வரலாற்றில் ஒரு வைரக் கல் முத்திரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 26, 2022

வரலாற்றில் ஒரு வைரக் கல் முத்திரை

'நீட்' எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு - என்ற மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் நாகர்கோயில் தொடங்கி சென்னை வரை 21 நாட்கள், 4,700 கி.மீட்டர் பயணம் - 38 மாவட்டங்கள், 8 வாகனங்கள் - இரு மாநிலங்கள் என்கிற அளவுக்குப் பிரச்சாரப் பெரும்பயணம் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில்  நடைபெற்றுள்ளது. 30 தோழர்கள் தலைவர்  ஆசிரியருடன் பயணித்தனர்.

இதற்காக இரு சிறு நூல்கள் வெளியிடப்பட்டன.

(1)  "வீரமணி வென்றிடுக வெற்றி மணி ஒலித்திடுக"

- முத்தமிழ் அறிஞர் கலைஞர்

(2) 'நீட்' தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு,  மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணம் ஏன்?

ஆகிய நூல்கள் சுற்றுப் பயணத்தில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டன.

மேலே கூறப்பட்ட மூன்று கொள்கைகளை விளக்கும் துண்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. உண்டியலில் மக்கள் பணத்தைக் கொட்டினர்.

திராவிடர் கழகத்தின் அணுகுமுறை குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி உவமை ஒன்றைக் குறிப்பிடுவார்.

கடிகாரத்தின் பெண்டுலம் இரண்டு பக்கமும் அசைந்தாடிக் காலத்தைக்  கணிப்பது போல - திராவிடர் கழகத்தின் அணுகுமுறை - ஒன்று பிரச்சாரம் இரண்டு போராட்டம் ஆகும்.

அந்த அடிப்படையிலேயேதான் மக்களைப் பக்குவப் படுத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படைப் பணியைச் செய்து வருகிறது. "திராவிட மாடல்" என்று இப்பொழுது ஓங்கி ஒலிக்கப்படுகின்ற தத்துவத்துக்கு - செயல்பாட்டுக்கு அடிப் படைப் பணிதான் திராவிடர் கழகத்தின் இந்தப் பணிகளாகும்.

சட்டமன்றங்களையும், நீதிமன்றங்களையும் நாடாமல் மக்கள் மன்றங்களை நாடி, மக்களிடத்தில் சென்று பிரச் சினைகளை விளக்கிக் கூறி, அவர்களை விழிப்புணர்ச்சி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால் சட்டங்கள் நொண்டி அடித்துக் கொண்டு பின்னால் ஓடிவரும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்காக  முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது எந்தஅடிப்படையில்?

மக்களைத் திரட்டி தந்தை பெரியார் தமிழ் மண்ணை சூடு மிக்க பூமியாக ஆக்கிய காரணத்தால்தானே! இதனைப் பிரதமர் நேரு அவர்கள் சென்னை மாநிலத்தில் நடைபெறும் மக்கள் போராட்டம் தான் முதல் சட்டத் திருத்தத்துக்குக் காரணம் என்று நாடாளுமன்றத்தில் கூறவில்லையா?

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாகத் தானே தமிழ் நாட்டில் இருமொழி மட்டுமே என்ற சட்டம் - அண்ணா முதல் அமைச்சராக இருந்து சாதித்தார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டதோடு, ஆட்சியை விட்டே அவரை ஓடும்படிச் செய்தது தந்தை பெரியார் தலைமையிலான மக்கள் போராட்டமும் - பிரச்சாரமும் தானே!

1938ஆகஸ்டு முதல் தேதி திருச்சியிலிருந்து தஞ்சை அய். குமாரசாமிபிள்ளை அவர்களின் தலைமையிலும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரி சாமி தளபதி யாகவும், 'நகர தூதன்' ஆசிரியர்  திருமலைசாமி அமைப் பாளராகவும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட "இந்தி எதிர்ப்பு தமிழர் பெரும் படை", நடைபயணத்தின் (234 ஊர்கள், 41 நாள்கள், 812 பொதுக் கூட்டங்கள் - 1938 ஆகஸ்ட் 1இல் தொடங்கி செப்டம்பர் 11இல் நிறைவுற்றது) வீச்சு எத்தகையது?

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டில் கொண்டு வரப்பட்ட பொருளாதார அடிப்படை ஒழிப்பு, மண்டல் குழுப் பரிந்துரைஅமலாக்கத்திற்கான பயணம் (42 மாநாடுகள் 16 போராட்டங்கள்) 69 விழுக்காடு பாதுகாப்பு - வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு எதிர்ப்பு - பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!" வட்டார மாநாடுகள், ஜாதி ஒழிப்புப் பிரச்சாரங்கள், மூடநம்பிக்கை ஒழிப்புப் பயணங்கள் என்று சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அந்த வரிசையில் இப்பொழுது நடந்துமுடிந்த பிரச்சாரப் பெரும் பயணமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

இதற்கான நிறைவு விழாவில் ஒரு முதல் அமைச்சரே கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பயணத்தைப் பாராட் டியதோடு, இந்த விழுமிய மூன்று இலட்சியங்களை நிறைவேற்றுவதில் இந்த ஆட்சி, உறுதியாக இருக்கும் என்ற பிரகடனம் எத்தகைய சிறப்பானது - வழி வழி வந்த திராவிடர் கழகத்தின் செயல்பணிக்கான அங்கீகாரமும் உத்தரவாதமும் ஆகும்.

வாழ்க பெரியார்!
வெல்க திராவிட மாடல்!!

No comments:

Post a Comment