இன்று (29.4.2022) கவிஞர் பிறந்தநாள் “கவிஞர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர், என்று சொன்னாலே அது பாரதிதாசனைத்தான் குறிப்பதாக இருக்கும். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் “மாடுகளும் வழக்கத்தால் செக்குச் சுற்றும்“ என்ற பாணியில் விழாவெடுப்பது, போற்றிப் புகழ்மாலை சூடுவது மாமூல் நடவடிக்கைளை மட்டும் செய்து விட்டால் போதுமா? அவரது கவிதைகளில் காணப்படும் வீரத்தின் விளையாட்டை காதலினின் தனிச்சுவையை - பகுத்தறிவின் பாய்ச்சலை - மொழிப் பற்றின் முதிர்ச்சியை - இனப்பற்றின் எழுச்சியை எல்லாம் பட்டியல் போட்டுக்காட்டி விட்டு, பட்டிமன்றம் நடத்தி விட்டு, கவியரங்கம் ஏற்றி விட்டு ஓய்ந்து விட்டால் போதுமா?
இந்த மாமூல் சடங்காச் சாரங்களே போதும் என்ற நிலை ஒரு வேளை கடந்த ஆண்டு வரை நிலவியிருந்ததாகக் கூறலாம். ஆனால் இந்த ஆண்டு எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. - மாற்றார்களால் மாற்றப்பட்டிருக்கிறது. மாறிவிட்ட இந்த புதிய சூழ்நிலையில் அந்த மறத்தமிழ்க் கவிஞருக்கு நாம் விழா எடுக்கும் போது நினைவுமலர் கோத்து புகழ் மாலை சூட முனையும்போது சவால்களைச் சந்திக்கவும் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டாமா? மாறிவிட்ட சூழ்நிலை. மாற்றிவிட்ட மாற்றார்கள் சவால்...’என்றெல்லாம் இனியும் புதிர் போட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை - பிரச்சினைக்குள் - நேரடியாகவே நுழைந்து விடுவோமே!
நாலரைக் கோடித் தமிழர்களின் இனவுணர்வுகளைத் தட்டி யெழுப்பிய அந்தச் கவிச்சிங்கத்தின் நினைவினைப் போற்றும் வகை யில் பாண்டிக் கடற்கரையில் எழுப்பப்பட்டிருக்கும் சிலையினை அகற்றிவிடச் சதி நடக்கிறதாம். சொல்லக் கொதிக்கவில்லையா நெஞ்சம்?
இப்படியொரு மூடத்தனமான காரியத்தை துஞ்சுகின்ற புலியை இடறி விடுகின்ற மூடத்தனமான வேலையை எதிரிகள் பயமில்லாமல் பேசுகிறார்கள் என்பதே நமக்கெல்லாம் விடப்பட்ட சவால் இது என்பது தெரியவில்லையா? இந்தச் சிலையை ஏன் அகற்ற வேண்டும் என்று காரணம் கூறப்படுகிறது. நேரு சிலை வைக்க அந்த இடம் வேண்டுமாம் எத்தகைய பெரிய குறும்பு இது! நேருவுக்குச் சிலைவைக்க புதுவை நகரில் புதிதாக ஓர் இடம் கூட இல்லையா? இது நீரோடையைக் கலக்கியதாக ஆட்டுத்தொட்டியை ஓநாய் மிரட்டிய அயோக்யத்தனமன்றி வேறு என்ன?
இப்படியொரு நிலை பாவேந்தரின் சிலைக்கு ஏற்பட காரணம் என்ன? இங்கேதான் நாம் சிந்திக்க வேண்டும். பாவேந்தர் செய்துவிட்ட “பாவம்“ தான் என்ன? சுப்பிரமணியர் துதியமுதையும் “என்கெங்கு காணினும் சக்தியடா” என்றும் தொடர்ந்து பாடிப் பண்டாரக்கோலம் போட்டு பக்தியை வளர்க்காதது “பாவம்“? கைராட்டையுடன் கதர்கொடியையும்புகழ்ந்து புதிய புராணம் பாடாதது ‘பாவம்‘ போலோ. பாரதமாதா கீ ஜே என்று முழங்காமல் தமிழ் முழக்கம் செய்தது ‘பாவம்‘ காந்தியை காங்கிரஸ் தலைவர்களை பாடிப்பாடி பாத பூஜை செய்யாமல் “அவர்தான் பெரியார்” என்று அடையாளம் கண்டு இன உணர்ச்சி காப்பியங்கள் பலவற்றை எழுச்சியுடன் பாடி உறங்கிக்கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி பகுத்தறிவூட்டி, தன்மானப் பயிர் வளர்க்க நாத்திக நாற்றங்காலில் நாற்றுப் பறித்து நட்டு விட்டது.
