ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் மாநில உரிமை பிரச்சாரப் பெரும் பயணம் வெல்க!
கரோனா தொற்று நோயினும் கொடிய நோயாக நம்மை தாக்கி, நம் இளைஞர்களின் எதிர்காலக் கனவை சிதைத்து சின்னா பின்ன மாக்கிக் கொண்டு இருக்கிற 'நீட்' எனும் நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாநில உரிமைகளை மீட்டெ டுக்கவும், உண்மையான கூட்டாட்சி முறையை நடைமுறைப்படுத்தவும், தமிழ் மக்களை போராடச் செய்வதற்கான விழிப் புணர்வு பிரச்சாரத்திற்கு நம் அனைவரின் தாய்க் கழகமான திராவிடர் கழகம் நாள் குறித்துவிட்டது.
03.04.2022 அன்று நாகர்கோவிலில் தொடங்கி, 25.04.2022 அன்று சென்னையில் நிறைவுபெற உள்ள இந்த பிரச்சாரப் பெரும் பயணத்தில், திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு, 21 நாட்களில் 40 பொதுக்கூட்டங்களில் முழக்கமிட உள்ளார்.
திமுக, மறுமலர்ச்சி திமுக, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், பொது உடைமைக் கட்சிகள், காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய, கிறித்தவ அமைப்புகள் என நமது தோழமை அமைப்புகள், நாடு தழுவிய அளவில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேராதரவு அளித்து வாழ்த்திட உள்ளார்கள்.
90 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிற நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரு முறை கரோனா தொற்றுக்கு ஆளான நிலையிலும், முதுமையையும், உடல்நலக் குறைவையும் புறந்தள்ளிவிட்டு - 95 வயதிலும் மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டு தமிழர் உரிமைக்காக அரிமாவாய் போராடிய பெரியாரின், வழித்தோன்றலாய் இதோ வீதிக்கு வந்துவிட்டார்!
89 வயதில் 79 ஆண்டு ஓயாது உழைத்தவர்; 87 ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட பெரியாரின் போர்வாளான 'விடுதலை'யை 60 ஆண்டுகளாக ஓங்கிப் பிடித்து உரிமைப் போர்க்களத்தில்களமாடிவருபவர், தமிழரின் உரிமை மீட்புப் பாசறையாம் திராவிடர் கழகத்தை 45 ஆண்டுகளாய் வலிமையும் வீச்சும் குன்றாமல் காத்து நிற்பவர், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராய்' கலங்கரை விளக்கமாய் நல்வழிகாட்டி வருபவர் எனும் சிறப்புக்களின் சின்னமாம் ஆசிரியர் வீரமணியின் வெண்கலக்குரல் வெற்றி மணியாய் மேடைகளில் ஒலிக்கப்போகிறது!
“10 வயது சிறுவன் வீரமணி பேசுகிறான்” என்று விளம்பரம் செய்து, மேடையில் போட்டிருக்கும் மேசை மீது ஏற்றி வைத்து அவரின் குரலைக் கேட்டு பெரியார் பாராட்டினார்! "பெரியாரின் ஞானப்பால் அருந்திய திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர் வீரமணி” என்று அப்போதே புகழ்மாலை சூட்டினார் அண்ணா !
அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு சிறுவனாக இருந்தபோதே நிதி திரட்டி, தான் பிறந்த கடலூரில் கூட்டம் நடத்திக் கொடுத்தவர் நம் வீரமணி! மாணவப் பருவத்திலேயே தன் அண்ணன் கி.கோவிந்தராசனையும், ஆசிரியர் திராவிட மணியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சொக்க வைக்கும் சொற்பொழி வாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்தவர் நம் கி.வீரமணி!
1979 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், பிற்படுத்தப் பட்டவர் களுக்கு, 9000 ரூபாய் வருமான வரம்பு விதித்து சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போட்டபோது, அதனை எதிர்த்து இதே போல் தொடர் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டார் வீரமணி!
