கடல் வற்றி கருவாடு தின்ன வாடி நிற்குமாம் கொக்கு இந்தியைத் திணிக்க நினைப்பவர்கள் கதியும் இதுதான்!
தமிழ்நாடு முன்னணியில் நின்று எதிர்த்து விரட்டும்!
கழகப் பிரச்சாரப் பெரும் பயணத்தில் தமிழர் தலைவர் உரை
தஞ்சை, ஏப்.9- இந்தியைத் திணிக்க நினைத்தால் அது எடுபடாது - அதுவும் தமிழ்நாடு அதற்கு இடம் தராது - எதிர்ப்புக் களத்தில் முன்னணியில் நின்று விரட்டும். கடல்வற்றி கடுவாடு தின்ன வாடி நிற்குமாம் கொக்கு என்ற நிலைதான் ஒன்றிய அரசுக்கு ஏற்படும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
புதுக்கோட்டை, தஞ்சையில் பரப்புரைப் பெரும் பயண பிரச்சாரக் கூட்டங்களில் நிறைவாக உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் இயக்கத்தால் மனுதர்மம் மாய்ந்தது
தமிழர் தலைவர் தமது உரையில், பல பிரச்சினைகளில் உரிமைப் பிரச்சினைகள் சிலவற்றைத் தொட்டுக் காட்டிவிட்டு, கல்வியிலும், சமூகநீதியிலும் தமிழ்நாட்டின் பரிணாம வளர்ச்சியை 102 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கி விவரித்தார். அதனூடேயே புதுக்கோட்டையின் சிறப்புகளைச் சொல்ல, தமிழ் நாட்டின் முதல் டாக்டர் முத்துலட்சுமி அவர்களைப் பற்றி சில முக்கியமான தகவல்களை பகிர்ந்தார். அதாவது, "அவர் படிக்கும் போது எல்லாரும் ஆண்கள்;. அவர் வருவதற்கு வேறு வழி; இடையில் ஒரு திரை மறைத்திருக்கும்; ஏன்? மனுதர்மம். இதை அத்தனையும் மாற்றியது திராவிடர் இயக்கம் தோழர்களே” என்றார். தொடர்ந்து பனகல் அரசரின் மகத்தான பங்களிப்பை விவரித்தார்.
ராஜாஜியின் குலக்கல்விக் கொடுமை பற்றி தொட்டுக் காட்டினார். அதிலிருந்து நாம் மீண்டதைச் சுட்டிக்காட்டினார். தற்போது சமூகநீதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்து வரும் மகத்தான சாதனைகளை பெருமையுடன் விளக்கினார். ஆனால் இதிலிருந்து தலைகீழாக மாற்றிப்போடத்தான் நீட், புதிய கல்விக்கொள்கை இருக்கிறது என்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டார். நீட் தேர்வில் ராமநாதபுரத்தில் ஆள்மாறாட்டம் நடந்தை நினைவூட்டினார். அமித்ஷா ஹிந்தி திணிப்பைப்பற்றி மறுபடியும் பேசியிருப்பதை எடுத்துக்காட்டி, ”அவர்களுக்கு இருக்கும் மொழி உரிமை நமக்கும் இருக்கிறது. தமிழ் செம்மொழி ஆச்சு, அதுக்குப்பிறகுதான், நெல்லுக்குப் பாய்ந்த நீர் ஆங்கே தர்ப்பைப் புல்லுக்கும் பாய்ந்தது” என்று கூறியதும் கவிதைப்பித்தன் உட்பட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து "மொழிப்பிரச்சினையால் நாடுகளே பிரிந்திருக்கின்றன. வரலாற்றைப் படித்துப் பாருங்கள்” என்று அமித்ஷாவுக்கு சொல்வது போல மக்களுக்குச் சொன்னார்.
"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்குப் பதில் இந்திதான் என்று கூறி இருக்கிறார்.
'கடல் வற்றி கருவாடு தின்ன வாடி நிற்குமாம் கொக்கு' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. ஒருக்காலும் இந்தியை ஏற்க மாட்டோம் - குறிப்பாக தமிழ்நாடு இதில் முன்னணியில் நின்று எதிர்த்து விரட்டும்" என்றார்.