நிச்சயமாக பாவங்களில் எல்லாம் பெரிய ‘பாவம். தான். எனவே தான் அவரது சிலை இன எதிரிகளுக்கு கண்ணை உறுத்திக் கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு அநாகரிகமான முயற்சிக்கு டில்லி தம்பிரான்களின் கண்ணசைவு இல்லாமல் இருக்காது என்றுதான் அய்யுற வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கவிஞர் பெயரை நிலை நிறுத்த எத்தனையோ பணிகள் சிறப்பாக செய்யப்பட்டன.
அவரது பெயரால் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன; அவரது இல்லம் நினைவுச்சின்னமாக்கப்பட்டது. இந்தச் சிலையும் நிறுவப்பட்டது. ஒரு மாநில அரசு பொது மக்களால் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இத்தனை சிறப்புகளையும் ஒரு கவிஞருக்கு செய்தது என்றால் அது அந்த மாநிலத்தின் ஒருமனதான கருத்து என்பது தானே பொருள்.
அத்தகைய கருத்து முத்தாய்ப்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த ப்பட்ட கோரிக்கைதான் அஞ்சல் தலையில் புரட்சிக்கவிஞர் உருவம் பொறிக்கப்பட வேண்டும் என்பது டில்லி சம்மதித்ததா? இல்லையே? இது! குறும்பின் கரு- தொடக்கம் அல்லவா? அதன் முதிர்ச்சி விளைச்சல் தான் சிலை அகற்றும் சதித்திட்டம் என்பதை இன உணர்ச்சி படைத்த எந்த தமிழ் மகனும் புரிந்து கொள்வானே!
இந்தக் குள்ளநரி வேலையை எப்படி முறியடிப்பது? சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றாமல் இருப்பது மட்டும் தான் நமது இன்றைய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது. அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த தெரியாத அப்பாவிகளின் ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கலாம்.
மிஞ்சினால் கெஞ்சுவதும் கெஞ்சினால் மிஞ்சுவதும் குலதர்மமாகி விட்ட காஷ்மீரப் பார்ப்பனர்களும் அவரது கையாட்களும் நடத்தும் ஜனநாயக ஆட்சி அல்லவா இது. இல்லை என்றால் மக்களின் பிரதிநிதிகள் ஆண்டபோது அரசு சார்பிலேயே பாரதிதாசன் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடி வந்த வழக்கத்துக்கு ஜனாதிபதி ஆட்சியின்போது முற்றுப்புள்ளி வைத்து இருப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்?
தமிழ் சமுதாயம் புரட்சி கலைஞருக்கு எத்தனையோ வகையில் நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறது . எத்தனையோ வகையில் அவரது நினைவைப் போற்றி இருக்கிறது. என்றாலும் இன்னும் கூட மாற்றப்படுவதற்கு ஒரு முக்கியமான செயல்கள் பாக்கி இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவை வெறுமனே பாக்கி இருப்பவை மட்டுமல்ல எதிரிகளின் பதுங்கு குழிகளாகவும் இவை இருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். இந்த பெரிய காரியங்களை தமிழ்ச் சமுதாயத்தின் இன உணர்ச்சியின் பெயரால் மட்டுமே நிறைவேற்ற இயலும் என்பதால் இப்பணிகளை முடிக்க தமிழகத்தின் தகைசான்ற முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்பதே தமிழினத்தின் வேண்டுகோளாகும். “தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்“ என்று பாவேந்தர் எவ்வளவு ஆழமான தீர்க்க தரிசனத்துடன் பாடினார் என்பதை தலைமைப் பொறுப்பு நிரூபித்துக் காட்டும் என்பது திண்ணம்.
பாவேந்தர் சிலை அகற்றப்பட்ட கூடாது என்பது மட்டுமல்ல - நமது கோரிக்கை தமிழினத்தின் கோரிக்கை. பாவேந்தரின் நினைவைப் போற்றும் வகையில் புதுவையில் நிறுவப்படவிருக்கும் பல்கலைக் கழகத்துக்கு “பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்“ என்று பெயர் சூட்டப்பட வேண்டும்.
பாவேந்தர் பாடகர்களுக்கு பாவேந்தர் பாடல்களுக்கு உரிய உரிமைத்தொகை உரியவர்களுக்கு வழங்கப்பட்டு அவை தமிழினத்தின் பொதுச் சொத்தாக ஆக்கப்படவேண்டும் - இந்த இரண்டு கோரிக்கைகளையும் தமிழினத்தின் இன உணர்ச்சி காரணமாக எடுத்துரைத்து வலியுறுத்துவது நமது கடமை.
No comments:
Post a Comment