20.11.1979 அன்று சென்னை - திருச்சி, 21.11.1979 அன்று திருச்சி - நாகூர். 22.11.1979 அன்று திருச்சி - கரூர். 23.11.1979 அன்று கோவை - சென்னை என ரயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வழி நெடுக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதற்கு முன்பாக 29.10.1979 அன்று ஈரோட்டில் தொடங்கி, கோவை, தருமபுரி, தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, தஞ்சை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என நாடு தழுவிய அளவில், பிரச்சாரக் கூட்டங்களில் நாள்தோறும் ஓய்வின்றி கலந்து கொண்டு பரப்புரை செய்து, தமிழ் மக்களை களத்திற்கு அழைத்தார் ஆசிரியர் வீரமணி! அதன் விளைவாகத்தான் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. காரணத்தை தெரிந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களும், வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்றதோடு, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டை 50 விழுக்காடு என உயர்த்திடவும் செய்தார். இந்த சாதனை தமிழ் மக்களுக்கு கிடைத்திட ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிரச்சார பெரும்பணியே பெரிதும் காரணமாயிற்று!
இதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், 10.02.1980 முதல் 17.02.1980 வரை தொடர் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார் ஆசிரியர் கி.வீரமணி!
இதனைப் போலவே, மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1981 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடுகளை 01.03.1981 இல் தொடங்கி, 15.03.1981 வரை தமிழகம் முழுவதிலும் திராவிடர் கழகம் நடத்தியது. இதன் பின்னர் 02.08.1994 முதல் 13.08.1994 வரை, சமூக நீதி எழுச்சி பயணத்தை நடத்தி, 2500 கி.மீ. தொலைவு பயணித்து, 70 ஊர்களில் பிரச்சாரம் நடத்தி, சமூக நீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஆசிரியர் கி.வீரமணி. மண்டல் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசு பணிகளில் முதன் முறையாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாயில் கதவு திறக்க ஆசிரியரின் பிரச்சாரப் பயணமே பெரிதும் துணை நின்றது!
மண்டல் பரிந்துரைகளை நிறைவேற்றிய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அரசை கோட் டையில் இருந்து இறக்கியது பாஜக! இதனைக் காரணமாக்கி, ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு முதலானவைகளை கட்டவிழ்த்துவிட்டு, நாட்டையே கலவர பூமியாக்கியது காவிக் கூட்டம்!
இந்தக் காலகட்டத்தில் மத நல்லிணக்கத்தை, மக்களிடம் விதைப்பதற்காக பயணம் நடத் தினார் ஆசிரியர் கி.வீரமணி! மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம் என முழக்கமிட்டு, அய்ந்து கட்ட சமூக ஒற்றுமைக் கான பயணத்தை தொடங்கினார் கி.வீரமணி!
முதல் கட்டப் பிரச்சாரம், 1993 சனவரி 3 ஆம் நாளில் நாகர்கோவிலில் தொடங்கியது தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம், போடிநாயக்கனூர், மதுரை என தொடர்ந்து நடைபெற்ற வட்டார மாநாடுகளில் மனித நேயம் மலர்ந்திட பரப்புரையாற்றினார் கி.வீரமணி!
26.01.1993 முதல் 30.01.1993 வரை, கரூர், திண்டுக்கல், இராமநாதபுரம், காரைக்குடி, புதுக் கோட்டை ஆகிய நகரங்களில் இரண்டாவது பிரச்சாரக் கூட்டங்கள் நடை பெற்றன.
21.02.1993 இல் திருச்சியில் தொடங்கி, அரியலூர், விருத்தாசலம், திருக்கோயிலூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் 25.02.1993 வரை மூன்றாவது கட்ட மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.
12.03.1993 அன்று குன்னூர், 13.03.1993 அன்று கோவை, 14.03.1993 அன்று இராதாபுரம், 15.03.1993 அன்று ஓமலூர், 16.03.1993 அன்று கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் நான்காவது கட்ட பிரச்சாரக் கூட்டங்கள் நடந்து முடிந்தன.
அய்ந்தாவது கட்ட நிறைவு நிகழ்ச்சிகளாக, 24.03.1993 ஆம்பூர், 25 இல் செங்கல் பட்டு, 26 இல் தாம்பரம், 27 இல் ஆவடி என பிரச்சாரப் பயணம் தொடர்ந்தது. 25 வட்டார மாநாடுகளில், சகோதரத்துவம் நம்மில் பூத்துக்குலுங்கிட தேவையான கருத்துகளை வலியுறுத்தி உரையாற்றினார் ஆசிரியர் கி.வீரமணி! இதனைத் தொடர்ந்து 1998-1999 ஆண்டு களில், ஜாதி ஒழிப்பு - மதவாத எதிர்ப்பு ஆகியவைகளை முன் வைத்து, பிரிந்து கிடக்கும் தமிழ் மக்களிடம் புரிதலை ஏற்படுத்தி, ஒற்றுமையை உருவாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டது திராவிடர் கழகம்!
