இராமநாதபுரம், காரைக்குடியில் தமிழர் தலைவர் சிறப்புரை!
இராமநாதபுரம்,ஏப்.8- நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தை கடந்த 3.4.2022 அன்று நாகர்கோவிலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் தொடங்கி இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
நாகர்கோவில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தேனி, மதுரை என பல்வேறு பகுதிகளிலும் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவருக்கு வழிநெடுகிலும் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பளித்து நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தை விளக்கும் இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவரிடமிருந்து பலரும் பெரும் ஆர்வத்துடன் பெற்றுக்கொள்கிறார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை பெரும்பயணப்பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நேற்று (7.4.2022) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். பயணக் குழுவில் இடம்பெற்றுள்ள கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழக கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உள்ளிட்ட பேச்சாளர்கள் பயணத்தின் நோக்கம், தமிழர் தலைவரின் பெரும்பயணம்குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இராமநாதபுரம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் இராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட தலைவர் எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.வ. அண்ணாரவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மண்டல செய லாளர் அ.மகேந்திரராசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.எம்.சிகாமணி, பா.செயராமன், கயல் கணேசன், காஞ்சிரங்குடி கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனை வர் அதிரடி அன்பழகன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
அவர் தமதுரையின் தொடக்கத்தில், ”நீண்ட நாட்களாக பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழல். காரணம் கரோனா வைரஸ். இப்போதுதான் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த கரோனாவைவிட கொடுமையானது மதக்கிருமி. அதுவும் ஆர்.எஸ்.எஸ். மதக் கிருமி. அதுக்கு ஒரேயொரு தடுப்பூசி திராவிடர் இயக்கம்தான்! அதற்காகத்தான் இந்தப் பிரச்சாரம்” என்று கூறிவிட்டு, நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கு. மோடி ஆட்சியில் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. ’டீ’ க்கடைக்கு போனாக்கூட 10 ரூபாய்க்கு கிடைக்காது. ஆனால், நாங்க 10 ரூபாய்க்கு புத்தகம் போட்டிருக்கிறோம். குறுகிய நேரத்தில் எல்லாவற் றையும் சொல்ல முடியாது என்பதால், இதை வாங்கி நீங்கள் படித்து, மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும்” என்று மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
தொடர்ந்து நாட்டில் நிலவும் இன்னுமொரு முக்கிய பிரச்சினையை நினைவூட்டினார். அதாவது, இளைஞர்கள் கஞ்சா வழக்கில் சிக்குவதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்திருப்பதைச் சொல்லி, வேலைவாய்ப்பின்மை தான் அதற்குக் காரணம் என்பதை சுட்டிக்காட்டி, 14 ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, டி.ஆர்.பாலு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சேது சமுத்திரத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட் டிருக்குமா? இராமன் பெயரைச் சொல்லி அதைத் தடுத்தது யார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு, “இன் றைக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கிறோம் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களே, அவர் கள்தானே? தொடர்ந்து, “இன்றைக்கிருக்கும் நிதின் கட்கரியும் சொன்னாரே? நடந்தா? மீனவர் நலன் பாதுகாக்கப்பட்டி ருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கினார்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழுமூர் அனிதாவை நினைவூட்டிப் பேசினார். அவர் கண்ட மருத்துவக் கனவைச் சுட்டிக்காட்டினார். அந்தக் கனவு சிதைந்த விதத்தை எடுத்துரைத்தார். ’நீட்’ தேர்வில் வெற்றி பெற்றாலும் இடம் கிடைக்காது. அதனால்தான் நம் பிள்ளைகள் உக்ரைனுக்குப் போனார்கள், ரஷ்யாவுக்குப் போனார்கள், சீனாவுக்குப் போனார்கள் என்று ’நீட்’ டின் எதிர் விளைவுகளை நினைவூட்டியதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று ஆக்கப்பட்டு இருப்பதையும், அதை மீறுவது போல இந்த நீட், புதிய தேசியக் கல்விக் கொள்கையும் இருக்கிறது என்பதையும் விளக்கினார். தொடர்ந்து இப்போது இருக்கும் அரசு எடுத்த நடவடிக்கைகளை வரிசைப்படுத் தினார்.
அரசமைப்புச் சட்டப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒன்றிய அரசு மட்டுமல்ல, ஆளுநரும் அரசமைப்புச் சட்டத்தையே மீறுகின்றனர். உலகளவில் திராவிட மாடல் ஆட்சியை ஆய்வாளர்கள் பாராட்டுகிறார்கள். அதை பொறுக்க முடியாமல் ஆளுநரைக்கொண்டு Ôபோட்டி அரசைÕ நடத்த முயல்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உரையை நிறைவு செய்தார்.