போராடுவதற்கு ஆயத்தமாகுங்கள்
மேலும், அவர் மக்களைப் பார்த்து, "இந்தத் திட்டங்களால் உங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை. நீங்கள் போராடுவதற்கு ஆயத்தம் ஆகவேண்டும். அதற்குத்தான் இந்தப்பயணம். நமது பிள்ளைகளின் வாழ்வு நாசமாகும்போது வயதா முக்கியம்? இது கட்சிப்பிரச்சினை இல்லை; ஜாதிப்பிரச்சினை இல்லை; மதப்பிரச்சினை இல்லை; அரசியல் பிரச்சினை இல்லை. ஆகவே அனைவரும் தயாராகுங்கள். பெரியாரும், பெரியார் தொண்டர்களும் முன்னெடுத்த போராட்டங்கள் தோற்றதே கிடையாது" என்று முழங்கினார்.
தி.மு.க. வின் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பேசி முடித்ததும், தமிழர் தலைவர் மிகவும் இயல்பாகவும், கலகலப்பாகவும் பேசி அனைவரையும் வசீகரித்தார். முன்னதாக பேசிய தஞ்சையின் மேயர், தான் ஆசிரியரின் கொள்கைக் காதலன் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொட்டுக்காட்டி, "காதலிக்க நேரமில்லை; இத்தனை வயதுக்கு பிறகாவது எனது கொள்கையைக் காதலிக்க ஒருவர் கிடைத்திருக்கிறார்; எனது திருமணம்கூட ஜாதி மறுப்புத் திருமணமே தவிர, காதல் திருமணம் அல்ல” என்று பேசி அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டார். தொடர்ந்து திராவிட மண்ணான தஞ்சையிலே ஆரிய மாயை சிலகாலம் இருந்ததை சுட்டிக்காட்டினார். இப்போது மறுபடியும் திராவிடக்கோட்டையாக மாற்றப்பட்டிருப்பதை எடுத்துரைத்து, அதற்குக் காரணமானவர்களை மனதார பாராட்டினார். இதைப் பற்றி கலைஞருக்கும், தனக்கும் நிகழ்ந்த உரையாடல்களை நினைவுபடுத்தி, இப்போது தானும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து தன்னைச் சுட்டிக்காட்டி, “நான் முதல் பட்டதாரி, இங்கே மேடையிலேயே இருக்கின்றவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். ஏன்? எதைக்கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் ஆண்ட நாடு இது. எப்படி படிச்சிருக்கமுடியும்?” என்று கேட்டுவிட்டு, இதை மாற்றிக் காட்டியது திராவிடர் இயக்கம் என்றார்.
--------------------------------------------------------------------
நானும் இளைஞன்தான்!
”கடந்த சில மாதங்களாக கரோனா காரணமாக நேரில் சந்திக்க முடியவில்லை. அது சரியானது. இப்போதுதான் தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நமது ஒப்பற்ற இரண்டாவது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றவர் கவிதைப்பித்தன் ஆவார்கள். திராவிடப் பண்ணையில் விளைந்த எங்கள் விளைச்சல். பெரியார் எனும் ஆயுதக்கிடங்கில் தயாரிக்கப்பட்ட கூர்வாள்!” என்று கூறி கவிதைப்பித்தனுக்கு ஆடை அணிவித்து ஆசிரியர் சிறப்பு செய்தார். தொடர்ந்து, “அதுபோலவே நண்பர்களே முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முன்னாள் மாவட்டத் தலைவர் தோழர் இர.புட்பநாதன் வயதின் காரணமாக அவரால் மேடைக்கு வர முடியாது. ஆகவே நான் கீழே சென்று வாழ்த்த வேண்டும். ஏன்னா நான் இன்னும் இளைஞன்தான்” என்று கூறியதும் வெடிச்சிரிப்பும், கைதட்டல்களும் ஒலித்தன. தமிழர் தலைவர் மேடையை விட்டு, கீழே சென்று இர.புட்ப நாதனுக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தார்.