12.12.1998 வைக்கத்தில் தொடங்கி 19.12.1998 மதுரையில் நிறைவு பெற்ற ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தில், 1313 கி.மீ பயணித்து, 48 கூட்டங்களில் உரையாற்றி தமிழர் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார் வீரமணி!
20.03.1999 இல் திருத்தணியில் தொடங்கி 29.09.1999 அன்று திருச்சியில் நிறைவடைந்த பிரச்சாரப் பயணத்தில், 59 இடங்களில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு பெரும்பயணக் கூட்டங்களில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி உணர்ச்சிமிகு உரையாற்றினார் ஆசிரியர் கி.வீரமணி! மூன்று மாத இடைவெளியில் மீண்டும் ஓர் பயணத்திற்கு தயாரானது திராவிடர் கழகம்.
01.06.1999 முதல் 06.08.1999 வரை நாடு முழுவதும் நடைபெற்ற மதவாத கண்டன மாநாடு களில் (33 மாநாடுகள்) தீங்கு விளைவிக்கும் சங்பரிவார் கும்பலின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தி, தமிழர் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார் ஆசிரியர் கி.வீரமணி!
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் குறிப்பிட்ட - சமூக நீதி சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அரசு இப்போது நிறைவேற்றிய, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆதல் வேண்டும் என்ற உரிமைப் பிரச்சினையை கையில் எடுத்து, 2005 ஆம் ஆண்டில் மக்களை சந்தித்தது திராவிடர் கழகம். 06.02.2005 இல் தொடங்கி ஆறு கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை அறிவித்தது திராவிடர் கழகம்! 13.02.2005 சென்னை , 23.03.2005 மன்னார்குடி, 12.03.2005 சேலம், 04.04.2005 குன்னூர், 18.04.2005 ஆத்தூர், 30.04.2005 காரைக்கால் என 160 இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அர்ச்சகர் உரிமை குறித்து அரிய விளக்கம் தந்து, தமிழர் உரிமை மீட்பு அறப்போருக்கு தமிழர்களை தயார்படுத் தினார் ஆசிரியர் கி.வீரமணி!
இவ்வாறு தமிழர் நலன் காக்க தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இப்போது மாநில உரிமை மீட்புக்கு மக்களை தயார்படுத்த தமிழ் மக்களிடம் வருகிறார். அவரையும் - அவருடன் இணைந்து பணியாற்றும் திராவிடர் கழகத்தினரையும் மறுமலர்ச்சி தி.மு.கழக சார்பில் கனிவுடன் வரவேற்போம்.
ஜாதி மத வேறுபாடின்றி தமிழர்கள் இணைந்து நிற்க - நெல்லையில் தொடங்கி சென்னை வரை தொடர்ந்த மறுமலர்ச்சிப் பயணம், காவிரி நதிநீர் உரிமை மீட்க பூம்புகார் முதல் கல்லணை வரை நடை பெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு பயணம், ஸ்டெர்லைட் நச்சாலையை இழுத்து மூட வேண்டும் என்பதற்காக திருவைகுண்டம் முதல் தூத்துக்குடி வரை நடைபெற்ற பிரச்சாரப் பயணம், முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்க மதுரை முதல் கூடலூர் வரை நடைபெற்ற எழுச்சிப் பயணம், மது ஒழிப்பிற்காக உவரியில் தொடங்கி மதுரையிலும், பின்னர் தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற நடைபயணம், என தமிழர் நலன் காக்க - தமிழகம் முழுவதும் நடையாய் நடந்து சாதனை சரிதம் படைத்த நம் திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்களின் சார்பில் ஆசிரியரின் மாநில உரிமை மீட்புப் பயணம் முழுமையான வெற்றி காண வாழ்த்துச் சொல்வோம்!
நன்றி: 'சங்கொலி' 8.4.2022
No comments:
Post a Comment