கூட்டத்தை முடித்துக்கொண்டு, மேடையிலேயே செய்தி யாளர்களை சந்தித்து விட்டு, அங்கிருந்து காரைக்குடிக்குச் சென்றார்.
இந்நிகழ்வில் சி.பி.அய்.மாவட்ட செயலாளர் முருக பூபதி,ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் பேட்ரிக், தி.மு.க.நகர்மன்ற உறுப்பினர் போஸ், சி.பி.எம்.மாவட்டக்குழு உறுப்பினர் கலையரசன், மேனாள் நகர்மன்றத் தலைவர் ஜெகநாதன், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் காசி,காமராசு, தமிழரசி, தங்கப்பாண்டியன், சரவணக்குமார், கண்ணன்,ஜான், குழந்தை ராயர்,கார்த்திக், கருணாகரன், பெரியார் செல்வம் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். முடிவில் நகர தலைவர் அசோகன் நன்றி கூறினார்.
காரைக்குடியில் பரப்புரைப் பெரும்பயணப் பொதுக்கூட்டம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் காரைக்குடி அய்ந்து விளக்கு அருகில் சுயமரியாதைச் சுடரொளிகள் அரியக்குடி வீர.சுப்பையா, சிவகங்கை உ.சுப்பையா நினைவு மேடையில் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செய லாளர் ம.கும.வைகறை அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனி வேலு, நகர தலைவர் ந.செகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் மு.சு.கண்மணி இணைப் புரை வழங்கிட கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனை வர் அதிரடி அன்பழகன், கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
'நீட்'டும், புதிய தேசியக் கல்விக் கொள்கையும் புற்றுநோயை விட ஆபத்தானது
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் உரையில், “எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது, ஏன் இந்த மூணு பிரச்சினைகளை மட்டும் மய்யப்படுத்தி பரப்புரை செய்கிறீர்களே, ஏன்? என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்” என்று மக்களின் சார்பாக, அவரே கேள்வி கேட்டு, “ஒரு விபத்து ஏற்பட்டால், காயம் ஏற்படுவது எல்லார்க்கும் தெரியும். அதற்கு பரிகாரம் செய்ய பலரும் வருவார்கள். ஆனால், புற்றுநோய் வந்தால் அது முற்றிய பிறகுதான் தெரியும். நீட்டும், புதிய தேசியக் கல்விக் கொள்கையும் புற்றுநோயை விட ஆபத்தானது. அதனால் தான் இந்த மூன்று பிரச்சினையை நாங்கள் கையில் எடுத் திருக்கிறோம்” என்று பதில் சொல்லி, இந்த பிரச்சினையின் தீவிரத்தை பளிச்சென புரியவைத்தார்.
தொடர்ந்து, “கல்விதான் நமது பிள்ளைகளின் எல்லா வளர்ச்சிக்கும் காரணம். அந்தக் கல்விக்கண்ணைக் குத்து கிறார்கள். அதற்காகத்தான் உங்களை நேரில் சந்தித்துப் பேச வந்திருக்கிறோம்'' என்று சொல்லி, மக்களுக்கு சொல்ல வந்ததை சரியாக புரிய வைத்துவிட்டார். அவர்களின் ஆர் வத்தை சரியாக தூண்டிவிட்டு, பிறகு, தமிழ்நாடு எல்லா வகையான துறைகளின் அடிக்கட்டுமானங்களும் வலுவாக இருப்பதைச் சொல்லி, அதற்குக் காரணமாக திராவிட மாடல் இருப்பதை முன்னோட்டமாக சொல்லி விசயத்திற்கு வந்தார்.
நேற்று (7-4-2022) சென்னை உயர்நீதிமன்றத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு சொன்னதை நினைவூட்டி, திராவிட மாடலுக்கு நடைமுறையிலேயே உதாரணம் காட்டினார். இந்த அடிக்கட்டுமானம் தொடங்கு வதற்கு முன்பு நம் நிலை எப்படி இருந்தது என்பதற்கு, “வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்கணும், சிரைக்கிறவன் பிள்ளை சிரைக்கணும், கூட்டறவன் பிள்ளை கூட்டணும். ஆனால் பார்ப்பான் மட்டும் படிக்கணும். எப்படி இருக்கு பார்த்தீங்களா?'' என்று எளிமையாகவும், பளிச்சென்றும் புரிய வைத்துவிட்டார். பெண்கள் கல்விக்கு நீட்டும், புதிய தேசியக் கல்வியும் முட்டுக்கட்டையாக இருப்பதை சொல்ல வரும்போது, “இவன் கடவுளைக் கும்பிடறான். காஞ்சி காமாட்சி என்கிறான். மதுரை மீனாட்சி என்கிறான். காசி விசாலாட்சி என்கிறான். ஆனால், பெண்கள் மேயரானால் ஒத்துக்க மாட்டேங்கிறான்” என்றதும் மக்கள் கொல்லென்று சிரித்துவிட்டனர்.
