் பெற்று, தற்போது அறிவியல் உதவியாளராக பதவி உயர்வு பெற்றார்.

ஆனால், இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகம் என்று போலி ஜாதி சான்றி தழை கொடுத்து வேலைக்கு சேர்ந் துள்ளார் என்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஊழியர்கள் சங்கத் தினர் புகார் செய்தனர்.

பிரதமர் விருது

இதன்படி பதிவான வழக்கில் கணேசன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளியில் வந்தார். இந்த குற்றச்சாட்டுக்காக இவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.

இதையடுத்து, தன் மீது பதிவான குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கக்கோரி சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கணேசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மனுதாரர் கணேசன் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விட்டார். 5 பதவி உயர்வுகளை பெற்றுள்ளார். 

அதுமட்டுமல்ல பிரதமர் விருது, ஒன்றிய அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். 

எனவே, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறைரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், முகமது சபீக் ஆகியோர் பிறப்பித்துள்ள உத் தரவில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டு 7 ஆண்டுகள் கழித்து, 2020-ஆம் ஆண்டு இந்த மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 

இது அதிகாரிகளின் திறமையற்ற செயலை காட்டுகிறது. இதனால் தகுதி இல்லாதவர்கள் பல ஆண் டுகள் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கணேசன் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்துள்ளார் என்று தெளிவாகுகிறது.

கட்டாய ஓய்வு

அதேநேரம், அவர் குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். எனவே, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிடுகிறோம்.  அவருக்கு 40 சதவீதம் ஓய்வூதியம் மட்டுமே வழங்க  வேண்டும். வருங்கால வைப்பு நிதியை தவிர பிற ஓய்வூதிய பலன்களை அவருக்கு வழங்கக் கூடாது.  தவறு செய்யும் ஊழியர்கள் ஓய்வுப்பெற்ற பிறகும் துறைரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள் ளனர்.

No comments:

Post a Comment