- புதுக்கோட்டையில் தமிழர் தலைவர்
--------------------------------------------------------------------
ஆணி வேர் ஆழமானது
முன்னதாக பேசிய துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி பேசியதையே ஆதாரமாகக் கொண்டு, "உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ஒருவர் இங்கே வந்து நமது மக்களுக்கு புரியாத மொழியில் பேசி சிகிச்சை செய்தால் என்னாகும்?” என்று ’நீட்’ டால் ஏற்பட இருக்கும் நடைமுறையை விளக்கினார். தற்போது நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருப்பதை நினைவூட்டி, “நிதிநிலை அறிக்கையிலேயே கொள்கையைச் சொன்ன ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்.” என்று கூறி, "இதைதான் நாம் திராவிட மாடல் என்கிறோம். இதை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.காரணம், இதன் ஆணிவேர் ஆழமானது.” என்று படித்துக் காட்டியதும் கைதட்டலில் பொறி பறந்தது.
மேலும் அவர், “சமூகநீதி மண்ணுங்கிறதனாலதானே ’நீட்’ தேர்வை எதிர்க்கிறோம்; புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்” என்று பிரச்சாரப்பயணத்தின் நோக்கத்திற்கு வந்தார். ஒவ்வொரு கூட்டத்திலேயும் அனிதாவை தவறாமல் நினைவுபடுத்தி பேசுவது போலவே இங்கும் பேசினார். கடந்த ஆட்சியில் ஏற்பட்டிருந்த அனுபவத்தின் காரணமாக, மேனாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் கொடுத்த அறிக்கைப்படி நீட் எதிர்ப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஆளுநரால் ஏற்பட்ட அவலத்தைக் குறிப்பட்டுவிட்டு, முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் ஒன்றிய அரசால் நியமன்ம் செய்யப்பட்டவர்; இது மக்களாட்சி. இப்படி நடக்கலாமா?" என்று ஆவேசத்துடன் கேட்டார். தொடர்ந்து, “ஒரு மாநில ஆளுநர், தான் இருக்கும் மாநிலம் வளரக்கூடாது என்று பேசுவாரா?” என்று ஒரு விசித்திரமான தகவலைச் சொல்லி பொருத்தமாகவே, “இப்படியொரு விசித்திரமான ஆளுநரைப் பெற்றிருக்கிறோம்” என்றார்.
நாம் சொல்வது திராவிட மாடல் - ஒன்றிய அரசு சொல்வது ஆரிய மாடல்!
மிகமுக்கியமான ஒரு விசயமாக, “உலகெங்கும் திராவிட மாடலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது, சமூகநீதி என்ற சொல்லே இல்லாத, பெண் கல்விக்கு வாய்ப்பே இல்லாத ஒரு திட்டத்தை எப்படி ஏற்பது?" என்றார் ஆசிரியர். "ஒன்றிய அரசு சொல்வது ஆரிய மாடல்? நாம் சொல்வது திராவிட மாடல்! இதில் அனைவருக்கும் அனைத்தும்! பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்” என்று சொல்லி நீட், புதிய தேசியக்கல்வியின் கனபரிமாணத்தை அளந்துகாட்டினார்.
தொடர்ந்து, “எப்படி பெரியார் குலக்கல்வியை எதிர்த்து, நாடு தழுதிய அளவில் போராட்டம் நடத்தினாரோ, அது போலத்தான் இதுவும்” என்று கூறிவிட்டு, “உங்களை தயார்படுத்தான் இந்தப்பயணம்” என்று மக்களை நோக்கி கையை நீட்டிக்காட்டினார்.
தனது உரையின் சாரமாக, “வெளிப்படையாக ஜனநாயகத்தை மதிக்காத தன்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். இதை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு உங்களை தயார்படுத்த வேண்டும். தயாராகுங்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
தஞ்சையில் மக்கள் வெள்ளத்தில் தமிழர் தலைவர் பிரச்சாரம்
நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சார பெரும்பயணத்தின் பரப்புரை பொதுக்கூட்டம் ஏப்ரல் 8 அன்று மாலை 6 மணியளவில், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில், சுயமரியாதைச் சுடரொளிகள் இராஜகிரி கோ.தங்கராசு, இராயபுரம் இரா.கோபால், தஞ்சை சு.முருகேசன், தஞ்சை ப.தேசிங்கு, உரத்தநாடு ஆர்.பி.சாமி ஆகியோரது நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------
மீனவர்கள் கைது தொடருவதா?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. ஆட்சியில் கலைஞரின் வழிகாட்டுதலில் டி.ஆர்.பாலு அவர்களின் முயற்சியில் ரூ.2000 கோடிக்கும் மேலாக செலவு செய்து சேது சமுத்திரத் திட்டம் நடைபெற்றது. இன்னமும் 12 கி.மீ. தான் பணிகள் பாக்கியிருந்தன. அது வந்திருந்தால் திருப்பூரைத் தோற்கடித்து இங்கிருக்கும் இளைஞர்கள் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். திட்டமிட்டே சுப்பிரமணியசாமி உட்பட பார்ப்பனக் கூட்டம் திடீரென்று இராமனைக் கொண்டுவந்துவிட்டார்கள். பொய்யிலே பூத்து, பொய்யிலே விளைந்தவர்கள். இப்போதும் அந்த மோடி வித்தை நடந்து கொண்டுள்ளது. அந்தத் திட்டம் வந்திருந்தால் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருந்திருப்பார்கள். ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் கைது இன்றும் தொடர்கிறது.
