மார்ச் 8: பெண்களின் புரட்சி நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

மார்ச் 8: பெண்களின் புரட்சி நாள்

பெண் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகவும் பசி, பட்டினி, ஓய்வின்மை, வாக்குரிமை, கூலி உயர்வு, எட்டு மணி நேர வேலை, வேலை நிரந்தரம், பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை, ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும்  என பல கோரிக்கைகளை வலியுறுத்தி வீதியில் இறங்கி போர் குணமுள்ள ஓர் ஆர்ப்பாட்டத்தை தன்னெழுச்சியோடு நடத்தினர். நடத்திய நாள் மார்ச் 8.  போராட்டத்தின் இறுதியாய் கிடைத்த வெற்றியையே உலக மகளிர் தினம் என்கிறோம்.

உலகெங்கும் நிகழ்ந்த தொழில் புரட்சி பெரிய பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே கூரையின்கீழ் பணிபுரியும் சூழல் வர, புதிய புதிய நகரங்கள் தோன்றின. ஆண்களோடு பெண்களும் தொழிற்சாலைகளில் பணிபுரிய வந்தனர்.  பெண்கள் ஆண்களைவிடவும் அதிக உழைப்பைத் தந்தாலும், ஆண் களுக்குத் தருவதைப் போன்ற ஊதியம் தரப்படவில்லை. சம உரிமையை போராடித்தான் பெற்றாக வேண்டும் என்பது பெண்களுக்குப் புரியத் தொடங்கியது.

இந்நிலையில் நியூயார்க் நகரின் ஆயத்த ஆடை தொழிற்சாலை மற்றும் ஜவுளித் தொழிற்சாலையைச் சார்ந்த பெண்களுக்கு, நாள்தோறும் 15 மணி நேர வேலை. வேலை செய்த பொருளுக்கு மட்டுமே கூலி.  ஊசி, நூல், மின்சாரம், வேலைக்குப் பயன்படுத்தும் நாற்காலி மற்றும் கைப் பெட்டிக்கும் தொழிலாளர்களே பணம் கட்ட வேண்டிய பரிதாப நிலை இருந்தது. வேலைக்குத் தாமதமாக வந்தால் அபராதம். கழிவறையில் சற்று அதிக நேரம் இருந்தாலும் அபராதம் என்ற நிலை இருந்தது.

பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்காக உலகம் முழுவதுக்குமான ஒரு நாளை மகளிர் நாளாகக் கொண்டாட வேண்டுமென்ற கருத்தை ஜெர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான கிளாரா ஜெட்கின் முதன் முதலில் தெரிவித்ததோடு, உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த நாளான மார்ச் 8ஆம் தேதியை பன்னாட்டு மகளிர் தினமாகக் கொண்டாடும் யோசனையையும் முன்வைத்தார்.

அந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து கலந்து கொண்ட அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். 1910ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் நடைபெற்ற, பன்னாட்டு சோசலிசப் பெண்கள் மாநாட்டில், மார்ச் 8ஆம் நாளினை உலக மகளிர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மார்ச் 8 உலக மகளிர் தினமாக உருவானது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பன்னாட்டு பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராய் உயர்ந்தவர் கிளாரா. பன்மொழிப் புலமையும், ஆழ்ந்த அரசியல் அறிவும், இலக்கிய ஞானமும் உடையவர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஓசிப் ஜெட்கினை மணந்தார்.

தனது கணவரிடமிருந்து மார்க்சியத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் கற்றுணர்ந்து மார்க்சியவாதியாக தன்னை மாற்றிக் கொண்டார். ஜெர்மனியில் பொதுவுடமைக் கட்சியை உருவாக்கிய முக்கியமானவர்களில் கிளாரா ஜெட்கினும் ஒருவர். இருபத்தைந்து ஆண்டுகள் சமத்துவம் என்னும் இதழின் ஆசிரியராய் இருந்தவர். உலக யுத்தத்தின் வெறியாட்டத்தையும், ஏகாதியத்தியத்தையும் துணிந்து எதிர்த்து, சிறைபட்டு இன்னலுக்கு ஆளானவர்.


No comments:

Post a Comment