வரியை உயர்த்துவது பற்றி மாநிலங்களிடம் கருத்து கேட்கவில்லை ஜி.எஸ்.டி. கவுன்சில் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

வரியை உயர்த்துவது பற்றி மாநிலங்களிடம் கருத்து கேட்கவில்லை ஜி.எஸ்.டி. கவுன்சில் மறுப்பு

புதுடில்லி, ஏப். 27- ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைத்து, வருவாயை அதிகரிப்பது பற்றி பரிந்துரைக்க மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த ஆண்டு அமைத்தது.

இதற்கிடையே, 143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மாநில அரசு களின் கருத்தை ஜி.எஸ்.டி. கவுன்சில் கேட்டு இருப்பதா கவும் கூறப்படுகிறது.

இந்த வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர் பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை உயர்த்து வது குறித்து மாநிலங்களிடம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம், ஏற்கெனவே நசுக்கப்பட்டுள்ள சாமானியர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரை பெரிதும் பாதிக்கும்.

143 பொருட்களில் 92 சதவீத பொருட்கள், 28 சதவீத வரி அடுக்குக்கு உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இதை அறிவுக்கு பொருத்தமான செயலாக நாங்கள் கருத வில்லை.

கரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில், 14.5 சதவீத பணவீக்க உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வஞ்சிக்கும் செயலாகவே இதை பார்க்கிறோம். மக்கள் மீது அக்கறை இல்லாத, போலித் தனமான இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கி றோம் என்று அவர் கூறினார்.

ஆனால், இந்த தகவலை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்தன. மாநிலங்களிடம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கருத்து கேட்கவில்லை என்று தெரிவித்தன.

மேலும், பாதிக்கு மேற்பட்ட பொருட்களை அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரிவிகிதமான 28 சதவீதத்துக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வரிவிகிதத்தை மாற்ற ஆராய அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டன.

No comments:

Post a Comment