- தமிழர் தலைவர்
------------------------------------------------------------------------------------
பிரச்சார பெரும்பயண விளம்பரம்
தஞ்சை மாநகரம் முழுவதும், திரும்பும் திசையெங்கும் இப்பிரச்சார பெரும்பயணத்தை விளக்கி 15 நாள்களுக்கு முன்பாகவே சுவரெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ப.விஜயக்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.கபிலன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், கரந்தை பகுதி செயலாளர் தனபால், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு மற்றும் கழக தோழர்கள் 1.4.2022 அன்று தொடங்கி 7.4.2022 வரை பழைய பேருந்து நிலையம் பகுதியை சுற்றி அமைந்துள்ள கடைவீதிகளில் பொதுமக்களிடம் நிகழ்ச்சிநிரல் அடங்கிய துண்டறிக்கைகளை விநியோகம் செய்து விளம்பரம் செய்யப்பட்டது அப்போது வணிக பெருமக்களிடம் நிதி திரட்டப்பட்டது.
இரண்டு நாள்களுக்கு முன்பாகவே தஞ்சை நகர் முழுவதும் நிகழ்ச்சி நிரல் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தமிழர் தலைவரின் உரை கேட்க வாரீர் வாரீர் என மக்களுக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. கிராமப்புற மக்கள் அதிகம் கூட கூடிய இடமாக அமைந்துள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோர் பார்த்தவுடன் பளிச்சென்று திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி இங்கே நடைபெறவுள்ளது என்பதை புரிந்துகொள்ளும் வகையில் திராவிடர் கழகத்தின் லட்சியக் கொடி தஞ்சை மாநகர் முழுவதும் சாலைகளின் சந்திப்புகளில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. 8-4-2022 அன்று காலை 10 மணி தொடங்கி மாலை 6 மணி வரை தஞ்சை மாநகர் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் தமிழர் தலைவர், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் உரை நிகழ்த்துகின்றனர். நீட்டை ஒழிக்க ஆதரவு தாரீர்! அனைவரும் வாரீர்! கருத்துக்களை கேளீர்! என பொதுமக்களிடம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் செய்யப்பட்டது.
*உரிமையை மீட்போம்“ என்ற இசை நிகழ்ச்சி*
சரியாக 6 மணிக்கு இப்பொதுக் கூட்டத்தின் தொடக்கத்தில் தஞ்சை பாவேந்தர் கலை குழு சார்பில் “உரிமையை மீட்போம்“ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க.துணை தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, உரத்தநாடு முனைவர் கோபு, உறந்தை கருங்குயில் கணேசன், இயக்குநர் தஞ்சை ராசிமணிவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு பகுத்தறிவு பாடல்களை பாடினர்.
------------------------------------------------------------------------------------
யார்மீது வழக்குப் போடுவது?
அனிதா 1200 க்கு 1176 மதிப்பெண் பெற்றாலும் ’நீட்’ டால் இடம் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வில் பெற்ற 1 மதிப்பெண் கூட பயன்படவில்லை. இதைவிட அயோக்கியத்தனம் வேறுண்டா? நமக்காக கட்டிய கல்லூரிகளில் நமக்கு இடமில்லை என்றால் எதுக்கு அந்த கல்லூரிகள்? இந்த ஏமாற்றுத்தனம் செய்வதற்கு ஒரு பிரதமரா? இது ஒரு நாடா? ஒரு பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்தால் வழக்கு போடுகிறோம். 12 ஆண்டு படிச்சு வாங்கிய மதிப்பெண்ணே தேவையில்லை என்கிறார்கள். யார் மீது வழக்கு போடுவது? அதே போல ஒரு கொரியரில் அனுப்பியது போய் சேரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனம் மீது வழக்கு போடுகிறோம். குடியரசு தலைவருக்கு, ஆளுநர் மூலம் அனுப்பப்பட்ட மசோதா இன்னமும் போய்ச் சேரவில்லை. இப்போது யார் மீது வழக்கு போடுவது?