தொடர்ந்து, ”இந்தக் கருப்புச்சட்டைக்காரன் களத்தில் நிற்காவிட்டால், இந்த சாதனை நிகழ்ந்திருக்குமா தோழர் களே?'' என்று உணர்வு வயப்பட்டுப் பேசியதும், மக்களும் உணர்வு வயப்பட்டு ஆசிரியரின் கேள்விக்கு பலமாக கைகளைத் தட்டுவதன் மூலம் பதில் தந்தனர். அதன் பிறகு இந்த மூன்று பிரச்சினைகள் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக விளக்கினார். அரசமைப்புச் சட்டப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் அதை எப்படியெல்லாம் மீறுகிறார்கள் - தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்படியே நடந்துகொண்டு வருவதையும் தவறாமல் மக்கள் முன்வைத்தார்.
“திராவிடர் கழகம் ஒரு ஸ்கேன் சென்டர். உள்ளதை உள்ளபடி காட்டும். அதைத்தான் உங்களிடமும் சொல்லி இருக்கிறோம் என்று கூறி நிறைவு செய்தார். இந்நிகழ்வில் தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பசும்பொன் மனோகரன், வி.சி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இளையகவுதமன், சி.பி.எம். தாலுகா செயலாளர் அழகர்சாமி, தி.மு.க. நகர்மன்ற உறுப் பினர்கள் ஹேமலதா செந்தில், திவ்யா சக்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை நகர தலைவர் ஸ்டீபன், திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் நவில், ஏ.அய்.டி.யூ.சி. மாநிலக்குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
முடிவில் நகர செயலாளர் கலைமணி நன்றி கூறினார்.
தொடர்ந்து இரவு தங்குவதற்காக திருச்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
இராமநாதபுரத்தில் ஆசிரியருக்கு வரவேற்பு!
இராமநாதபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமையில், மாவட்ட தலைவர் எம்.முருகேசன், மாவட்ட செயலாளர் கோ.வ.அண்ணாரவி, பொதுக்குழு உறுப்பினர்கள்
பா.ஜெயராமன், கா.மா.சிகாமணி, கயல் கணேசன், நகர தலைவர் அசோகன், நகர செயலாளர் சரவணக்குமார், கருணாகரன், ஜான் உள்ளிட்ட தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அன்பொழுக வரவேற்று மகிழ்ந்தனர்.
மானாமதுரையில் ஆசிரியருக்கு வரவேற்பு
இராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் தலைமையில் மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட அமைப் பாளர் ச.அனந்தவேல், சிவகங்கை நகர தலைவர் இர.புக ழேந்தி, ச.வள்ளிநாயகம், மேனாள் மாவட்ட தலைவர் வேம்பத்தூர் ஜெயராமன், சிவகங்கை அ.நேரு, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, விஜயகுமார் (சி.பி.எம்), அசோக் (ம.தி.மு.க), மற்றும் சி.பி.அய்.தோழர்கள் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன்பு கழகத் தலைவருக்கு எழுச்சி மிக்க வரவேற்பு அளித்தனர்.
ஆசிரியரின் முயற்சிக்கு
நாம் உறுதுணையாக இருப்போம்!
இராமநாதபுரம் பரப்புரையில், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான திருமதி பவானி இராஜேந்திரன் அவர்கள் பேசும்போது, பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் இன்றைக்கு கிடைத்துள்ளது என்றால் அதற்கு முழு காரணமும் தந்தை பெரியார் அவர்கள்தான். தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை, கலைஞர் இல்லை. எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் தந்தை பெரியார் அவர்களுக்கு பெண்கள் ஒன்று கூடி Ôபெரியார்Õ என்ற பட்டத்தை வழங்கினார்கள். அதேபோல இன்று தமிழ் நாட்டில் அமைந்துள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு அனைத்து வகையிலும் முன்னிலை கொடுத்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அய்யா தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
மாநில உரிமைகளை மீட்க நமது பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அய்யா அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுவும் தி.மு.க.வின் இலட்சிய முழக்கங்களில் ஒன்றாகும். இந்த கோடை வெயிலில் இந்த வயதில் ஆசிரியர் அவர்கள் மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது முயற்சிக்கு நாம் உறு துணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment