இஸ்லாமியர்களை கொலை செய்யவேண்டும் என்று கூறியதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சாமியார் யதி நரசிங்கானந்த், இந்துக்கள் கைகளில் இஸ்லாமியர்களைக் கொல்லுவதற்கு தயாராக எப்போதும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று (3.4.2022) நடைபெற்ற மகாபஞ்சாயத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் சிறைக் காவலில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள யதி நரசிங்கானந்த்; இஸ்லாமியர் ஒருவர் பிரதமரானால் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்ய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தலைநகர் டில்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வெறுப்புப் பேச்சு தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அதில், யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, சுதர்சன் நியூஸின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சவுஹான்கே உள்ளிட்ட சில பேச்சாளர்கள் இரு சமூகத்தினரிடையே நல்லிணக்கக் குலைப்பு, பகைமை, வெறுப்பை ஏற்படுத்தும் வார்த் தைகளை பயன்படுத்தியதற்காக முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை, சேவ் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனரும், கடந்தாண்டு ஜந்தர் மந்தரில் (11.8.2021) நடைபெற்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான ப்ரீத் சிங் ஏற்பாடு செய்தார். அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட சிங் தற்போது பிணையில் உள்ளார்.
டிசம்பரில் ஹரித்துவாரில் நடைபெற்ற மூன்று நாள் ‘தரம் சன்சாத்’ நிகழ்ச்சியில் காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமைப் பூசாரி யதிநரசிங்கானந்த் வெறுப்பு பேச்சு பேசிய வழக்கில், தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். அவரது பிணை நிபந்தனையில், "சமூகங்களுக்கிடையில் வேறுபாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நிகழ்விலும் அல்லது கூட்டத்திலும் பங்கேற்கக் கூடாது" என குறிப்பிடப் பட்டுள்ளது.
டில்லியின் புராரி மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘இந்து மகாபஞ்சாயத்தில்’ சுமார் 500 பேர் கூடியிருந்தனர். (3.4.2022)
அங்கு பேசிய யதிநரசிங்கானந்த், "அடுத்த 20 ஆண்டுகளில் இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், 50 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாத்துக்குக் கட்டாயம் மதமாற்றம் செய்யப்படுவர். 40சதவீத ஹிந்துக்கள் கொல்லப்படுவர். இதுதான் ஹிந்துக்களின் எதிர்காலம். இது நடக்கக் கூடாது என்றால், ஹிந்துக்கள் அனைவரும் கையில் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்” என்றார்.
மகாபஞ்சாயத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை என்று டில்லி காவல்துறை கூறியபோதும், கூட்டம் தடுத்து நிறுத்தப்படவில்லை.
மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிகழ்ச்சியின் அனைத்துப் பதிவுகளையும் பார்த்து வருகிறோம். சில காட்சிப் பதிவுகள் டில்லி காவல்துறையால் எடுக்கப்பட்டன. சட்ட ஆலோசனைக்குப் பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய யதிநரசிங்கானந்த், "இந்துக்கள் அதிகக் குழந்தைகளைப் பெற வேண்டும். அவர்களுக்கு சண்டையிட கற்றுக்கொடுக்க வேண்டும். இந்துக்கள் இஸ்லாமியர்களைக் கொல்லக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தைப் பாருங்கள். காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தையும், மகள்களையும், சொத்துக்களையும் விட்டு வெளியேறியது போல், நீங்கள் தப்பித்து இந்தியப் பெருங்கடலில் மூழ்க வேண்டும். இது மட்டுமே உங்களிடம் இருக்கும் ஒரே விருப்பம்" என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுதர்சன் செய்தியின் ஆசிரியர் சுரேஷ் சவாங்கே பேசுகையில், "நான் சிவாஜியை என் மூதாதை யனாகக் கருதுகிறேன், நீ அவுரங்கசீப்பை உன்னுடையவனாகக் கருதுகிறாய்; நான் ஒரு ராமச்சந்திரனை வணங்குபவன், நீ பாபரின் மகன். எனக்குக் காசியில் ஷிவ் மந்திர் வேண்டும், நீங்கள் ஞானவாபி மசூதிக்காக போராடுகிறீர்கள்.. இதில் சமத்துவம் கிடைக்குமா? அனைவருக்கும் சம உரிமை அல்ல" என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜந்தர் மந்தர் வழக்கில் (11.8.2021) சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான பிங்கி சவுத்ரியும் மேடையில் இருந்தார். ஆனால், அவர் பேசவில்லை.
இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர், பார்வையாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை யாளர்கள் புகார்களின் அடிப்படையில் மானபங்கம் செய்தல், காயப்படுத்துதல் மற்றும் அபகரிப்பு முயற்சி ஆகிய குற்றச் சாட்டுகளின் கீழ் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 15 அன்று, ஹரித்துவார் காவல்துறையினர் நரசிங் கானந்தை மூன்று பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்தனர். பிப்ரவரி 8 அன்று, வெறுப்புப் பேச்சு வழக்கில் ஹரித்துவார் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.
நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது. மதச் சார்பின்மை பேசும் கட்சிகள் "அரசியல் பார்வையில்" அணுகாமல் ஒன்று சேர்ந்து இந்தப் பாசிச பா.ஜ.க. சங்பரிவார்களை வீழ்த்த முன் வராவிட்டால் வரலாறு மன்னிக்காது - எச்சரிக்கை!
No comments:
Post a Comment