- முனைவர் அதிரடி அன்பழகன்
------------------------------------------------------------------------------------
தமிழர் தலைவர் வருகை, வரவேற்பு
பட்டுக்கோட்டை மன்னார்குடி கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் கழக மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சைகிராமப்புற மக்கள், நகரவாசிகள் என ஆபிரகாம் பண்டிதர் சாலை முழுதும் மக்கள் வெள்ளமாக பார்க்கும் இடமெல்லாம் கருஞ்சட்டை வீரர்களாக காட்சியளித்தது. புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நகருக்குள் நுழையும் பகுதியான புறவழிச்சாலையிலிருந்து பரப்புரை கூட்டம் நடைபெறும் ஆபிரகாம் பண்டிதர் சாலை வரை நூற்றுக்கணக்கில் கழகக் கொடிகள் கட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகைபுரிந்தவுடன் “வெல்லட்டும், வெல்லட்டும் பிரச்சாரப் பெரும் பயணம் வெல்லட்டும், வாழ்க வாழ்க வாழ்கவே நீட் தேர்வை ஒழிக்க பிரச்சார பெரும் பயணம் மேற்கண்டிருக்கும் தமிழர் தலைவர் வாழ்கவே” என்று வரவேற்று முழக்கமிட அங்கே கூடியிருந்த கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் எழுந்து நின்று வரவேற்று வணங்கி மகிழ்ந்தனர். தமிழர் தலைவரும் அனைவரையும் நலம் விசாரித்து கொண்டே நடந்துவந்து மேடையேறினார், மேடையில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகர மேயர் ராமநாதன், மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் கழகத் தோழர்கள் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரை வரவேற்றனர்.
தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். முன்னிலையேற்றிருந்த கழக காப்பாளர் வெ.ஜெயராமன், மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி, பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், கும்பகோணம் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பட்டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் வை.சிதம்பரம், மன்னார்குடி மாவட்ட கழக செயலாளர் கணேசன், கும்பகோணம் கழக மாவட்ட செயலாளர் துரைராசு தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் சுதாகர், செயலாளர் அரங்கராசன், மாநகர செயலாளர் கரந்தை டேவிட் ஆகியோர் சார்பில் மன்னர்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------
இளைஞரைப் போல் உழைக்கிறார்!
தஞ்சாவூர் பரப்புரை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் பேசியதாவது:
அய்யா அவர்களுக்கு வயது 89 இல்லை 29 என்று எண்ணத் தோன்றுகிறது .வரும் டிசம்பர் 2 வந்தால் 90 வயது என்றால் நம்ப முடியவில்லை. இளைஞரை போல உழைத்துக் கொண்டிருக்கிறார்.
நான் சட்டமன்றத்தில் இருந்து காலை 11.30 க்கு புறப்பட்டு இப்போது வந்தேன். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் அய்யா ஆசிரியர் அவர்களோ தொடர்ந்து 21 நாள்கள் பயணம் மேற்கொண்டு உள்ளாரே இதற்கு முன் நாங்களெல்லாம் மிகச் சாதாரணம்.
அய்யா அவர்களை பார்க்கும் போதெல்லாம் சொல்வார்கள்.எப்படிப்பட்ட இந்த தஞ்சை மண்ணில் ஒரு ஆரியப் பெண்மணி அமர்ந்துஉள்ளாரே என்று சொன்னபோது வெட்கித் தலை குனிந்து நின்றோம். அந்த நிலையை மாற்றி இன்றைக்கு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். அதற்கு தேர்தல் பரப்புரையை செய்த ஆசிரியர் அய்யா அவர்களும் காரணம்.
இப்போது அந்த வெற்றியை ஆசிரியர் காலடியில் சமர்ப்பித்திருக்கிறோம். அய்யா அவர்களின் இந்த முயற்சிக்கு நமது ஆதரவு என்றென்றும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் மோகன், அதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன், திராவிட இயக்க தமிழர் பேரவை செல்ல.கலைவாணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்புச்செயலாளர் திருப்பூர் சுடலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ச.சொக்காரவி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் அய்.எம்.பாதுசா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ந.குருசாமி, கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அதற்கு முன்பாக கடந்த நகராட்சி - மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் அவர்களுக்கும் தஞ்சை மாநகராட்சியின் மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோருக்கும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் மண்டல தலைவர் அவர்களுக்கும் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்து பாராட்டினார்கள். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்
கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.
-----------------------------------------------------------------------
மக்கள் சக்தி முன் நிற்க முடியாது
நீட் தேர்வை ஒழிக்க வேண்டாமா? தேசிய கல்வியை ஒழிக்க வேண்டாமா? மாநில உரிமைகளை மீட்க வேண்டாமா? என்று பிரச்சாரம் செய்து வருகிறார் எங்கள் தலைவர்.ஆசிரியர் அய்யா அவர்கள். பலரும் சொன்னார்கள், இந்த வேகாத வெயிலில், 89 வயதில் இந்தப் பயணம் தேவையா என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னைவிட இந்தப் பிரச்சினை மிக முக்கியமானது. ஆகவே இதைச் செய்ய வேண்டும் என்றார். அது சரியாக போய்விட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்கு பதிலாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பேசியிருக்கிறாரே. அடடா எத்தனை பேர் ஹிந்தியை எதிர்த்து எத்தனை பேர் தங்கள் தேக்கு மர தேகத்தை தீக்கு இரையாக்கிக் கொண்டனர். "ஹிந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்று தங்கள் இன்னுயிரை மாய்த்திருக்கிறார்கள். நமக்கும் இது சரியான தருணம். இந்தத் தலைவரின் காலத்தில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அன்புக்குரிய மக்களே, போராடுவதற்கு தயாராகுங்கள். மக்கள் சக்தி முன் யாரும் நிற்க முடியாது.
முனைவர் துரை. சந்திரசேகரன்
-----------------------------------------------------------------------
புதுக்கோட்டை
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மாவட்ட தலைவர் மு.அறிவொளி தலைமையில் நடைபெற்றது. அறந்தாங்கி மாவட்ட தலைவர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
மண்டல செயலாளர் சு.தேன்மொழி, அறந்தாங்கி மாவட்ட செயலாளர் க.முத்து, கழக காப்பாளர் இர.புட்பநாதன், பொதுக்குழு உறுப்பினர் இரா.சரசுவதி, மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, அறந்தாங்கி மாவட்ட அமைப்பாளர் தங்கராசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் வெ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மாநில ப.க.துணைத்தலைவர் பொன்னமராவதி அ.சரவணன் இணைப்புரை வழங்கினார்.
-----------------------------------------------------------------------
நமக்கெல்லாம் ஆசிரியர்தான் துணை!
புதுக்கோட்டையில் நடந்த பரப்புரை பெரும் பயணக் கூட்டத்தில் தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் இரா.சு.கவிதைப்பித்தன் பேசியதாவது:
இப்படி ஓர் எளிமையான தலைவரை இந்தியாவில் பார்க்க முடியுமா? அவரது நுட்பம் தெரியும், திட்பம் தெரியும், அவரது நுண்மான் நுழைபுலம் தெரியும். இங்கே ம.தி.மு.க. தோழர் பேசும்போது நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் என்று சொன்னார். ஆனால் அதைவிட நமக்கெல்லாம் ஆசிரியர் தான் துணையாய் இருக்கிறார்.
சுயமரியாதைச் சிப்பாய்களில் ஒருவரான அய்யா புட்ப நாதன் அவர்கள் மேடைக்கு வர முடியாத நிலை கருதி, ஆசிரியர் அவர்களே கீழே இறங்கிப் போய் அவரைப் பெருமைப் படுத்தினார். உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், இப்படி ஒரு எளிமையான தலைவரை இந்தியாவில் எங்கேனும் பார்க்க முடியுமா? (கைதட்டல்கள்) தந்தை பெரியார் வழிநடத்திய இயக்கத்தை, அய்யாவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையாருக்குப் பிறகு, பொறுப்பேற்று 45 ஆண்டுகள் கட்டுப்பாடு குலையாமல் கருஞ்சட்டை இராணுவத்தை நடத்தி வருகிறார். மானமிகு ஆசிரியர் அவர்களே, நீங்கள் வாழுகிற காலத்தில் நாங்கள் வாழுகிறோம் என்பதுதான் எங்களுக்கு உச்சப் பெருமை. திராவிட வீரன், அஞ்சுகத்தாயின் பேரன் நமது முதலமைச்சரின் கொள்கைப் பாதுகாப்புக் கவசம் ஆசிரியர் அய்யா அவர்கள்தான். அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.
நமது முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும் ஆசிரியர் தான் துணை என்பதை இங்கே பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். எப்படிப்பட்ட கொடுமையை தாங்கியவர், எப்படியெல்லாம் இழிவை சுமந்திருப்பார். இன்றைக்கு இன்னும் சில மாதங்களில் 90 வயதை எட்டவுள்ள நிலையில் தொடர்ந்து 21 நாள்கள் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளாரே எப்படி சாத்தியம் ஆகிறது.
இந்த இனத்தின் நன்மைக்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
1980 ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் தான் முதல்முதலாக என்னை கலைஞர் கையில் ஒப்படைத்தார்கள்.
அதை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------
புதுக்கோட்டை பரப்புரை கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திருக்கோகர்ணம சந்திப்பில் மண்டல தலைவர் பெ.ராவணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் பெ.வீரப்பன், தி.மு.க.மாநில இலக்கிய அணி செயலாளர் கவிச்சுடர் கவிதைப் பித்தன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், தி.மு.க. தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் த.சந்திரசேகரன், அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மாநில ப.க.துணைத்தலைவர் பொன்னமராவதி அ.சரவணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் வெ.ஆசைத்தம்பி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, சி.பி.அய். பொறுப்பாளர் சுந்தர்ராஜன், வி.சி.க.பொறுப்பாளர் கலைமுரசு, வி.சி.க.மாவட்ட பொருளாளர் பாவாணர், இ.யூ.முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகமது அஷ்ரப் அலி, புதுக்கோட்டை நகர தலைவர் கண்ணன், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தர்மசேகர், கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்ட கழக செயலாளர் பெ.வீரப்பன் நன்றி கூறினார்.
உரிமையோடு பேசக் கூடிய தலைவர்
தஞ்சாவூர் பரப்புரை கூட்டத்தில் மாநகர மேயர் சண்.இராமநாதன் பேசியதாவது:
இந்த தஞ்சாவூர் திராவிட இயக்கத்தின் முக்கிய நகரம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தி.மு.கழகம் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் இந்த திராவிட இயக்கம். அதேபோல் வரும் 2024 - தேர்தலில் மீண்டும் ஆசிரியர் அவர்கள் பெரிய வெற்றியை பெற்றுத்தர போகிறீர்கள். நீங்களும், எங்கள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இணைபிரியாத கணவன் - மனைவி போல பிரியாமல் இருக்க கூடியவர்கள் என்று நாங்கள் அறிவோம். நாங்கள் உங்களை காதலிக்கிறோம்.(சிரிப்பு, கைதட்டல்)
கடந்த மேயர் தேர்தலில் தஞ்சையில் ஒரு ஆரிய மாயையை உருவாக்கி விட்டார்களே என்ற வருத்தம் உங்களுக்கு எப்படி இருந்ததோ அதேபோல் எங்களுக்கும் இருந்தது. இன்றைக்கு அந்த நிலையை மாற்றி உள்ளோம். இனி வரும் காலங்களில் இதேபோல் தொடர்ந்து வெற்றியை குவிப்போம் என்பதை ஆசிரியர் அய்யா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மேடையில் இன்னுமொரு வேண்டுகோளையும் அய்யா அவர்களிடத்தில் வைக்க விரும்புகிறேன். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணியை வழிநடத்துவதோடு அகில இந்திய அளவிலும் அதற்கான முயற்சியை நீங்கள் செய்து தருவீர்கள். அதற்கு கூர் தீட்டும் வேலையை தொடங்கி விட்டீர்கள். எங்களுடைய இன்னொரு வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் ஒருவர்தான் எங்கள் தலைவர் தளபதி அவர்களிடத்தில் உரிமையோடு பேசக்கூடியவர். அதாவது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்தது போதும் அடுத்து இந்திய நாட்டின் பிரதமராக வர நீங்கள் வர வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment